Tuesday, March 13, 2012

செஞ்சி அருகே ஆனத்தூரில் சமண படுகை கண்டுபிடிப்பு!



செஞ்சி: செஞ்சியருகே புதிய சமண படுக்கை இருப்பதை ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சிப் பகுதியிலுள்ள தளவானூர், ஆனத்தூர், மேலச்சேரி ஆகிய கிராமங்களில் கல்வெட்டு ஆய்வாளர் அனந்தபுரம் கிருஷ்ணமூர்த்தி, காஞ்சிபுரம் இந்திய தொல்லியல் துறை பொறியாளர் மணி ஆய்வு செய்தனர். இந்த ஆய்வு குறித்து அனந்தபுரம் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது: ஆனத்தூர் கிராமத்திற்குத் தெற்கில் 1 கி.மீ., தொலைவில் உள்ள மலையில், 50 மீட்டர் உயரத்தில் சிவ பார்வதி கல் எனும் பகுதி உள்ளது. இதில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய, பழமையான மூன்று சமண படுகைகள் உள்ளன. இதில் தெற்கு நோக்கி இரண்டு படுகை, கிழக்கு நோக்கி ஒரு படுகையும் உள்ளன. இதன் அருகே ஒரு நீர் சுனை உள்ளது. இந்த கிராமத்தின் மேற்கே ஒரு சிறிய பாறையில் ஜைன தீர்த்தங்கரர் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இச்சிற்பத்தின் மேல் பகுதியில் யாளி முகமும், கீழே முக்குடையும் உள்ளது. முக்குடையின் கீழ் அமர்ந்த நிலையில் தியானம் செய்யும் தீர்த்தங்கரர் உருவம் உள்ளது. தீர்த்தங்கரருக்கு இரு பக்கமும் சாமரதாரிகள், சாமரம் பிடித்தவாறு உள்ளனர். தீர்த்தங்கரர் சிற்பத்தில் யாளி உருவம் செதுக்கியிருப்பது சிறப்பாக உள்ளது. இந்த தீர்த்தங்கரருக்குப் பெரும்புகை, செஞ்சி, மேல்சித்தாமூர் பகுதிகளில் வசிக்கும் ஜைனர்கள் ஆண்டு தோறும் விழா எடுத்து வழிபடுகின்றனர். தீர்த்தங்கரர் சிற்பத்திற்கு முன்பாக ஒரு மண்டபம் உள்ளது. மண்டபத்திற்கு வடக்கில் சிதிலமடைந்த நிலையில் ஒரு கோவில் உள்ளது. இக்கோவிலை இப்பகுதி மக்கள் ஜெயினர் கோவில் என்கின்றனர் . ஆனால், சிலைகள் ஏதும் இல்லை. கோவிலின் நுழைவுப் பகுதி தெற்கு நோக்கியும், கருவறை கிழக்கு நோக்கியும் உள்ளது. சிதிலமடைந்துள்ள இக்கோவிலை முழுமையாக ஆய்வு செய்தால் அறிய வரலாற்றுச் சான்றுகள் கிடைக்கும். இவ்வாறு அனந்தபுரம் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.

0 comments:

Post a Comment