Saturday, March 10, 2012

வெற்றியாளர்களில் இரண்டு வகை…


உலகின் எதிர்காலப் பாதையைச் சரியாகக் கணித்து, அந்தத் திசையில் எல்லோரையும்விட வேகமாக ஓடி முதலிடத்தைப் பிடிப்பவர்கள் ஒரு வகை… அப்படி இல்லாமல் தானே ஒரு திசையைத் தீர்மானித்து, ஒட்டுமொத்த உலகத்தையும் அந்தத் திசையில் தன் பின்னால் ஓடிவரச் செய்பவர்கள் இரண்டாவது வகை…

பில்கேட்ஸ் இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்।’உழைக்க மட்டுமல்ல… உழைப்பை விட்டு விலகியும் இருக்கத் தெரிய-வேண்டும்…’ – இதுதான் பில்கேட்ஸ் நமக்கு உணர்த்தியிருக்கும் சமீபத்திய பாடம். அவருடைய ஒவ்வொரு நடவடிக்கையிலும் ஒரு பொருள் இருக்கிறது. ஒரு எம்.பி.ஏ. பாடத் திட்டத்துக்கு நிகரான வாழ்க்கைமுறை அவருடையது.

பள்ளிக்கூட காலத்திலேயே பில்கேட்ஸ் ‘பாட’த்தைத் தொடங்கிவிட்டார்। கொடுக்கிற பாடத் திட்டத்தைப் படிப்பதைவிட விருப்பமானதைப் படிப்பதுதான் சிறந்தது என்பதை நம்பினார்। மற்ற மாணவர்களிடமிருந்து வேறுபட்டு, படிப்பில் ஆர்வமில்லாமல் இருந்த பில்கேட்ஸை, சியாட்டில் நகரின் ‘லேக்சைட் (Lake Side) பள்ளி’யில் அவருடைய பெற்றோர் சேர்த்தனர். அங்கே பில்கேட்ஸை ஈர்த்தது ராட்சத சைஸில் பூதம் போல இருந்த கம்ப்யூட்டர்.
அந்தக் காலத்தில் கம்ப்யூட்டரை விஞ்ஞானக் கூடங்களில் மட்டுமே பயன்படுத்தினார்கள். இரவு பகலாக அதன் முன் தவமாகக் கிடந்த பில்கேட்ஸ், தானாகவே புத்தகங்களையும், கையேடுகளையும் படித்து கம்ப்யூட்டர் மொழியான ‘பேசிக்’கில் (BASIC) புரோகிராம் எழுதத் தொடங்கினார். அவருடைய பள்ளித் தோழர் பால் அலெனுக்கும் அதே ஆர்வம். திடீரென்று ஒருநாள், ‘இனிமேல் மாணவர்கள் கம்ப்யூட்டரை இலவசமாகப் பயன்படுத்த முடியாது’ என்ற அறிவிப்பு வந்தது. இருவரும் கவலைப்பட்டனர்.அந்தக் காலகட்டத்தில் கம்ப்யூட்டரை வாடகைக்கு எடுத்துப் பயன்படுத்தும் பழக்கம் அதிகமாக இருந்தது। ‘அந்த கம்ப்யூட்டரில் ஏதாவது குறைபாடு இருந்தால் வாடகை கொடுக்கத் தேவையில்லை’ என்று வாடகைக்குக் கொடுக்கும் நிறுவனங்கள் அறிவித்திருந்தன. குறைபாடுகள் அதிகம் இருக்கவும் செய்தன.
பில்கேட்ஸ் நினைத்திருந்தால் வாடகைக்கு கம்ப்யூட்டர் எடுத்து, அதில் உள்ள குறைபாடுகளைச் சொல்லி, வாடகை கட்டாமல் பயன்படுத்தியிருக்க முடியும்। ஆனால், அவர் கம்ப்யூட்டர் வாடகைக்குத் தரும் நிறுவனங்களில் ஒன்றான ‘கம்ப்யூட்டர் சென்டர் கார்ப்பரேஷனு’க்குச் சென்று அவர்கள் கம்ப்யூட்டரில் உள்ள குறைபாடுகளைக் கண்டுபிடித்துத் தருவதாக ஒப்பந்தம் செய்துகொண்டார். அதனால், அந்தக் குறைபாடுகள் நீக்கப்பட்டு, அவர்களுக்கு வாடகைப் பணம் பெருகியது. பில்கேட்ஸ் சம்பளமாகப் பெற்றுக்கொண்டது இலவசமாக கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் உரிமையை!

கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்துவதைவிட, புதிய திசையில் வாய்ப்பை உருவாக்கிக்கொள்ளும் கலை அவரிடம் நிறையவே இருந்தது। வாகனப் போக்குவரத்து விவரத்தை கம்ப்யூட்டரில் உள்ளிடும் ‘டேட்டா என்ட்ரி’ வேலை 17 வயது பள்ளி மாணவன் பில்கேட்ஸூக்குக் கிடைத்தது. ஒவ்வொரு வாகனமும் கடந்து செல்லும்போது காகிதச் சுருளில் ஒரு துளை போடப்படும். அந்தத் துளைகளை எண்ணி கம்ப்யூட்டரில் என்டர் செய்வதுதான் வேலை.
துளைகளை எண்ணிச் சொல்வதற்கு சாதனம் ஒன்றைக் கண்டுபிடித்து, ‘டிராஃப்- ஓ -டேட்டா’ (Traf-O-Data) என்று பெயரிட்ட பில்கேட்ஸூக்கு, இந்தத் தொழிலில் நல்ல லாபம்! போக்குவரத்து விவரங்களை அலசி அதை நெறிப்படுத்துவதற்காக பல நகராட்சிகள் அந்தக் கருவியை நாடியபோது, ‘இனிமேல் நாங்களே அந்த வேலையை நகராட்சிகளுக்குச் செய்துதருவோம்’ என்று அமெ-ரிக்க மத்திய அரசு அறிவித்துவிட்டது. பில்கேட்ஸின் பிஸினஸ் படுத்துவிட்டது.

இந்தச் சமயத்தில் அவர் ஹார்வர்ட் கல்லூரியில் இணைந்தார்। அதற்குப் பக்கத்திலேயே பால் அலெனுக்கு ஒரு வேலை கிடைத்தது. இருவரும் அடிக்கடி சந்தித்தனர். 1975 ஜனவரி மாதம் ‘பாப்புலர் எலெக்ட்ரானிக்ஸ்’ இதழில் ‘உலகின் முதல் மைக்ரோ கம்ப்யூட்டர் அல்டெய்ர் 8800′ என்று வந்த கட்டுரையை எடுத்துக்கொண்டு பில்கேட்ஸிடம் ஓடிவந்தார் அலென். அதைத் தயாரித்த எம்.ஐ.டி.எஸ். (MITS) நிறுவனத்தைத் தொடர்புகொண்ட கேட்ஸூம் அலெனும், ‘உங்கள் கம்ப்யூட்டரில் பேசிக் புரோகிராம் பயன்படுத்த முடிந்தால் நன்றாக இருக்கும். அதைச் செயல்படுத்த உதவும் பேசிக் இன்டர்பிரட்டர் (புரோகிராமை கம்ப்யூட்டர் புரிந்துகொள்ளும் வகையில் மாற்றித்தரும் இடைநிலை சாஃப்ட்வேர்) எங்களிடம் இருக்கிறது’ என்று அள்ளிவிட்டனர்.
உண்மையில் அவர்களிடம் ‘அல்டெய்ர்’ ரக கம்ப்யூட்டர் ஒன்றுகூட கிடையாது.
‘எம்.ஐ.டி.எஸ்-ஸின் ஹார்ட்வேர், தனது சாஃப்ட்வேர் இரண்டும் சேர்ந்து முழுமையான கம்ப்யூட்டராக இயங்கும்’ என்ற ஒப்பந்தம் போட்டார் பில்கேட்ஸ். இனி இங்கு என்ன வேலை என்று ஹார்வர்டில் இருந்து வெளியேறினார். 1975 ஏப்ரலில் ‘மைக்ரோசாஃப்ட்’ நிறுவனம் உருவானது.இனி எதிர்காலம் மைக்ரோ கம்ப்யூட்டருக்குத்-தான் என்பதை உணர்ந்த பில்கேட்ஸ், தன்னுடைய சாஃப்ட்வேர் உரிமையை கம்ப்யூட்டர் தயாரிக்கும் பிற நிறுவனங்களுக்கும் விற்பனை செய்தார்।

இதில் எம்.ஐ.டி.எஸ். அதிருப்தி அடைந்ததைப் பற்றியோ, கோர்ட்டுக்கு இழுத்ததைப் பற்றியோ கவலைப்படவில்லை. வெறும் ‘பேசிக்’ புரோகிராமோடு நிற்காமல் ‘ஃபோர்ட்ரான்’, ‘கோபால்’ ஆகிய மொழிகளுக்கும் இன்டர்பிரட்டர் உருவாக்கினார்.

அவற்றை கம்ப்யூட்டர் தயாரிப்பு நிறுவனங்களிடமே கொடுத்து கம்ப்யூட்டரோடு பொட்டலம் கட்டி விற்கும்படி ஒப்பந்தம் போட்டார். பில்கேட்ஸின் சாஃப்ட்வேர் இல்லாமல் கம்ப்-யூட்டர் முழுமையடையாது என்ற நிலையை உருவாக்கிவிட்டார். மிகப்பெரிய கம்ப்யூட்டர் நிறுவனமான ஐ।பி।எம்। மைக்ரோசாஃப்ட் நிறுவனக் கதவுகளைத் தட்டியதுதான் பில்கேட்ஸின் வாழ்வில் திருப்பு-முனை! அப்படியரு சூழ்நிலையைக் கையாள்-வது எப்படி என்ற பாடத்திட்டம் உருவானது.

குட்டி கம்பெனிகள் மைக்ரோ கம்ப்யூட்டர் தயாரிக்கும்போது, தான் பின் தங்கிவிடக்கூடாது என்று தாமதமாக விழித்துக்கொண்ட ஐ।பி।எம்., நெருக்கடியான காலக்கெடுவோடு பில்கேட்ஸிடம் வந்தது.

அந்தக் காலக்கெடுவுக்குள் ஹார்ட்வேரை உருவாக்குவது சிரமமில்லை. ஆனால், அதைச் செயல்பட வைக்கும் சாஃப்ட்வேர்… அந்த சாஃப்ட்-வேரை ஹார்ட்வேருக்குப் புரியவைக்கும் ஆபரேட்டிங் சிஸ்டம்… இதையெல்லாம் உருவாக்குவது அத்தனை எளிதில்லை.

சாஃப்ட்வேருக்கு ஓகே சொன்ன மைக்ரோசாஃப்ட், இன்னொரு நிறுவனத்தின் ஆபரேட்டிங் சிஸ்டத்தைப் பயன்படுத்திக்கொள்ள சிபாரிசு செய்தது। ஆனால், அந்த இன்னொரு நிறுவனத்துடன் ஐ।பி.எம்மால் உடன்பட முடியவில்லை. பந்து திரும்பவும் பில்கேட்ஸ் கோர்ட்டுக்கே வந்தது.

இந்தமுறை “சரி” என்றார் கேட்ஸ்। அதுதான் அவரை உலகின் முதல் பணக்காரர் ஆக்கிய வார்த்தை!

இத்தனை குறுகிய காலத்தில் ‘ஆபரேட்டிங் சிஸ்ட’த்தை புதிதாக உருவாக்க முடியாது என்பது பில்கேட்ஸூக்கு தெரியும்। ‘சியாட்டல் கம்ப்யூட்டர் புராடக்ட்ஸ்’ (SCP) என்ற நிறுவனம் உருவாக்கியிருந்த ‘க்யூடாஸ்’ (QDOS) என்ற ‘ஆபரேட்டிங் சிஸ்ட’த்தை, வெறும் இருபத்தைந்தாயிரம் டாலர் என்ற விலைக்கு வாங்கினார். அதில் மராமத்து வேலைகள் செய்து, தன்னுடைய கைவண்ணத்தைக் கொஞ்சம் காட்டி ‘டிஸ்க் ஆபரேட்டிங் சிஸ்டம்’ (DOS) என்ற பெயரில் ஐ।பி.எம். கம்ப்யூட்டரோடு சேர்ந்து உலகமெங்கும் பரப்பினார். ‘பர்சனல் கம்ப்யூட்டர் புரட்சி’ என்று சொல்லும் நிகழ்வாக இது 1981-ல் அமைந்தது. தன் தயாரிப்புதான் பவுடர் பூசி ‘ஐ.பி.எம்’- கம்ப்யூட்டரோடு சக்கைபோடு போடுகிறது என்று ‘சியாட்டல் கம்ப்யூட்டர் புராடக்ட்ஸ்’ நிறுவனம் குய்யோ, முறையோ என்று கூவியபோது, பில்கேட்ஸ் பணத்தால் அடித்து, அந்த நிறுவனத்தின் வாயை அடைத்தார்.

உன்னால் ஒரு செயல் முடியாதபோது, யாரால் முடியுமோ அவரை உன்னுடையதாக்கு என்ற தத்துவம் அவருக்குக் கைவந்ததானது!
ஐ।பி।எம். நிறுவனத்துடன் போட்ட ஒப்பந்தத்தில் இருந்த சாமர்த்தியம்தான் பில்கேட்ஸிடம் கற்றுக்கொள்ள வேண்டிய அடுத்த முக்கியமான பாடம்.
என்னதான் ‘ஐ।பி.எம்.’ நிறுவனம் கம்ப்யூட்டரின் ஹார்ட்வேர் பாகங்களை உருவாக்கியிருந்தாலும், மற்ற யார் வேண்டுமானாலும் அதை காப்பியடிக்க முடியும். ஆனால், அதில் இயங்கும் சாஃப்ட்வேர் மைக்ரோசாஃப்டிடம் மட்டுமே இருந்தது. ஐ.பி.எம்-க்குப் போட்டியாக பல கம்பெனிகள் இறங்கியபோது அவை சாஃப்ட்வேருக்காக பில்கேட்ஸை நாடின. பிற நிறுவனங்களுக்கு விற்கக்கூடாது என்று ஒப்பந்தம் போடாததால் ‘ஐ.பி.எம்.’ கையைப் பிசைந்துகொண்டு நிற்க, பில்கேட்ஸ் டாலர் மழையில் நனையத் தொடங்கினார். தூறல், மழையாகி, அதுவே அடைமழையாகக் கொட்டத் தொடங்கியது.

கீ போர்டு மூலம் மட்டுமே கட்டளைகளை உள்ளிடக்கூடிய ‘டாஸ் சிஸ்ட’த்தில் ‘மைக்ரோசாஃப்ட்’ இருந்த நேரத்தில் ‘மவுஸை’ வைத்து திரையில் தெரியும் கட்டளைகளை ‘க்ளிக்’ செய்து செயல்படுத்தும் புதிய தளத்துக்குப் போயிருந்தது போட்டி நிறுவனமான ‘ஆப்பிள்’. 1984-ல் அதன் ‘மேகின்டாஷ்’ கம்ப்யூட்டர் ‘மவுஸ்’ உடன் வெளிவந்தது.

‘மேகின்டாஷ்’ கம்ப்யூட்டரில் இயங்குவதற்கு ஏற்ப ‘எம்.எஸ்.வேர்ட்’டை (MS word) மட்டும் உருவாக்கிக் கொடுத்தது.

ஆனால், அந்த முயற்சியின்போது மவுஸால் கம்ப்யூட்டரை இயக்கும் சிஸ்டத்தின் நுணுக்கங்களை காப்பியடித்து, அதை வைத்து ‘விண்டோஸ்’ என்ற ‘ஆபரேட்டிங் சிஸ்ட’த்தை தயாரித்ததாக ‘மைக்ரோசாஃப்ட்’ மீது குற்றச்சாட்டு எழுந்தது. அதை நீதிமன்றம் உறுதிப்படுத்தவும் செய்தது. ஆனால், எதுபற்றியும் கவலைப்படாமல் தொடர்ந்து நடைபோட்ட ‘மைக்ரோசாஃப்ட்’டில் இருந்து, 1990-ல் ‘விண்டோஸ்- 3.।0′ வெளியானது. அதைப் பிரபலப்படுத்த ‘மைக்ரோசாஃப்ட்’ தயாரித்து அளித்த ‘எக்ஸெல்’, ‘வேர்ட்’, ‘பவர் பாயின்ட்’ ஆகியவற்றை உள்ளடக்கிய ‘மைக்ரோசாஃப்ட் ஆபீஸ்’ மென்பொருட்கள் பெரிதும் பயன்பட்டது. ‘ஆப்பிள்’ கம்ப்யூட்டரில் கூட ‘மைக்ரோசாஃப்ட் ஆபீஸ்’ வெற்றிகரமாக இயங்கியது. ‘விண்டோஸ்- 3.0′ நல்ல வெற்றி. 1995-ல் வந்த ‘விண்டோஸ் -95′ அதை விடக் கூடுதல் வெற்றி. அதற்குள்ளாக அவர் உலகப் பணக்காரர் பட்டியலில் முதல் இடத்துக்குச் சென்றிருந்தார். ‘விண்டோஸி’ன் நதிமூலம் ‘ஆப்பிள்’தான் என்பது மறந்தே போயிற்று.

இப்படி ‘ஆபரேட்டிங் சிஸ்டம்’ பந்தயத்தில் கவனம் செலுத்திய பில்கேட்ஸ், இணையப் புரட்சியைத் தவறவிட்டார்। இணையதளங்களை மேய்வதற்கு ‘நெட்ஸ்கேப் நேவிகேட்டர்’ என்ற உலாவி பிரபலமாக இருந்தது. சுமார் 85 சதவிகிதம் பேர் இந்த உலாவியைப் பயன்படுத்தியே இணையத்தில் உலாவினார்கள்.

அதனால் என்ன… பில்கேட்ஸ் கையில்தான் ஒரு வெற்றி ஃபார்முலா இருக்கிறதே… உருவாக்கத் தவறினால் உருவாக்கியவனை அழுத்து என்று!’ இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்’ என்ற உலாவியைத் தயாரித்தார்। மக்கள் கவனத்தை இந்தப் பக்கம் திருப்ப அவர் எடுத்த ஆயுதம்… இலவசம்! ‘விண்டோஸ் ஆபரேட்டிங் சிஸ்ட’த்தோடு ‘இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரை’ இலவசமாகக் கொடுத்தார். விளைவைச் சொல்லவேண்டுமா… கொஞ்ச நாளில் ‘நெட்ஸ்கேப்’ பின்னுக்குத் தள்ளப்பட்டது.

‘விண்டோஸ்’ என்ற அரக்கனை வைத்துகொண்டு எல்லா சாஃப்ட்வேர் நிறுவனங்களையும் நசுக்குவதாக பில்கேட்ஸ் நீதிமன்றத்துக்கு இழுக்கப்பட்டார். மைக்ரோசாஃப்டின் சட்ட விரோத நடவடிக்கை நிரூபிக்கப்பட்டது. மைக்ரோசாஃப்டை இரண்டாகப் பிரிக்க வேண்டும். ஒன்று ‘ஆபரேட்டிங் சிஸ்டம்’ தயாரிக்க. மற்றது பிற சாஃப்ட்வேர்களைத் தயாரிக்க என்று நீதிமன்றம் சொன்னது. ஆனால், சாஃப்ட்வேருக்கு முன்னால் சட்டம் கொஞ்சம் பலவீனமாகத் தான் பேசியது.  பிறகு, அந்தத் தண்டனை வெகுவாகக் குறைக்கப்பட்டது.

இன்றும் சாஃப்ட்வேர் கொடி உயரத்தான் பறக்கிறது… பில்கேட்ஸ் சொல்லும் தெளிவான பாடம் இதுதான்… ‘உழைக்கத் தயங்காதே… ஒரு கட்டத்துக்கு மேல் போனபிறகு உண்மையாக உழைப்பவனுடைய உழைப்பை தனதாக்கிக் கொள்ளவும் தயங்காதே…’ இதுதான் சக்சஸ் ஃபார்முலா! அதற்கு வாழும் உதாரணமாக இருக்கிறார் பில்கேட்ஸ்!

2006-ல் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் முழுநேர தலைமைப் பொறுப்பிலிருந்து விலகினார்। அதன்பின் ‘சேர்மன்’ என்ற அளவில் மற்றவர்களை வைத்து கம்பெனியை நடத்தி, மேற்பார்வை செலுத்திவந்த பில்கேட்ஸ், தற்போது முழுமையாக ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார்। பல முனைகளிலும் இருந்து மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சவாலைச் சந்திக்கும் நேரத்தில், இந்த முடிவை அவர் எடுத்திருக்கிறார்। ஆனால், பில்கேட்ஸ் எனும் மனிதரும், அவர் உலக மக்கள் மீது ஏற்படுத்திய தாக்கமும் வரலாற்றின் பக்கங்களில் நிரந்தரமாகப் பொறிக்கப்பட்டிருக்கும், சாஃப்ட்வேர் சாம்ராஜ்ஜியத்தின் நிகரில்லாச் சக்கரவர்த்தி என்ற அடையாளத்தோடு

நன்றி: பனித்துளி சங்கர்

0 comments:

Post a Comment