Tuesday, April 24, 2012

கலெக்டருக்கு "சட்டை' பரிசளித்த மாற்றுத் திறனாளி

திருப்பூர்: "வாழ்ந்து காட்டுவோம்' திட்டத்தில் பயன் பெற்ற மாற்றுத் திறனாளி ஒருவர், தான் தைத்த முதல் சட்டையை, திருப்பூர் கலெக்டருக்கு பரிசளித்தார்.

பல்லடம், அனுப்பட்டியை சேர்ந்த சவுந்திரராஜன் மகன் சுரேஷ்குமார்,34. போலியோ நோயால் ஒரு கால் செயல் இழந்தவர். சில மாதங்களுக்கு முன், "வாழ்ந்து காட்டுவோம்' திட்டத்தில், மின் மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வழங்கக் கேட்டு, அவர் மனு அளித்தார். மனு கொடுத்த அன்றே, 8,000 ரூபாய் மதிப்பிலான தையல் இயந்திரம், மாவட்ட நிர்வாகம் மூலம் இலவசமாக வழங்கப்பட்டது. மேலும், இலவச தையல் பயிற்சியும் அளிக்கப்பட்டது.

மனுநீதி நாள்: நேற்று காலை, மனுநீதி நாள் கூட்டம் நடந்தது. அரங்குக்கு சவுந்திரராஜன் வந்தார். கலெக்டர் மதிவாணனிடம், தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட அவர், "சார், நான் உங்களுக்கு ஒரு பரிசு கொண்டு வந்துள்ளேன்' என்றார். என்ன என்று கேட்ட போது, புதிதாக தைத்த முழுக்கை சட்டை ஒன்றை கலெக்டரிடம் அளித்தார். இது எதற்கு என கலெக்டர் கேட்ட போது, "சார், தையல் மெஷின் கேட்டு நான் மனு கொடுத்த அன்றே, எனக்கு மெஷின் வழங்கினீர்கள். அதை வழங்கும்போது, "எனக்கு ஒரு சர்ட் தைத்துத் தருவாயா?' என கேட்டீர்கள். நீங்கள் எனக்கு அளித்த தையல் மெஷினில், முதல் உடையாக உங்களுக்கு இந்த சட்டையை தைத்துக் கொண்டு வந்தேன்' என்று, நெகிழ்ச்சியாக கூறினார். அவர் வழங்கிய சட்டையை, ஆவலுடன் வாங்கிப் பார்த்த கலெக்டர், "எப்படி கச்சிதமாக என் அளவுக்கு தைக்க முடிந்தது' என்றபோது, "எனது கண்களால், உங்கள் உடல் அளவை பார்த்து, மனதில் பதிந்ததை வைத்து தைத்தேன்' என்றார்.

பரிசு: அதை பெற்றுக்கொண்ட கலெக்டர், பர்சில் இருந்து, 500 ரூபாயை எடுத்து சுரேஷ்குமாருக்கு வழங்கினார். பணத்தை பெற மறுத்தபோது, "இது, சட்டைக்கு பணம் அல்ல; உங்கள் முயற்சிக்கு என் பரிசு' என்று கூறி, அவர் பாக்கெட்டில் திணித்தார்.

0 comments:

Post a Comment