Saturday, March 17, 2012

சேவற்கொடி – திரை விமர்சனம்


கன்னியாகுமரி, நாகர்கோவில், திருச்செந்தூர் ஆகிய தென்முனை ஊர்களை கதைக்களமாக்கிய படங்கள் மிகக்குறைவு. பாரதிராஜா தனது கடல்சார்ந்த படங்களில் முட்டம் கிராமத்தை தமிழ்ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஊராக்கிக் காட்டினார்.

பாரதிராஜாவின் கடற்சார்ந்த படங்களில் தமிழ் வாழ்க்கையின் அடையாளங்கள் கொட்டிக்கிடக்கும். சேவற்கொடி பட்த்திலும் தென்முனை வாழ்கையின் அடையாளங்களை அதன் யாதார்த்தம் மீறாமல் படமாக்கியிருகிறார்கள். இதில் பளிச்சென்று தெரியும் முதல் அம்சம், அப்பகுதியின் வட்டார வழக்கில் அத்தனை கதாபாத்திரங்களும் மிகத்துல்லியமாக பேசுவதைச் சொல்ல வேண்டும்!

திருசெந்தூரை ஒட்டிய இரண்டு கடற்கரை கிராமங்களில் வாழும் வெள்ளந்தியான மனிதர்களின் கனவு, காதல், வன்மம், ஆகிய மூன்று முக்கியமான உணர்ச்சிகளை பிண்ணிப் பிணைந்து அருமையான கலவையில் ஒரு ஒரு ஜனரஞ்சக த்ரில்லரை கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் சுப்ரமணியன்.


எப்படியும் ஒரு சுமை தூக்கும் வேனை சொந்தமாக வாங்கி அதற்கு முதலாளி ஆகிவிட வேண்டும் என்று நினைப்பவன் மீன்பிடி துறைமுகத்தில் வேன் டிரைவராக வேலை செய்யும் காளி. களியின் இந்தக் கனவை எந்தக் கஷ்டமும் இல்லாமல் நிறைவேற்ற வருகிறார் அவனது முதலாளி. “ உனது தங்கையை எனக்கு மணம் முடித்துக் கொடு.” என்கிறார்.  காளியோ பதிலுக்கு “ தங்கைய கட்டிகொடுத்தா எனக்கு என்ன கிடைக்கும்? ” என்கிறார். “நீ ஓட்டும் வண்டிக்கு நீதான் முதலாளி” என்கிறார். காளியின் தங்கையோ இந்த இரண்டாம்தார திருமணத்தில் விருப்பமில்லாமல், காதலனோடு ஊரைவிட்டே போய்விடுகிறார். இங்கேதான் திரைக்கதையின் மைய முடிச்சை மிக யதார்த்தமாக போடுகிறார் இயக்குனர். காளியின் தங்கை, அவளது காதலனோடு புறப்படும் கடைசி தருணத்தில் பேருந்து நிலையத்தில் அவர்களை எதிர்பாராமல் சந்திக்கும் நாயகன், காளி தங்கையின் காதலனை பார்த்து கையசைக்கிறான். ஒரேஒரு சந்திப்பில் உருவான நட்பின் நிமித்தம் வாழ்த்தும் சொல்கிறான் கதையின் நாயகன். இதைப் பார்க்கும் காளியின் உதவியாளன், அவர்களை ஊரைவிட்டு அப்புறப்படுத்தியதே நாயகன்தான் என்று சொல்லப்போய், மொத்த திரைக்கதையையும் தாங்கிப் பிடிக்கும் காளி- நாயகன் இடையிலான வன்மம் மிக அழுத்தமாக கருக்கொள்கிறது. அதன்பிறகு காளிக்கும் நாயகுனுக்கும் இடையிலான ஆடுபுளி ஆட்டத்தை உளவியல் அனுகுமுறையுடன் நகர்த்திச் செல்கிறார் இயக்குனர்.
இந்தப்படத்தில் நாம் காணும் காதாபாத்திரங்கள் மிக எளிய மனிதர்கள்தான். ஆனால் சகமனிதர்களை புரிந்து கொள்வதில் நாம் எத்தனை பல்கீனமானவர்களாக இருக்கிறோம் என்கிற இழையை வைத்துக்கொண்டு அற்புதாமான த்ரில்லரை தந்துவிடுகிறார் இயக்குனர்.

அதேபோல காட்சிகளை அனுகும் விதத்திலும், சின்னச் சின்ன வசனங்கள் வழியே திரைக்கதையின் அடுத்தடுத்த முடிச்சுக்களை லீட் செய்வதிலும் தனது குரு ராதாமோகனை விட ஆளுமை காட்டுகிறார் இயக்குனர். உதாரணத்துக்கு ... நாயகன் அருண் பாலஜியுடன் நாயகி பாமா பைக்கில் செல்வதை பார்த்துவிடுகிறார் நாயகியின் தந்தை. அப்பா தன்னை இன்னோரு ஆணுடன் செல்வதைப் பார்த்தை நாயகியும் கவனித்து விடுகிறார். ஆனால் இதைப்பற்றி மகளிடம் வாய்த்திறக்கவில்லை அவர். இதில் தவிப்புக்கு ஆளாகி அப்பாவிடமே “ ஏம்பா எதுவுமே கேட்க மாட்டேங்கிற?” எனக் கேட்கும் காட்சி உட்பட பல காட்சிகள், தமிழ்சினிமா ரசிகனுக்கு புத்துணர்ச்சி தரும் சொல்லமுறையில் காட்சிபடுத்தப்படிருகின்றன.

கதாபாத்திரங்களை அவற்றுக்கே உரிய நியா தர்க்கத்தோடு அணுகும் இயக்குனர்கள் மிகக்குறைவு. விருமாண்டியில் கமல் இதனை முயன்றிருப்பார். சேவற்கொடியில் அதையே சாதித்துக்காட்டியிருகும் சுப்ரமணியத்திடமிருந்து இன்னும் கணமான படங்களை எதிர்பார்க்கலாம்.

கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கும் அருண்பாலாஜி யை விட காளி கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கும் பவன் எல்லா காட்சியிலும் ஸ்கோர் செய்து விடுகிறார். நாயகி பாமா நம்பிக்கையூட்டும் எளிய அறிமுகம்.  ‘எங்கேயும் எப்போதும்’ பட இசையமைப்பாளர் சத்யா இசையமைப்பில் பாடல்கள் ஒன்று போலவே இருக்கிறது. சேவற்கொடியின் மிகச்சிறப்பான அம்சங்களில் செல்லதுரையின் ஒளிப்பதிவு கதைக்களத்துக்கே நம்மை அழைத்துச் செல்கிறது. படத்தில் பெரும் குறை சேவற்கொடி என்று தலைப்பு வைத்ததற்காக திருச்செந்தூர் திருவிழாவை கதையில் பயன்படுத்த நினைத்தது. இதற்காக மட்டும் இந்த தரமான படத்தை ஒட்டுமொத்தமாக புறகணிப்பது சரியல்ல!    சேவற்கொடி யதார்த்தக் கம்பத்தின் உச்சியில் பறக்கும் நெத்தியடி! 

0 comments:

Post a Comment