Wednesday, March 7, 2012

தேர்தல் தோல்விக்கு நானே பொறுப்பு: ராகுல் காந்தி

நன்றி: தினமணி


தில்லியில் தனது இல்லத்தில் ஐந்து மாநில சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் குறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்துவிட்டு புறப்பட்டு செல்லும் காங்கிர
புது தில்லி, மார்ச் 6: ""உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவுக்கு நானே முழுமையான பொறுப்பு ஏற்றுக்கொள்கிறேன்'' என்று அக்கட்சியின் பொதுச் செயலர் ராகுல் காந்தி தெரிவித்தார்.  ஐந்து மாநில சட்டப் பேரவை தேர்தல் முடிவுகள் திங்கள் நண்பகல் முதல் வெளியாகத் தொடங்கின. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சிக்குச் சாதகமான முடிவுகள் உத்தரப் பிரதேச தேர்தலில் எதிரொலிக்கவில்லை.  இதனால், காலையிலிருந்தே தில்லியில் 24, அக்பர் சாலையில் உள்ள காங்கிரஸ் தலைமையகம் வெறிச்சோடிக் காணப்பட்டது. பிற்பகல் 3.30 மணிக்குப் பிறகே, கட்சியின் தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக வரத் தொடங்கினர். காங்கிரஸ் பொதுச்செயலர் ராகுல் காந்தி 4 மணியளவில் காங்கிரஸ் தலைமையகத்தையொட்டி அமைந்துள்ள தமது தாயும் காங்கிரஸ் தலைவருமான சோனியா காந்தியின் இல்லத்துக்கு வந்தார். அங்கு குழுமியிருந்த பத்திரிகை, தொலைக்காட்சி நிருபர்கள், புகைப்படக் குழுவினர் ராகுலின் காரை வழிமறித்து தேர்தல் முடிவு குறித்து கருத்துக் கேட்க முயன்றனர். ஆனால், தனது காரை நிறுத்தாமல் ராகுல் காந்தி உள்ளே சென்று விட்டார். அரை மணி நேரம் கழித்து நிருபர்கள் இருந்த பகுதிக்கு அவர் வந்தார்.  தேர்தல் முடிவு குறித்து கருத்து கேட்ட நிருபர்களிடம் ராகுல் கூறியது:  ""இந்தத் தேர்தல் பிரசாரத்தை நான்தான் முன் நின்று நடத்திச் சென்றேன். அதனால், ஏற்பட்ட தோல்விக்கு நானே பொறுப்பேற்றுக் கொள்கிறேன். இந்தத் தேர்தல் முடிவுகள் எனது அரசியலுக்குக் கிடைத்த மிகப்பெரிய பாடமாக நான் கருதுகிறேன். உத்தரப் பிரதேசத்தில் முன்பிருந்த நிலையை விட கூடுதல் இடங்களை காங்கிரஸ் கட்சி பிடித்துள்ளது. எதிர்காலத்தில் இந்த எண்ணிக்கையை அதிகரிக்க முயல்வோம்.  சமாஜவாதி கட்சிக்குச் சாதகமான சூழ்நிலை உத்தரப் பிரதேசத்தில் நிலவியது. அதனால்தான் அந்தக் கட்சிக்கு அம்மாநில மக்கள் வெற்றியைத் தேடித்தந்துள்ளனர். உத்தரப் பிரதேச மக்களுக்கு நான் ஏற்கெனவே அளித்த உறுதிமொழியின்படி தொடர்ந்து பணியாற்றுவேன். கட்சியின் அடிப்படை பலவீனமாக இருந்ததை இந்தத் தேர்தல் உணர்த்தி விட்டது. அந்தக் கட்டமைப்பைச் சரி செய்யும் பணியில் ஈடுபடுவோம்'' என்று ராகுல் காந்தி கூறினார்.  ராகுல் காந்தி நிருபர்களுக்குப் பேட்டியளித்து முடித்த போது, அவரது முகம் சோகமாக இருந்தது. அப்போது, அருகில் வந்த அவரது சகோதரி பிரியங்கா காந்தி, ராகுலைக் கட்டி அணைத்து ஆறுதல் கூறினார்.    ராகுலுக்கு பாராட்டு  உத்தரப் பிரதேச தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக ராகுல் காந்தி மிகப்பெரிய அளவில் பங்களிப்பை வழங்கினார் என்று காங்கிரஸ் பொதுச் செயலர் ஜனார்தன் துவிவேதி தெரிவித்தார்.  தேர்தல் முடிவு தொடர்பாக நிருபர்களிடம் அவர் கூறியது:  ""ராகுல் காந்தியின் பிரசாரத்தால் உத்தரப் பிரதேசத்தில் மாயாவதியின் தவறான ஆட்சிக்கு அம்மாநில மக்கள் முற்றுப்புள்ளி வைத்து விட்டனர். இதற்கு ராகுல் காந்தியின் அயராத தீவிர பிரசாரமே காரணம். அந்தப் பிரசாரத்தின் பலனை சமாஜவாதி கட்சி அடைந்து விட்டது. மாயாவதிக்கு எதிரான பிரசாரத்தை ஒரு யுத்தம் போல் ராகுல் நடத்தி வெற்றி கண்டு விட்டார். உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி அடைந்த தோல்விக்கு மாநிலம் சார்ந்த சில பிரச்னைகளும் காரணம் என்பதை மறுக்க முடியாது. காங்கிரஸூக்குச் சாதகமாகப் பல சூழ்நிலை நிலவினாலும் அவற்றை வெற்றியாக மாற்றுவதில் அம்மாநில காங்கிரஸ் முயற்சி செய்யவில்லை என்பதைத் தேர்தல் முடிவு வெளிக்காட்டி விட்டது. தேர்தல் தோல்விக்கான காரணம், அதற்குப் பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை போன்ற விஷயங்களைக் கட்சி மேலிடம் விரைவில் தலைவர்களுடன் விவாதித்து முடிவு செய்யும்'' என்று ஜனார்தன் துவிவேதி கூறினார். 

0 comments:

Post a Comment