Sunday, April 29, 2012

அதிக செல்போன்களை விற்பனை செய்து சர்வதேச அளவில் முதன்முறையாக முதலிடத்தை பிடித்துள்ளது சாம்சங் நிறுவனம்

 
சியோல் : அதிக செல்போன்களை விற்பனை செய்து சர்வதேச அளவில் முதன்முறையாக முதலிடத்தை பிடித்துள்ளது சாம்சங் நிறுவனம். உலகம் முழுக்க செல்போன்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் நோக்கியா, சாம்சாங் போன்ற முன்னணி செல்போன் நிறுவனங்கள் போட்டி போட்டிக்கொண்டு பல புதுமைகளை புகுத்தி, புது ரக செல்போன்களை விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஜனவரி முதல் மார்ச் மாதத்திற்கான செல்போன் விற்பனையில் எந்த நிறுவனம் அதிக செல்போன்களை விற்பனை செய்துள்ளதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

இதில் கடந்த 3 மாதங்களில் மட்டும் சாம்சங் நிறுவனம் 93.5 மில்லியன் செல்போன்களை விற்பனை செய்துள்ளது. நோக்கியா நிறுவனம் 82.7 மில்லியன் செல்போன்களை விற்பனை செய்து இருக்கிறது. இதன்மூலம் கடந்த 1998ம் ஆண்டு முதல் தொடர்ந்து 14 ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்து வந்த நோக்கியா நிறுவனத்தை பின்னுக்கு தள்ளிவிட்டு முதலிடத்தை பிடித்து இருக்கிறது சாம்சங்.

சாம்சங் நிறுவனத்தின் விற்பனையை கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ஒப்பிடும் போது 36 சதவீதம் அதிகமாகும். இதன் மொத்த நிகரலாபம் ரூ23,400 கோடி ஆகும். இதுபோல் ஸ்மார்ட்போன் விற்பனையில் ஆப்பிள் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்துள்ளது சாம்சங். சாம்சங்கின் ஸ்மார்ட்போன் மற்றும் கேலக்ஸி ‌மொபைல்கள் அதிகளவு விற்பனையானதே அந்த நிறுவனம் முதலிடம் வந்ததற்கான முக்கிய காரணம்.

நன்றி: தினமலர்

0 comments:

Post a Comment