Monday, April 23, 2012

சூரிய சக்தி மின்சாரத்தில் தமிழகமும், குஜராத்தும் வேறுபடுவது எங்கே?



சூரிய சக்தியில் மின்சாரம் தயாரிக்கும் நிறுவனங்களிடம் இருந்து மின்சாரத்தைப் பெற்றுக் கொள்ள, துணை மின் நிலையங்களை, குஜராத் மாநில அரசே அமைத்துக் கொடுக்கிறது. மற்ற மாநிலங்களில், இவ்வாறு செய்யாததால், சூரிய சக்தி மின்சார உற்பத்தியில் வெற்றி பெற முடியவில்லை.

எங்கே பிரச்னை?பெரும்பாலான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மிகவும் ஒதுக்குப்புறமான வறட்சியான பகுதிகளில் தான் தயாரிக்கப்படுகிறது.சூரிய சக்தி என்று எடுத்துக் கொண்டால், அதிக வெப்பமான, நகர்ப்புறத்தில் இருந்து மிகவும் தொலைவில் உள்ள, வறட்சியான கிராமப்புறங்களில் தயாரித்தால் பலன் கிடைக்கும். ஆனால், இவ்வாறு தயாரிக்கப்படும் மின்சாரத்தை, மின் வாரியத்துக்கு பகிர்மானம் செய்வது மிகப் பெரிய பிரச்னை.தமிழகம் உட்பட பல மாநிலங்களில், அதிக வெப்பக் கதிர்வீச்சு உள்ள பகுதிகளில், சூரிய சக்தி மின்சாரத்தை நிறுவ, தனியார் நிறுவனங்கள் தயாராக உள்ளன. ஆனால், இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை பெற்றுக் கொள்வதற்கு, துணை நிலையங்களை அமைத்துத் தர, மாநில அரசுகள் முன்வருவதில்லை.

குஜராத் மாநிலத்தை எடுத்துக் கொண்டால், ஆள் நடமாட்டம் இல்லாத, சாலை இணைப்பு இல்லாத வறட்சியான சாரங்கா கிராமத்தில், சூரிய சக்தி பூங்காவை உருவாக்கியது.இங்கு, தனியார் நிறுவனங்கள் சூரிய சக்தி மின் உற்பத்தித் திட்டத்தை அமைத்துக் கொள்ள நிலம் ஒதுக்கப்பட்டது. அதுமட்டுமன்றி, அங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தைக் கொண்டு வருவதற்கான துணை மின் நிலையங்களையும் அமைத்தது.

மின் பகிர்மானம்:குஜராத்தில், 1,149 துணை மின் நிலையங்கள் உள்ளன. ஆண்டுக்கு நூறு துணை மின் நிலையங்களை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், மின் பகிர்மானம் மற்றும் வினியோகத்தில் பிரச்னை இல்லை.சூரிய சக்தி மின்சாரத்தைக் கொண்டு வர, 11 கே.வி.ஏ., ஒன்று, 66 கே.வி.ஏ., ஒன்று, 220 கே.வி.ஏ., ஒன்று என, துணை மின் நிலையங்கள் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ளன.இதற்காக, குஜராத் அரசு, 400 கோடி ரூபாய்க்கு மேல் செலவழித்துள்ளது. இதுவே, சூரிய சக்தி மின்சாரத் திட்டம், அம்மாநிலத்தில் வெற்றி பெற்றதற்குகாரணமாகும்.

இதேபோல, தமிழக அரசும் வசதிகளை செய்து கொடுத்தால், பல நிறுவனங்கள் சூரிய சக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்ய முன்வரும். ஓராண்டில், 600 மெகாவாட் சூரிய சக்தி மின்சார உற்பத்தியை, குஜராத்தில் துவக்க முடியும் போது, தமிழகத்திலும் சாத்தியமானது தான்.ஆனால், காற்றாலை மூலம் பெறப்படும் மின்சாரத்தையே, தமிழகத்தில் சரியாகப் பயன்படுத்திக் கொள்வதில்லை என்ற புகார் உள்ளது.அதே நேரத்தில், குஜராத் மாநிலம், காற்றாலை மின்சாரத்தையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வதில்முன்னிலை வகிக்கிறது.

நன்றி: தினமலர்

0 comments:

Post a Comment