Tuesday, March 20, 2012

இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு அரசு ஆதரவு: தமிழக உணர்வை பிரதிபலித்தார் பிரதமர்

 
ஐ.நா.,வில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானம் குறித்து இந்தியாவின் நிலைப்பாட்டை பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்ததால், மனித உரிமை மீறல்களுக்கு எதிரான அந்த தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா ஓட்டுப் போட வாய்ப்புள்ளது. இலங்கையில் உள்ள தமிழர்கள் சம அந்தஸ்துடனும், சுயமரியாதையுடனும் வாழ்வர் என நம்புவதாக அவர் தெரிவித்தார்.

இலங்கைத் தமிழர்கள் படுகொலை விஷயத்தில் அமெரிக்கா ஆதரவு பெற்ற ஐ.நா., தீர்மானத்தை ஆதரிக்கும் விஷயத்தில், தமிழகத்தில் உள்ள கட்சிகள் குரல் எழுப்பியதற்கு ஆதரவாக, மத்திய அரசு முடிவு எடுத்திருப்பதற்கு அடையாளமாகும்.
ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் குறித்த விவாதத்திற்கு முடிவாக பதிலுரை வழங்கி பிரதமர் மன்மோகன் சிங் நேற்று லோக்சபாவில் பேசினார். அப்போது அவர் நாட்டின் பொருளாதாரம், தீவிரவாத ஒழிப்பு மையம் மற்றும் இலங்கை பிரச்னை ஆகிய மூன்று விஷயங்கள் பற்றி மட்டும் விரிவாக விளக்கினார்.

அவர் மேலும் பேசியதாவது:வளர்ச்சி அடைந்த நாடுகளிலேயே கூட தொழில் துறை வளர்ச்சி என்பது 1.6 சதவீதம் மட்டுமே காணப்படுகிறது. ஆனால், இந்தியாவின் தொழில் துறையில் 7 சதவீத வளர்ச்சி காணப்படுகிறது. இது திருப்தியளிக்கக் கூடிய விஷயம். கச்சா எண்ணெயின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதை சமாளிக்க நாம் தயாராக வேண்டும். அதன் மூலம் பொருளாதார வளர்ச்சி வலுப்படும்.நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல வேண்டுமெனில், உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கூட்டணி ஆட்சி என்பதால் ஒருமித்த கருத்தை எட்ட வேண்டியுள்ளது. குறுகிய கண்ணோட்டத்தை அரசியல் கட்சிகள் கைவிட்டு விட்டு, நாட்டை முன்னேற்றுவதற்காக, அரசு மேற்கொள்ளும் கடினமான முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். நாம் செல்ல வேண்டிய பாதை எளிதானதாக இல்லை. மிகுந்த கரடுமுரடான பாதைகளையும், சவால்களையும் எதிர் கொள்ளும் கட்டத்தில் இருக்கிறோம்.விவசாயத் துறையை மேன்மேலும் வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்வதென, அரசு தீர்மானித்துள்ளது. அதற்கேற்ப கொள்கை முடிவுகளை மேற்கொண்டுள்ளோம். விவசாயி ஒருவர் கூட தற்கொலை செய்து கொள்ளும் நிலையை உருவாக்கி விடாமல் அரசு பார்த்துக் கொள்ளும். விலைவாசி உயர்வு என்பது, கடந்த ஆண்டு வரை மோசமாக இருந்தது.

கடந்த ஆண்டு நிதி நிலை பற்றாக்குறையை குறைக்கத் தவறிவிட்டோம். இந்த ஆண்டாவது இதை சீராக்கச் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் அது பணவீக்கத்தை கட்டுக்குள் வைத்திருக்க உதவியாக இருக்கும்.தவிர, தேசிய அளவில் அமைக்கப்படும் "என்.சி.டி.சி.,' என்ற தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் அவசியமானது. நாடு இப்போது இரண்டு வகையில் பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறது. ஒன்று; வெளிநாட்டிலிருந்து கட்டவிழ்த்து விடப்படும் தாக்குதல் சம்பவங்கள். இன்னொன்று; மாவோயிஸ்ட்களால் நடத்தப்படும் உள்நாட்டு தாக்குதல்கள். மாவோயிஸ்ட்கள் நடத்தும் தாக்குதல்கள் காரணமாக இந்தியாவின் மத்திய, மாநிலங்களில் எல்லாம் வளர்ச்சி தடைபட்டு போய் உள்ளது.

இந்த சூழ்நிலைகளை மாற்றவும், நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நோக்கிலேயே தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் உருவாக்கப்படுகிறது. இதுகுறித்து உயர்மட்ட அமைச்சர்கள் குழு மற்றும் நிர்வாக சீர்திருத்தக் குழு ஆகியவற்றில் ஏற்கனவே ஆலோசனை நடத்தப்பட்டது. அனைத்து மாநில முதல்வர்களின் ஆலோசனை கூட்டத்திலும் கூட இது பற்றி ஆராயப்பட்டது. கடந்த, மார்ச் 1ம் தேதி அன்று மாநில டி.ஜி.பி.,க்களின் ஆலோசனைக் கூட்டமும் நடத்தப்பட்டது. இதுகுறித்து இன்னும் ஒருமித்த கருத்து உருவாக, மாநில முதல்வர்களுடன் மீண்டும் ஆலோசனை நடத்துவோம்.

வரும், ஏப்ரல் 16ம் தேதி அன்று மீண்டும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. அந்த கூட்டத்திற்கு பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும். இந்த மையம் அமைக்கப்படுவதை அனைத்து தரப்புமே வரவேற்கின்றன. அதை அமல்படுத்தும் வழிமுறைகளில் மட்டுமே கருத்து வேறுபாடுகள் உள்ளன. இவற்றை பேச்சு வார்த்தை மூலம் பேசி தீர்த்துக் கொள்ள முடியும்.இலங்கைத் தீர்மானம் ஜெனீவாவில் கொண்டு வரப்பட உள்ளது. இத்தீர்மானத்தின் வாசகங்கள் என்ன என்பதே இன்னும் தெரியவில்லை. மனித உரிமை மீறல்கள் குறித்து, இலங்கைக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இந்த தீர்மானத்தை கொண்டு வருகின்றன.
இந்த தீர்மானத்தை ஆதரித்து இந்தியா ஓட்டு போடுவதற்கு வாய்ப்புள்ளது. இதன் மூலம் இலங்கையில் உள்ள தமிழர்கள் சம அந்தஸ்துடனும், கண்ணியத்துடனும், சுயமரியாதையுடனும் வாழ்வதற்கு உண்டான உத்திரவாதம் உருவாகும் என
நம்புகிறோம்.இடம் பெயர்ந்த தமிழர்களின் புனர்வாழ்வுக்காக இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து, வெளியுறவுத் துறை அமைச்சர் கிருஷ்ணா விரிவாக விளக்கியிருந்தார். இந்தியாவின் தொடர்ச்சியான நடவடிக்கைகள் வாயிலாக உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற்று அதில் தமிழர்கள் பங்கேற்றனர். தமிழ் தேசிய கூட்டணி கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

தவிர, அரசியல் ரீதியிலான தீர்வு காண வேண்டுமென்பதோடு மட்டுமல்லாது, நிஜமான அதிகாரப்பகிர்வு மற்றும் 13வது சட்டத் திருத்தத்தையும் அந்நாட்டு அரசு நிறைவேற்ற வேண்டுமென, இந்தியா விரும்புகிறது. தவிர, போரின் போது அத்துமீறல்கள் குறித்து ஆராய அமைக்கப்பட்ட கமிஷன் அளித்த பரிந்துரைகளையும் அமல்படுத்த வேண்டும். தமிழர்கள் உட்பட இலங்கையில் அனைத்து பிரிவினரது உரிமைகளும் நிலைநாட்ட வேண்டுமெனவே, இந்தியா விரும்புகிறது.இவ்வாறு பிரதமர் பேசினார்.

சலசலப்பு:இலங்கைக்கு எதிரான தீர்மானம் குறித்த பிரதமர் பேசிக் கொண்டிருந்த போது, தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கிறதா, இல்லையா என்பதற்கு உறுதியான பதிலை அளிக்கும்படி அ.தி.மு.க., எம்.பி.,யான தம்பிதுரை எழுந்து கேள்வி கேட்டார்.
அப்போது, சபையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. ஆனாலும், பிரதமரின் பேச்சை தி.மு.க., எம்.பி.,க்கள், மேஜைகளைத் தட்டி பெரும் ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

நன்றி: தினமலர்

0 comments:

Post a Comment