நன்றி: தினமணி
மும்பை, மார்ச் 6: மும்பை பங்குச் சந்தையில் பங்கு விற்பனையில் செவ்வாய்க்கிழமை பெருத்த சரிவு ஏற்பட்டது. 5 மாநிலங்களுக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா ஆகிய மாநிலங்களில் தோல்வி அடைவதாகவும் உத்தராகண்டில் இழுபறியாக இருப்பதாகவும் வந்த தகவல்களால் முதலீட்டாளர்கள் உற்சாகம் இழந்ததால் இந்தச் சரிவு ஏற்பட்டிருக்கிறது. மும்பை பங்குச் சந்தையில் 190 புள்ளிகள் சரிந்ததில் குறியீட்டெண் 17,173 புள்ளிகளானது. மொத்தம் 1,773 நிறுவனப் பங்குகள் சரிவைச் சந்தித்தன. வர்த்தகம் ரூ. 3,037 கோடியை எட்டியது. தேர்தல் முடிவுக்கும் பங்குச் சந்தைக்கும் நேரடித் தொடர்பு இல்லை என்றாலும் பொருளாதாரச் சீர்திருத்தங்களில் தொழில் முனைவோர்கள், முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கும் அம்சங்களை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இன்னமும் பாக்கி வைத்திருக்கிறது. அவற்றைச் செய்து முடிக்க இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால் காங்கிரஸ் கட்சி முனைப்பான நடவடிக்கைகளை எடுத்திருக்கும் என்பது அவர்களுடைய எதிர்பார்ப்பு. அரசு நிறுவனப் பங்குகளை விற்பனை செய்வது, தனியாரிடம் அதிக பணிகளை ஒப்படைப்பது, தொழிலாளர்களை நினைத்தால் வேலைக்கு வைத்துக் கொள்ளலாம், தேவைப்படாதபோது எந்தவித நஷ்ட ஈடும் தராமல் வீட்டுக்கு அனுப்பலாம் என்கிற சீர்திருத்தங்களைத் தொழிலதிபர்கள், குறிப்பாக பன்னாட்டுத் தொழில் நிறுவன அதிபர்கள் விரும்புகின்றனர். தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால் காங்கிரஸ் கட்சித் தலைமைக்கு தெம்பு ஏற்பட்டு அந்தச் சீர்திருத்தங்களை அமல் செய்திருப்பார்கள் என்பதால் முதலீட்டாளர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்தனர். இந்தத் தேர்தல்கள் மாநில சட்டப் பேரவைக்கு நடந்த தேர்தல்கள்தான் என்றாலும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இதுவரை செய்துள்ள செயல்களையும் செய்யத் தவறிய செயல்களையும் மக்கள் எடைபோட்டுக்கொண்டு வருகிறார்கள் என்பதற்கு இந்த முடிவுகள் ஒரு அடையாளமாகும். மாநிலத் தேர்தலில் உள்ளூர் காரணிகள் கணிசமாக முடிவுகளை நிர்ணயித்தாலும் ஒட்டுமொத்தமாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் கொள்கைகளும் அதன் மீது அடுக்கடுக்காகக் கூறப்படும் ஊழல்புகார்களும் அதை காங்கிரஸ் தலைமை மூடி மறைக்க எடுக்கும் முயற்சிகளும் மக்களுக்கு நிச்சயம் அதிருப்தியை அளித்து வருகின்றன. எனவே இந்தப் போக்கு அடுத்துவரும் மக்களவை பொதுத் தேர்தலிலும் எதிரொலிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுவதால் முதலீட்டாளர்கள் எச்சரிக்கை அடைந்து தங்களுடைய முதலீடுகளைக் குறைத்துக் கொள்ள முடிவு எடுத்துள்ளனர். அத்துடன் ஐரோப்பியச் சந்தையிலும் அமெரிக்காவிலும்கூட முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்குவதில் ஆர்வம் காட்டாததால் பங்குச் சந்தைகளில் புள்ளிகள் சரிந்து வருகின்றன. அதுவும் நம்முடைய தேசிய சந்தைகளில் எதிரொலித்துள்ளது. 50 முன்னணி நிறுவனங்களின் பங்குகளை அடிப்படையாகக் கொண்ட நிஃப்டி பங்கு அட்டவணையிலும் 57.95 புள்ளிகள் சரிந்துள்ளன.
0 comments:
Post a Comment