Sunday, March 18, 2012

கடற்பாசியில் இருந்து "கரன்ட்': தமிழக அரசு கவனம் செலுத்துமா

 
தமிழகத்தில் 10 மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை ஏற்படும் மின்வெட்டு மக்களையும், தொழில்களையும் பெரிதும் பாதித்துள்ளது. மாநிலத்தில் தற்போதுள்ள 16,990 மெகாவாட் உற்பத்தியில் 6,761 மெகாவாட் மரபுசாரா எரிசக்தி. இதில் காற்றாலை, சூரியமின்சக்தி மற்றும் பயோமாஸ் மின்சக்தியும் அடங்கும்.

காற்றாலை மின்சக்தி தமிழகத்தில் 40 சதவீதத்திற்கும் குறைவாக கிடைக்கிறது. ஆண்டிற்கு 8 மாதங்கள் தான் தேவையான காற்றின் வேகம் உள்ளது. இதனால் காற்றாலை மின்உற்பத்தி திறன் 13,000 மெகாவாட் மாத்திரமே உள்ளது. மின்விநியோகத்தில் நஷ்டம் மற்றும் இயந்திரக்கோளாறு, அணைகளில் குறைந்த அளவு நீர் போன்ற காரணங்களால், சுமார் 8,500 முதல் 9,000 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்ய முடிகிறது. தற்போது சுமார் 2,500 மெகாவாட் பற்றாக்குறையாக உள்ளது. மாநிலம் முழுதும் ஆண்டிற்கு 8 சதவீத மின் தேவை அதிகரித்து வருகிறது. இதனால் ஆண்டிற்கு 750 மெகாவாட் மின் தேவை கூடும். தற்போது நிறுவப்படும் மற்றும் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள மின்நிலையங்களால் ஆண்டு தோறும் அதிகரித்து வரும் மின்தேவையை ஈடு கட்ட முடியாது.

இப்பற்றாகுறையை தீர்க்க தமிழகஅரசு நிபுணர் குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்கிறார் வேதியியல் பொறியாளர் என்.எஸ். வெங்கட்ராமன். அவர் கூறிய ஆலோசனைகள் வருமாறு:

* கூடங்குளம் அணுமின்நிலையம் உடனே துவங்கப்பட்டு, அங்கும் கல்பாக்கம் அணுமின்நிலையத்திலும் இரு மடங்காவது உற்பத்தி திறனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* வடமாநிலத்தில் உள்ள தனியார் நிறுவனங்கள் தங்கள் தேவைக்காக ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா போன்ற நாடுகளில் உள்ள நிலக்கரி சுரங்கங்களை வாங்குவது போல், தமிழக அரசு வாங்க வேண்டும். அல்லது இங்கு உள்ள நிறுவனங்கள் வாங்க ஊக்குவிக்க வேண்டும்.

* தமிழகத்தில் நீண்ட அளவு கடற்பரப்பு உள்ளது. இங்குள்ள சீதோஷ்ணநிலையை பயன்படுத்தி கடற்பாசி உற்பத்தியை பெருக்கலாம். அதிலிருந்து எரிஎண்ணெய் (ஆல்கே பயோபியூயல்) தயாரிக்கலாம். பிற தாவரவிதைகளில் இருந்து கிடைக்கும் எண்ணெய்யை விட கடற்பாசியில் 50 சதவீதம் வரை அதிகம் கிடைக்கிறது. தமிழகஅரசு இதற்கு ஒரு அமைப்பை ஏற்படுத்தி கடற்பாசி எரிஎண்ணெயை வைத்து மிகப்பெரிய மின்நிலையங்கள் அமைக்க முடியும்.

*கடல் அலைகளில் இருந்து மின்உற்பத்தி செய்வதற்கான தொழில்நுட்பங்களை வெளிநாடுகளில் இருந்து பெறலாம்.

* தொழிற்சாலைகள் தாங்களே கூடுதல் மின்சாரம் தயாரிக்க ஊக்கத்தொகையும், வரிச்சலுகைகளையும் அரசு அளிக்கலாம். இங்குள்ள சுற்றுச்சூழலை பயன்படுத்தி பல்வேறு திட்டங்களை தமிழகஅரசு உடனடியாக மேற்கொண்டால் மின்பிரச்னையை சமாளிக்கலாம் என்கிறார் என்.எஸ்.வெங்கட்ராமன்.

நன்றி: தினமலர்

0 comments:

Post a Comment