நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் ரொம்ப அழகான விசயம் எனும் வரிக்கு அர்த்தம் தந்ததாகவே எடுத்துக்கொள்ளலாம் . படம் முழுவதும் பாசமழை பொழிகிறார்கள். படம் பார்ப்பவர்களின் மனநிலையை பொறுத்து தான் நனைகிறார்களா குடை பிடித்து செல்கிறார்களா சொல்ல முடியும். உடலால் பாதிக்கப்படும் குழந்தைகளை மனதால் பாதிக்கப்படாமல் காப்பாற்றுங்கள் கருணை காட்டுங்கள் என்று அழகாக சொல்லிவிட்டார்கள் . என்னதான் அறிவுரை சொன்னாலும் அழகாக சொன்னாலும் சுவாரசியம் எதிர்பார்க்குற மனசு சோடை போய்விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அம்சமான மனைவியுடன் அழகானதொரு வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கும் மேஜிக் நிபுணருக்கு பிறக்கும் குழந்தை ஸ்பாஸ்டிக் எனும் பிரச்சனையால் பாதிப்பட்டது என டாக்டர்கள் கூற உடைத்து போகின்றனர் அந்த தம்பதியினர். எதார்த்தமான ஆசைகளுடன் வாழும் யாரும் அந்த குழந்தையை வளர்க்க முன் வர மாட்டார்கள். அதற்கான காப்பகங்களில் தான் வளர்ப்பார்கள். ஆனால் இந்த தம்பதியினர் வளர்க்க முன் வருகிறார்கள், வளர்த்து சமுதாயத்தில் ஒரு மனிதனாகவும் காட்டுகிறார்கள் இது தான் கதை. நெஞ்சு வலியால பாதிப்பட்டு ஓடினால் இறந்து போக வாய்ப்பு இருக்கு என தெரிந்தும் மகனின் ஆசையை நிறைவேற்ற மாரத்தானில் ஓடுகிற தந்தை எத்தனை மகன்களுக்கு கிடைக்குமோ தெரியவில்லை சினிமாவிலாவது சாத்திமாகிறது. மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் ஆரம்பித்து காதல் வரை தன்னம்பிக்கையை ஊட்டுகிறது ஒரே வசனம் ”தோற்றுவிடுவோம்னு நினைத்து விளையாடாம இருக்க கூடாது” மாற்றுதிறனாளி குழந்தைகள் அனைத்தும் தங்களில் இருந்து ஒருவன் முன்னால் வருகிறான் எனும் போது ஊக்கமளிக்கிற காட்சியையும், இன்னொருவர் துணை இல்லாமல் எதையும் செய்ய முடியாதவனை பிஸ்கட் எடுத்து சாப்பிடுங்க எனும் காட்சிகளிலெல்லாம் படமென்று பாராமல் பரிதாபப்படுபவர்கள் ஏராளம். கதை சொல்லப்பட்ட நேர்த்தி ஸ்பாஸ்டிக் எனும் நோயால் பாதிப்பட்டவனுடன் பழகும் பெண்ணின் பார்வையில் நகர்கிறது. கேன்சர்ன்னு ஒரு நோய் அது வந்தா பிழைக்கமாட்டாங்க என்ற விசயமே சினிமா பார்த்து தான் எனக்கு தெரியும் என்று விவேக் ஒரு படத்தில் கிண்டல் செய்வார். ஆனால் சீரியசாக ஸ்பாஸ்டிக் எனும் பிரச்சனையால் பாதிப்பட்ட ஒருவரை பற்றி தமிழில் சொல்லப்பட்ட முதல் கதை இதுவாக தான் இருக்கும். வழக்கமான கமர்சியல் சினிமா பாணியிலிருந்து முற்றிலும் மாறுபட்டு மாற்று திறனாளிகளை பற்றி சொல்லப்பட வேண்டும் என இப்படத்தை உருவாக்கிய இயக்குனர் விக்னேஷ் மேனன் பாராட்டுக்குரியவர். நா.முத்துகுமாரின் வைர வரிகளுக்கு இசை அமைத்த இசை அமைப்பாளர் ஜூபின், மெல்லிசை பாடல்களாலும் மென்மையான பின்னனி இசையாலும் கவர்கிறார். ஒளிப்பதிவாளர் ஆனந்த் தமிழ் சினிமாவுக்கு ஒரு நம்பிக்கையான புது வரவு ( நிறைய எதிர்பார்க்கிறோம் பாஸ்……. ) வித்தியாசமான கதை அம்சம் என்றால் நடிப்பவர்கள் வித்தியாசமாகத்தான் இருக்க வேண்டும் எனும் விதி எதையும் பின்பற்றாமல் நல்ல நடிக்க தெரிந்த நடிகர்கள் தேர்வு தான். பின்னிபுட்டாரு பாண்டியராஜன் . முட்டை கண்ணுகாரர் எப்போதும் சேட்டை செய்து தான் சிரிக்க வைப்பார். முதன் முதலாக கேரக்டருக்கான ஆர்டிஸ்டாகவே மாறி கலங்க வைக்கிறார். ராகுல் ரவீந்தர், அனுஜா அய்யர், விஷ்வா, ஷிகா என அனைவரும் தத்தம் பங்கிற்கான நடிப்பை சரியாக செய்து செல்கின்றனர். எதார்த்தம் எந்த இடத்திலும் மிஞ்சாமல் போவது படத்திற்கும் பலம் தான் தயாரிப்பாளருக்கு ….? |
0 comments:
Post a Comment