Monday, April 23, 2012

மை - சினிமா விமர்சனம்

சென்ற வாரம் வெளிவந்த படங்களிலேயே பார்க்கக் கூடியதாக இருப்பது இது ஒன்றுதான்..! 

சுனாமி சுப்பு. பகுதி நேர அரசியல் பேச்சாளன். கூட்டங்கள் இல்லாத நேரத்தில் நண்பர்களுடன் சேர்ந்து கொள்ளையடிக்கும் பகுதி நேர திருடன். திருடியவைகளை மார்க்கெட்டில் பகிரங்கமாக விற்பனை செய்யும் அளவுக்கு தில்லாலங்கடி திருடன்..! அவனது மேடை பேச்சுக்காக, அவனை சப்போர்ட் செய்யும் ஆளும்கட்சி..! இவனுக்குள்ளும் ஒரு காதல். சிறுவயது முதலேயே வீட்டுக்கு அருகில் இருந்த பானுமதி மீது ஈர்ப்பு.. அவளோ சின்ன லோக்கல் டிவிக்கு ஓனர்..! சமூக விழிப்புணர்வு மிக்க நிகழ்ச்சிகளைத்தான் ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்பதில் கொள்கைக் குன்றாக இருப்பவள். தன் மீது ஒரு தலைக் காதலாக இருக்கும் சுப்பு, தனது அரசியல் மற்றும் திருட்டு வேலைகளைக் கைவிட்டு யோக்கியமாக இருந்தால் மட்டுமே தன் கழுத்தில் தாலி கட்ட முடியும் என்கிறாள் பானுமதி.. சுப்பு எதைத் தேர்ந்தெடுத்தான் என்பதுதான் மிச்ச மீதிக் கதை..!


விமல் நடித்திருக்க வேண்டிய படம். நடித்திருந்தால் ஹிட்டாக வாய்ப்பு உண்டு என்று அடித்துச் சொல்லலாம்..! ஆனால் இதில் சுப்புவாக விஷ்ணுப்பிரியன்..! ரொம்ப அலட்டல் இல்லை..! அரசியல் பேச்சில் ஏற்ற இறக்கமும், நடிப்பும் அவசியம். சுத்தமாக இல்லை..! அனாவசியமாக கத்திக் கூப்பாடெல்லாம் போடாமல் இயல்பான பேச்சை இயக்குநர் அனுமதித்திருப்பதால், விஷ்ணுப்பிரியனின் நடிப்பெல்லாம் ஒரு பெரிய விஷயமாக தெரியவில்லை..! 

பானுமதியாக ஸ்வேதாபாசு..! கேரளத்து அழகி என்பது மட்டும் தெரிகிறது..! அம்மணியின் சினிமா ஜாதகம் சரிவரத் தெரியவில்லை. தேடிக் கொண்டிருக்கிறோம்..! வேலூர் கோட்டை மதில் சுவரில் விஷ்ணுவுக்கு கொடுக்கும் அட்வைஸின்போதுதான் பாப்பாவை மனசுக்குள் இன்னும் அழகாகப் பிடிக்கிறது..!  

சுனாமியே வரும்.. தீப்பொறியே வரும் என்று பில்டப்பை கொடுத்துவிட்டு சாதாரணமாக பேச வைத்திருக்கிறார்கள். நல்ல எழுத்தாளர் கூடவா வசனம் எழுத கிடைக்கவில்லை..!? இடைவேளையின்போது ஸ்வேதா பாசு பேசும் வசனமும், ஜெயப்பிரகாஷ் அள்ளி விடும் அரசியல் ராஜதந்திரங்களும் மட்டுமே அசத்தல்..!

ஜெயப்பிரகாஷ்.. மனிதர் எந்த வேடம் கொடுத்தாலும் அசத்துகிறார்..! வில்லன்களுக்கே உரித்தான தனி நடிப்பு அண்ணனிடம் நிறையவே உள்ளது. வார்டு கவுன்சிலர் தேர்தலில் தோற்றுப் போகும் முன்னாள் கவுன்சிலரை செருப்பால் அடித்துவிட்டு திட்டும், அந்த 45 செகண்ட்டுகள் கொண்ட காட்சியே சாட்சி..!

ரவுடிகளை காதலிக்கும் பெண்கள் அல்லது அவர்களைத் திருத்த முயலும் பெண்கள் வரிசையில் இந்தப் படமும் இடம் பிடித்திருக்கிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாணியில் திரைக்கதை எழுதி கொண்டு வருகிறார்கள். இதில் இடைவேளைக்கு பின்பு திரைக்கதையில் கூட்டியிருக்கும் வேகம்தான் படத்தை ரசிக்க வைக்கிறது..!

இசையமைப்பாளரும், ஒளிப்பதிவாளரும் படத்தில் இருக்கிறார்கள் என்பது தெரிகிறது..! தேவதை என்ற பாடல் மட்டுமே  கேட்கும்படியாக இருக்கிறது.. பாடல் காட்சிகளில் கை, கால்களை அசைத்து கொடுமை செய்வது இன்னும் எத்தனை வருடங்கள் தொடரும் என்று தெரியவில்லை..!

கதாநாயகிக்குள், நாயகன் மீதான காதல் வரக் காரணமான அந்த மனநோயாளியைக் காப்பாற்றும் காட்சியில் அழுத்தம் உண்டு.. யதார்த்தம் நிறைய..! நாயகிக்காக சுப்பு இதனை நிறைவேற்றிய பின்பு ஹீரோயின் சுப்பிவிடம் கேட்கும் காரணங்களும், அட்வைஸ்களும்தான் பிற்பாதி கதை என்பதால், இந்த இடத்தில் இயக்குநரின் இயக்கத் திறமை பாராட்டுக்குரியது..!


செங்கல் சூளைக்குள் கொலை செய்துவிட்டு தப்பிக்கலாம் என்று நினைப்பது ஒருவிதத்தில் சரி என்றாலும், காணாமல் போனவரைத் தேடும் முயற்சியும், கட்சிக்குள் என்ன நடந்திருக்கும் என்பதையும் தொடராமலேயே சென்றிருப்பது சட்டப்படி லாஜிக் குற்றம்தான் யுவர் ஆனர்..! கிளைமாக்ஸில் ஏற்படும் அந்த டிவிஸ்ட் மக்கள் எதிர்பார்க்காததுதான்..! ஆனால் அழுத்தமான காரணமும், காட்சியாகவும் இல்லை என்பதில் சிறு ஏமாற்றம்..!

ஆளும் கட்சி கவுன்சிலர்கள் 20 பேர்.. எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் 20 பேர் என்ற திரிசங்கு சொர்க்க நிலையில் இருக்கும் வேலூர் மாநகராட்சியின் வருட மாமூல் கணக்கை அள்ளிவீசும் சுப்பு, அதை அள்ளாமலா இருக்கப் போகிறார்..? அந்த நினைப்பினால்தானே மேயர் பதவியை தன்னிடம் கொடு என்று கேட்கிறார். பின்பு இவர் எப்படி நல்லவராவார்..? போலீஸாரின் ஆசியுடன் திருட்டு.. கட்சிக்காரர்களின் உதவியுடன் கேஸில் இருந்து தப்பிப்பது..! காதலியின் அப்பா மகள் மேல் கரிசனமாக இருப்பது..! இப்படியொரு ரவுடிதான் தனக்கு மருமகன் என்று அவர் நினைத்திருப்பது..! ஓட்டு போடாவிட்டால் வீட்டில் திருட்டு நடக்கும் என்று மக்களை பயமுறுத்துவது.. ஓட்டுக்கள் இதனாலேயே சுப்புவுக்கு விழுவது என்று பல ஓட்டைகளை வைத்துக் கொண்டாலும் யாரும் கேள்வியெழுப்பாமல் பார்த்துக் கொண்டு படத்தை முடித்திருக்கிறார் இயக்குநர். 

இந்த வாரக் கோட்டா ஒரு படம்தான் என்றால் கண்ணை மூடிக்கிட்டு தியேட்டருக்கு போங்க..!

0 comments:

Post a Comment