Thursday, March 8, 2012

லிம்கா சாதனை முயற்சி: ஒரே நேரத்தில் 1,150 பேர் உடல் உறுப்பு தானம்

நன்றி: தினமலர்

புதுச்சேரி:ஜிப்மர் மருத்துவமனையில், கல்லூரி மாணவர்கள் 1,150 பேர் நேற்று ஒரே நேரத்தில், உடல் உறுப்பு தானம் செய்வதற்கான படிவத்தில் கையெழுத்திட்டனர்.




இறந்த பின், தீ மற்றும் மண்ணுக்கு இரையாகும் மனித உறுப்புகளை, தானம் செய்வதன் மூலம், உயிருடன் இருக்கும் சிலரின் வாழ்வில் ஒளியேற்றவும், உயிரூட்டவும் முடியும். மக்கள் தொகை மிகுந்த இந்தியாவில், இது பற்றிய விழிப்புணர்வு மிகவும் குறைவாகவே உள்ளது. படித்தவர்கள் கூட உயிருடன் இருக்கும் போது ரத்த தானமும், இறந்த பிறகு உடல் உறுப்பு தானமும் செய்யவும் முன் வருவதில்லை.

இதுகுறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்த, புதுச்சேரியில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த, ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் "கிராத்தியாஸ்' சமூக அமைப்பு சார்பில், நேற்று ஜிப்மரில் ஒன்று கூடினர். உடல் உறுப்புகளை தானம் செய்வதன் மூலம், மரண வாசலில் நின்று கொண்டு உயிருக்கு போராடும் ஒருவரது உயிரையும், அவரது குடும்பத்தையும் காப்பாற்ற முடியும் என, அனைவரும் ஒரே குரலில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

தங்கள் மகன் இதயேந்திரன் உயிர் பிரிந்தபோது, சமயோசிதமாக செயல்பட்டு, உடல் உறுப்பு தானத்திற்கு வழிகாட்டிய டாக்டர் அசோகன்-புஞ்பாஞ்சலி தம்பதியினர், உடல் உறுப்பு தானம் குறித்து மாணவர்களுக்கு விளக்கமளித்தனர்.முகாமில், 1,150 மாணவர்கள் உடல் உறுப்பு தான படிவத்தில் கையெழுத்திட்டனர். அவர்களுக்கு, கவர்னர் இக்பால் சிங் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில், லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ., ஜிப்மர் இயக்குனர் ரவிக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அமெரிக்காவில், 765 பேர் உடல் உறுப்பு தானம் செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். இந்திய சாதனை புத்தகமான லிம்காவில், உடல் உறுப்பு தானம் பற்றி இதுவரை இடம் பெறவில்லை. எனவே, ஜிப்மரில் 1,150 மாணவர்கள் ஒன்று திரண்டு உடல் உறுப்பு தானம் செய்துள்ளது, லிம்கா சாதனைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கின்னஸ் சாதனைக்கு அனுப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது.

புதுச்சேரி கவர்னர் இக்பால் சிங்: "உடல் உறுப்பு தானத்திற்கான சட்ட விதிகளை எளிமைப்படுத்தி, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்'

0 comments:

Post a Comment