Tuesday, April 24, 2012

மதுரையில் கோலாகலமாக துவங்கியது சித்திரைத் திருவிழா


மதுரை: மதுரை சித்திரைத் திருவிழா, நேற்று மீனாட்சியம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியாக ஏப்.,30ல் பட்டாபிஷேகம், மே 2ல் திருக்கல்யாணம், மே 6ல் ஆற்றில் அழகர் இறங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. நேற்று காலை ஆடி வீதிகள் வழியாக, சுவாமி சன்னிதி கொடி மரத்திற்கு யானை மீது கொடி கொண்டுவரப்பட்டது. பச்சை பட்டில் அம்மனும், வெண்பட்டில் சுவாமியும் வீற்றிருக்க, மோகன் பட்டர் தலைமையில் ரிஷப யாகம் மற்றும் பூஜைகள் நடந்தன. காலை 9.46 மணிக்கு கொடியேற்றப்பட்டு, அபிஷேகம், தீபாராதனைகள் நடத்தப்பட்டன. வேத மந்திரங்கள், திருமுறை பாராயணம் பாடப்பட்டது. கொடியேற்றத்தை முன்னிட்டு, 1.50 லட்ச ரூபாய் செலவில் கம்பத்தடி மண்டபம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பின், கோவில் இரண்டாம் பிரகாரத்தில் அம்மனும், சுவாமியும் வலம் வந்து, குலாலர் மண்டபத்தில் எழுந்தருளினர். இரவு 7 மணிக்கு மேல் சுவாமி கற்பகவிருட்சம் வாகனத்திலும், அம்மன் சிம்ம வாகனத்திலும் மாசிவீதிகளில் உலா வந்தனர்.

மே 2ல் திருக்கல்யாணம் : ஏப்.,30 இரவு 7.30 மணி முதல் 7.56 மணிக்குள் அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. அம்மனுக்கு கிரீடம் சாற்றி, செங்கோல் கொடுத்த பின், அறங்காவலர் குழுத் தலைவர் கருமுத்து கண்ணன், அம்மனிடமிருந்து செங்கோலை பெற்று, அம்மன் சன்னிதியிலிருந்து புறப்பட்டு, சுவாமி சன்னிதி இரண்டாம் பிரகாரம் வழியாக கொண்டு வந்து மீண்டும் அம்மனிடம் வழங்குவார். மே 1ல் மதுரை வடக்குமாசிவீதி, கீழமாசிவீதி சந்திப்பில், லாலாஸ்ரீ ரங்கசத்திரம் திருக்கண் மண்டபத்தில் அம்மனின் திக்குவிஜயம் நடக்கிறது.

மே 2ல் காலை 9.17 மணி முதல் 9.41 மணிக்குள் திருக்கல்யாணம் நடக்கிறது. அன்றிரவு அம்மன் புஷ்ப பல்லக்கில் மாசி வீதிகளில் உலா வருகிறார். மே 3ல் தேரோட்டமும், மே 5ல் மதுரை மூன்றுமாவடியில் கள்ளழகரை வரவேற்கும் எதிர்சேவை நடக்கிறது. மே 6 காலை 6 மணிக்குள் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளுகிறார்.

கருமுத்து கண்ணன் கூறியதாவது : இந்தாண்டு சிறப்பம்சமாக, திருக்கல்யாண மண்டபம் 30 லட்ச ரூபாயில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு பழைய கல் மண்டபம் போன்று தோற்றமளிக்கும். திருக்கல்யாணத்தை 15 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்களின் வசதிக்காக 100 டன் "ஏசி' வசதி செய்யப்படுகிறது. தற்போது சுவாமி சன்னிதியில் "ஏசி' வசதி உள்ளது போல், ஓரிரு நாட்களில் அம்மன் சன்னதியிலும் இவ்வசதி ஏற்படுத்தப்படும், என்றார். கோவில் நிர்வாக அதிகாரி ஜெயராமன் உடனிருந்தார்.

நன்றி: தினமலர்

0 comments:

Post a Comment