Sunday, April 8, 2012

'கர்ணன்' வசூல் சாதனையடுத்து 3டி-யில் 'வீரபாண்டிய கட்டபொம்மன்'


சிவாஜியின் 'கர்ணன்' படத்தை கிராபிக்ஸ், டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் புதுப்பித்து தமிழகமெங்கும் மீண்டும் ரிலீஸ் செய்துள்ளனர். இப்படம் 3-வது வாரமாக ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடுகிறது.

சென்னையில் சத்யம், சாந்தி, ஏ.வி.எம்.ராஜேஸ்வரி உள்ளிட்ட பல தியேட்டர்களில் அரங்கு நிறைந்த காட்சிகளாக இப்படம் ஓடுகிறது. சாந்தி தியேட்டர் நிர்வாகி கூறும்போது, 1964-ல் இதே தியேட்டரில் 'கர்ணன்' படத்தை வெளியிட்டு 100 நாட்கள் ஓடி வசூலான பணம் இப்போது ஒரு வாரத்தில் கிடைத்துள்ளது என்றார்.

தஞ்சை, சேலம், கோவை, நாகர்கோவில் என பல நகரங்களில் கர்ணன் படத்துக்கு ரசிகர்கள் திரள்கிறார்கள். மறு வெளியீட்டில் 'கர்ணன்' படத்தின் வசூல் ரூ.1 கோடியை தாண்டிச் செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் 25-வது நாள் வெற்றி விழாவை பிரமாண்டமாக கொண்டாட ஏற்பாடு செய்து வருவதாக சிவாஜி சமூகநல பேரவை தலைவர் சந்திரசேகரன் தெரிவித்தார்.

'கர்ணன்' படம் 1964-ம் ஆண்டு ஜனவரி 14-ந்தேதி பொங்கல் அன்று ரிலீசானது. இப்படத்தை ரூ.40 லட்சம் செலவில் பி.ஆர்.பங்கலு தயாரித்து இயக்கினார். சென்னையில் சாந்தி, பிரபாத், சயானி தியேட்டர்களில் 100 நாட்கள் ஓடியது.

மதுரையில் பெரிய தியேட்டரான தங்கத்தில் 100 நாட்கள் ஓடியது. ராஜஸ்தான், மைசூர், சேலத்தில் படப்பிடிப்புகள் நடத்தப்பட்டன. யுத்தகள காட்சிகள் தஞ்சை அரண்மனையில் படமாக்கப்பட்டது. படப்பிடிப்பு முடிந்ததும் படத்தில் பயன்படுத்தப்பட்ட ரதங்கள் தஞ்சை கோவிலுக்கு அன்பளிப்பாக அளிக்கப்பட்டன.

'கர்ணன்' வசூல் ஈட்டுவதை தொடர்ந்து சிவாஜியின் 'வீரபாண்டிய கட்டபொம்மன்' படத்தை '3டி' தொழில்நுட்பத்தில் தயார் செய்து மறு வெளியீடு செய்ய ஏற்பாடுகள் நடக்கிறது.

0 comments:

Post a Comment