புதிதாகத் தோன்றிய ஒரு நட்சத்திரத்திலிருந்து (Baby star) மாபெரும் அளவில் தண்ணீர் பீய்ச்சி அடித்துக் கொண்டிருப்பதை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் கண்டுபிடித்துள்ளது.
உலகின் மாபெரும் ஆறுகளில் ஒன்றான அமேசான் ஆற்றை இந்த நட்சத்திலிருந்து பீய்ச்சி அடிக்கும் நீர் ஒரு வினாடியில் நிறைத்துவிடும், அந்த அளவுக்கு அதில் நீர் உற்பத்தியாகிக் கொண்டுள்ளது என்கின்றனர் விஞ்ஞானிகள்.
பூமியிலிருந்து 750 ஒளி வருடத்துக்கு அப்பால் உள்ளது இந்த நட்சத்திரம். இதன் வயது 100,000 ஆண்டுகள் தான். அதாவது சூரியனை ஒத்துள்ள இந்த நட்சத்திரம் இன்னும் முழுமையாக உருவாகவில்லை. இப்போது தான் உருவாகிக் கொண்டுள்ளது.
பெர்சூயஸ் நட்சத்திர மண்டலத்தில் (constellation perseus) இந்த நட்சத்திரத்தின் வடக்கு-தெற்கு புலத்திலிருந்து அண்ட வெளியில் இந்த நீர் பீய்ச்சி அடித்துக் கொண்டுள்ளது. மணிக்கு 2 லட்சம் கிலோ மீட்டர் வேகத்தில் இந்த நீர் பாய்ந்து கொண்டுள்ளது.
ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் ஹெர்ஸ்செல் ஸ்பேஸ் அப்சர்வேட்டரி (Herschel Space Observatory) என்ற வானியல் தொலைநோக்கி இந்த நட்சத்திரத்தை படம் பிடித்துள்ளது. இந்த நட்சத்திரத்தில் ஹைட்ரஜன், ஆக்ஸிஜன் அணுக்கள் சேர்ந்து தண்ணீர் அணுக்களை (H2O) உருவாக்குகின்றன. ஆனால், நட்சத்திரத்தில் நிலவும் பயங்கர வெப்பத்தால் அவை 1.8 லட்சம் பாரன்ஹீட் அளவுக்கு சூடாகி வாயுவாக மாறுகின்றன. பின்னர் நட்சத்திரத்திலிந்து இந்த வாயு அதிவேகத்தில் வெளியேறுகிறது. வெளியில் அண்ட வெளியில் நிலவும் மிகக் குளுமையான சூழலால் இந்த வாயு மீண்டும் நீராக மாறி அண்டவெளியில் பல கோடி கி.மீ. தூரத்துக்கு பீய்ச்சி அடிக்கப்பட்டு வருகிறது என்கின்றனர் இந்த ஹெர்ஸ்செல் ஸ்பேஸ் அப்சர்வேட்டரியை இயக்கி வரும் நெதர்லாந்து நாட்டின் லெய்டன் பல்கலைக்கழக வானியல் விஞ்ஞானிகள்.
உயிர்கள் உருவாகவும், உயிர்கள் நிலைக்கவும் மிக முக்கிய காரணியான நீர் பூமிக்கு எப்படி வந்தது என்பது குறித்து பல யூகங்கள் உள்ளன. இப்போது, இந்த நட்சத்திரத்தில் நீர் உருவாவது, பூமிக்கு ஏதாவது ஒரு நடத்திரத்திலிருந்து நீர் வந்திருக்கலாமோ என்ற யூகத்தை வலுப்படுத்தியுள்ளது. அந்த நட்சத்திரம் நமது சூரியனாகக் கூட இருக்கலாம் என்கிறார்கள். நட்சத்திரங்கள் உருவாகும்போது நீர் உருவாவது இதன் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது சூரியனும் ஒரு நட்சத்திரமே என்ற அடிப்படையில், பூமிக்கு சூரியனிலிருந்து நீர் வந்திருக்கலாம் என்கிறார்கள்.
0 comments:
Post a Comment