Tuesday, March 6, 2012

நாம் மனிதர்கள் என்பது உண்மைதானா...?

நன்றி: கவிதைவீதி



இரண்டு ஜென் துறவியின் சீடர்கள் பேசிக்கொண்டிருந்தனர்.


அகிரா என்ற சீடன் தனது குருவின் அருமை பெருமைகளை எல்லாம் விளக்கினான்.


“எங்கள் குரு மாயா ஜாலங்களின் மன்னன். ஆற்று நீரின் மேல் நடப்பார், காற்றிலே பறப்பார், தீயிலே குளிப்பார், புயலை எதிர்ப்பார். இப்படி பல அதிசயங்களை செய்வார். உங்கள் குரு என்ன செய்வார்?', என்று அகிரா, ஜிங்ஜுவிடம் கேட்டான்.


ஜிங்ஜு எனது குரு ஆற்று நீரில் குளிப்பார், காற்றை சுவாசிப்பார், தீயை பயன்படுத்தி சமைப்பார், புயலைக் கண்டால் மடத்தில் ஒளிந்து கொள்வார். நீ சொல்வது போல் எல்லாம் எதுவும் செய்ததில்லையே. எதற்கும் அவருக்கு என்ன மாயாஜாலம் தெரியும் என விசாரித்து விட்டு வருகிறேன்', என்றான்.


அடுத்த நாள் அகிராவும், ஜிங்ஜுவும் சந்தித்து கொண்டனர். `எங்கள் குருவிடம் உங்களுக்கு என்ன மாயாஜால அதிசயங்கள் செய்ய தெரியும்? என்று கேட்டேன்.


அதிசயங்கள் எதுவும் நிகழ்த்தாமல் சாதாரணமாக இருப்பதுதான் எனது அதிசயம்'' என்று மாஸ்டர் சொன்னார் என்றான் ஜிங்ஜு. (இது ஒரு ஜென் கதை)


நாம் ஒவ்வொறு நாளும் நம்மை வித்தியாசப்படுத்தி காட்ட, அதற்காக முயற்சித்துக்கோண்ட இந்த வாழ்க்கையை கடத்திக் கொண்டு இருக்கிறோம். நாம் மற்றவர்களை விட வித்தியாசமானர்களாக காட்டுவதற்காக இன்றைய மகிழ்ச்சிகளை விட்டு விட்டு எதிர்காலம் நோக்கி ‌ஓட வேண்டியிருக்கிறது.


‌ஐம்பூதங்களோடு இணைந்து வாழும் வா‌ழ்க்கை இருக்கிறதே. அடடா... அதுதான் உண்மையான பேரானந்தம். கொஞ்சம் படித்துவிட்டு பணம் வந்துவிட்டால் போதும் அவர்கள் ஆடும் ஆட்டம் இருக்கிறதே. ஒரு நண்பர் என்னார் “செருப்பு இல்லாம் நான் ஒரு அடிக்கூட நடக்க மாட்டேன்” எதில் என்ன பெருமையிருக்கிறது. நம்வாழும் இந்த பூமியில் நாம் பாதம் பட்டு நடக்கவேண்டும். அப்போதுதான் தெரியும் இந்த பூமியை நாம் எவ்வாறு பாழ்படுத்தியிருக்கிறோம் என்று. செருப்பு அணியாமல் நடக்க வேண்டிய தருணம் ஏற்பட்டால் என்னதான் செய்வார் அவர் என்று எனக்கு தெரியவில்லை.


மழையில் நனைந்தால் நம்முடைய உடலுக்கு ஆகாதுதான். அதற்காக தன்னுடைய வாழ்நாள் முழுவதும் மழையில் நனையாமலே முடிந்துவிட்டால் எப்படி, நாம்... இயற்கையின் கொடையான மழை என்ற ஒரு அதிசயத்தை கொண்டிருக்கும் இந்த பூமியில் வாழ்வதற்கே அர்த்தமில்லை.


எங்கள் வீட்டுக்கு சென்னையில் இருந்து எங்கள் உறவினர்கள் வருவார்கள். அவர்களின் பிள்ளைகளை ஊரைச்சுற்றி காட்ட சென்றால் அவர்கள் அங்கு பார்க்கும் அத்தனையும் அருவறுப்பாகத்தான் பார்க்கிறார்களே தவிர அதையாரும் ரசிக்க வில்லை. வரப்பில் நடப்பது, ஆற்றில், கிணற்றில் குளிப்பது, வயலில் இறங்கி நண்டுகளை தேடுவது, மரத்தில் ஏறி நுங்கு சாப்பிடுவது, குளத்தில் இறங்கி தாமரைப்பறிப்பது என அத்தனையும் எங்களுக்கு இன்பமாய் பட்டது. அவர்கள் அதை தூரத்தில் இருந்து பார்த்ததோடு சரி.


இன்று நாம் யாதார்த்த உலகில் வாழ மறந்து வருகிறோம். இனறைய சூழலில் மின்தடை ஏற்பட்டால் வாழ்க்கை‌யே சூனிமாக இருப்பதாய் நினைத்துக் கொள்கிறார்கள். தன்னுடைய உடல் மனம் அத்தனையையும் விஞ்ஞானத்துக்கு பறிகொடுத்து விடடோம். அதிலிருந்து விடுபடுவது இனி முடியாத காரியமாகத்தான் இருக்கிறது.


நான் வசதி வாய்ப்புகளை குறைச்சொல்லவில்லை. அதற்காக எதார்த்த வாழ்க்கையை மறந்துவிடுவது எந்தவிதத்தில் நியாயம். ஒரு கைபேசி வேலைசெய்ய வில்லையென்றால் அதற்காக படும்வேதனை இருக்கிறதே. தெலைக்காட்சி பெட்டி ஒரு நாள் இல்லையென்றால் அதற்காக படும் அவஸ்த்தை இருக்கிறதே... உண்மையில் இந்த இரண்டும் நம் மகிழ்ச்சிக்கு நாமே வைத்துக்கொண்ட சூன்யங்கள்.


உண்மையான மனிதன், உண்மையான மனம் அனைத்தையும் சமம் என்று கருதும். யாதார்த்தமான உலகத்தில் யார்த்தமாக வாழ பழகிவிட்டால் எந்த சூழ்நிலையிலும் நாம் வெற்றியாளராக திகழலாம். 120 கோடி உள்ள நம் தேசத்தில் அனைவருமே அற்புதமானவர்களாக திகழ நினைப்பது அசாதாரணமானதுதானே.


அன்பு காட்ட, ஆசையோடு அரவணைக்க, மற்றவர்மேல் பரிவு கொள்ள, எளியோர்மேல் இரக்கம் காட்ட, நேர்மையோடு இந்த உலகில் வாழ, உண்மையை உண்மையென்று சொல்ல, தன தர்ங்கள் செய்ய, வாடிய மனங்களை விசாரித்து ஆற்ற, மனிதனால் மட்டுமே முடியும். இந்த அற்புதங்களை நிகழ்த்தி நாம் மனிதர்கள் என்பதை நிருபித்துக்கொண்டே இருப்போம்.

0 comments:

Post a Comment