Wednesday, March 14, 2012

விவகாரமான விஞ்ஞானி: இன்று ஐன்ஸ்டீன் பிறந்த தினம்

 
நாம் நண்பர்களுடன் உரையாடும் போது, யாராவது அறிவாக பேசினால்அவரைப் பார்த்து, "டே, நீ பெரிய ஐன்ஸ்டீனா' எனக் கேட்போம். "இயற்பியல் ' என நினைக்கும் போது அனைவரது மனதில் தோன்றும் ஒரு நபர் "ஐன்ஸ்டீன்'. 1879ம் ஆண்டு மார்ச் 14ல் ஜெர்மனியில் பிறந்த இவர், இயற்பியல் மீதுள்ள நாட்டத்தால் இயற்பியல் வல்லுனரானார். உலகப் புகழ் பெற்ற சார்புக் கோட்பாடு, பிரவுனியன் இயக்கம், ஒளி மின் விளைவை கண்டுபிடித்தது இவர் தான். இதற்காக, 1921ம் ஆண்டு கோட்பாட்டு இயற்பியலில் நோபல் பரிசு வழங்கப்பட்டது. 

E=mc2: ஐன்ஸ்டீன் கண்டுபிடிப்புகளில் இந்த ஆற்றல் சமன்பாடு முக்கியமானது. எந்த ஒரு பொருளும் ஓய்வு நிலையிலோ அல்லது இயங்கு நிலையிலோ இருக்கும் போது, அது குறிப்பிடத்தக்க ஆற்றலைக் கொண்டிருக்கும் என்பது இந்த சமன்பாடு. E=mc2 என்ற இந்த சமன்பாட்டை 1905ம் ஆண்டு வெளியிட்டார். 1905ம் ஆண்டு ஐன்ஸ்டீன் வெளியிட்ட மூன்று ஆய்வு முடிவுகளின் நூற்றாண்டு நிறைவை குறிக்கும் வகையில் 2005ம் ஆண்டு சர்வதேச இயற்பியல் ஆண்டாக கொண்டாடப்பட்டது.

பேச்சுகளும், சர்ச்சைகளும்: ஐன்ஸ்டீன் சிறந்த பேச்சாளராகவும், அவரது பேச்சு பல தரப்பினரிடையே எதிர்ப்பை கிளப்பும் வகையிலும் இருக்கும். ""பிரபஞ்சத்தை படைத்ததில் கடவுளுக்கு மாற்று ஏதேனும் உண்டா?'', ""மூன்றாம் உலகப் போரில் எந்த ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் என எனக்கு தெரியாது. ஆனால் நான்காம் உலகப் போரில் கம்புகளும், கற்களும் தான் பயன்படுத்தப்படும்'' என இவர் கூறிய வாக்கியங்கள் மத குருமார்கள், கடவுள் நம்பிக்கை உள்ளவர்களிடம் பெரும் எதிர்ப்பை கிளப்பியது.

மரணப் படுக்கையிலும் ஆய்வு: ஐன்ஸ்டீன், மரணப்படுக்கையில் இருக்கும் போதும், மனதில் ஏதாவது கணித - இயற்பியல் தொடர்புடைய சமன்பாட்டை சிந்தித்து கொண்டே இருந்தாராம். இவரது மரணத்திற்கு பின், தாமஸ் ஹார்வி என்ற ஆய்வாளர் இவருடைய மூளையை ஆய்விற்காக எடுத்து வைத்துக் கொண்டதாகவும், அது இன்று வரை அமெரிக்காவில் உள்ள பிரின்ஸ்டன் மருத்துவமனை பாத்தாலஜி (நோயியல்) பிரிவில் வைக்கப்பட்டிருப்பதாகவும் ஒரு தகவல் தெரிவிக்கிறது. இயற்பியல் மட்டுமல்லாமல், அறிவியலில் இவர் ஆற்றிய பங்கை சிறப்பிக்கும் வகையில் சென்ற நூற்றாண்டின் சிறந்த மனிதர் என "டைம்ஸ்' நாளிதழ் இவருக்கு பட்டம் அளித்தது. இவர் 1955ம் ஆண்டு ஏப்ரல் 18ல் அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள பிரின்ஸ்டன் எனும் இடத்தில் மரணமடைந்தார்.

நன்றி: தினமலர்

0 comments:

Post a Comment