Monday, March 19, 2012

கடல்மேல் பிழைக்க வைத்தான், எங்களை மின்வெட்டில் தவிக்க வைத்தான்


மின்வெட்டால் ஐஸ் உற்பத்தி பாதிப்பு, விசைப்படகுகள், பைபர் படகுகளுக்கு டீசல் பிடிப்பதில் சிக்கல் உள்ளிட்ட காரணங்களால், தமிழகம் முழுவதும் மீன்பிடி தொழில் வேகமாக முடங்கி வருகிறது. இதனால், ஒன்றரை லட்சம் மீன்பிடி தொழிலாளர்கள் மட்டுமின்றி, அதை சார்ந்துள்ள ஒரு கோடிக்கு அதிகமானவர்கள் வருவாய் இழப்பில் சிக்கி தத்தளிக்கின்றனர்.

தமிழகத்தில் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய இடங்களில் உள்ள மீன்பிடி துறைமுகங்களில், 10 ஆயிரத்திற்கும் அதிகமான விசைப்படகுகள் மூலம் மீன்பிடி தொழில் நடக்கிறது. இது மட்டுமின்றி, மாநிலம் முழுவதும், ஒரு லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள், ஒரு லட்சத்திற்கும் அதிகமான கட்டுமரங்கள் மூலமும், மீன்பிடி தொழில் நடக்கிறது.ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் வரை நேரடியாகவும், ஒரு கோடி பேர் வரை மறைமுகமாகவும், மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளனர். விசைப்படகுகள், பைபர் படகுகளுக்கு டீசல், மீன்களை பதப்படுத்துவதற்கு ஐஸ் கட்டிகள், வலைகள், இயந்திரங்கள், மீன்பிடி தொழிலுக்கு செல்பவர்கள் பயன்படுத்தும் உணவு பொருட்கள் என, நாள்தோறும் மீன்பிடி தொழிலில், 13 முதல் 25 கோடி ரூபாய் வரை முதலீடு செய்யப்படுகிறது. பெரிய விசைப்படகுகள் ஆழ்கடலுக்கும், சிறிய விசைப்படகுகள் நாள்தோறும், 1,000 டன்கள் வரை மீன்கள் பிடிக்கப்படுகிறது.

இரண்டாமிடம் : ஒரு வாரம் வரை ஆழ்கடலில் முகாமிட்டு, மீன் பிடிக்கும் பெரிய விசைப்படகுகளுக்கு, 15 டன்கள் எடை கொண்ட 100 ஐஸ் கட்டிகளும், சிறிய விசைப்படகுகளுக்கு 20, பைபர் படகுகளுக்கு ஏழு ஐஸ் கட்டிகளும் தேவைப்படுகின்றன. தமிழகத்தில் பிடிக்கப்படும் மீன்கள் மாநிலத்தின் தேவைகளுக்கு மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, கோவா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் எடுத்து செல்லப்படுகிறது. இதில், 200 சதவீத மீன்கள் அரபு நாடுகளுக்கும், சிங்கப்பூர், மலேசியா, தைவான் உள்ளிட்ட நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆண்டுதோறும், மீன் ஏற்றுமதி மூலம் நாட்டிற்கு, 35 ஆயிரம் கோடி ரூபாய் அன்னிய செலாவணி கிடைத்து வருகிறது.அன்னிய செலாவணி ஈட்டி தருவதில், கேரளா முதலிடத்திலும், தமிழகம் இரண்டாம் இடத்திலும் உள்ளன.

தமிழகத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும், கொழுப்பு சத்து குறைந்த வரிச்சூரை, கேரை ஆகிய மீன்களுக்கு வெளிநாடுகளில் மிகுந்த வரவேற்பு உள்ளது. மீன்பிடி தொழிலில் மீனவர்கள் மட்டுமின்றி வலை பின்னும் தொழிலாளர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள், ஐஸ் தொழிற்சாலை ஊழியர்கள், ஏலம் விடுபவர்கள், வாகன ஓட்டுனர்கள், ரிக்ஷா தொழிலாளர்கள், மார்க்கெட் வியாபாரிகள், கூடைகளில் மீன் மற்றும் கருவாடு விற்கும் பெண்கள், துறைமுகங்களில் உணவு பொருட்கள் விற்பவர்கள் உட்பட, 55 வகையான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மின்வெட்டு காரணமாக, தமிழகம் முழுவதும் உள்ள ஐஸ் தயாரிப்பு தொழிற்சாலைகளில் உற்பத்தி பெரிதும் முடங்கியுள்ளது. தயாராகும் ஐஸ் கட்டிகளும், கூடுதல் விலைக்கு விற்கப்படுகின்றன. முன்பெல்லாம், 150 கிலோ எடை கொண்ட ஐஸ் கட்டி, 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. கோடை காலம் துவங்கியுள்ளதால், டிமாண்ட் அதிகரித்திருக்கிறது. விற்பனையாகாத தரம் குறைந்த மீன்களை கருவாடாக்க முடியாமல், குப்பையில் கொட்ட வேண்டிய நிலையும் ஏற்படுகிறது. மீன்பிடி துறைமுகங்களில் இயங்கும், ஐஸ் தயாரிப்பு தொழிற்சாலைகளுக்கும், டீசல் நிரப்பும் மையங்களுக்கும் தங்கு தடையின்றி, 24 மின்சாரம் வழங்கினால் மட்டுமே மீன்பிடி தொழிலை காப்பாற்ற முடியும்.

காசிமேட்டில் பாதிப்பு என்ன?சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களின் மீன்பிடி துறைமுகமாக, சென்னை காசிமேடு துறைமுகம் விளங்குகிறது. இங்கு, 1,000 விசைப்படகுகள், 8,000 பைபர் படகுகள் மூலம் மீன்பிடி தொழில் நடக்கிறது. சென்னையில் மட்டும், 80க்கும் மேற்பட்ட ஐஸ் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் மின்வெட்டால் உற்பத்தி முடங்கியுள்ளது. மின்வெட்டு பாதிப்பால், நாள்தோறும், 60 முதல் 80 விசை மற்றும் பைபர் படகுகள் மட்டுமே கடலுக்குச் சென்று வருகின்றன.

இலங்கைக்கு தமிழக கருவாடு!இலங்கை தலைநகர் கொழும்புவில், சர்வதேச கருவாட்டு சந்தை இயங்கி வருகிறது.முதல் தரமான கருவாடுகள், இலங்கைக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இவை தூத்துக்குடி துறைமுகத்திற்கு எடுத்து செல்லப்பட்டு, மாதந்தோறும் 250 டன்கள் அளவிற்கு இலங்கைக்கு மட்டும் ஏற்றுமதியாகிறது. இதுமட்டுமின்றி, வேறு பல நாடுகளுக்கும் தமிழகத்தில் இருந்து கருவாடு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இதுகுறித்து, விசைப்படகு மீனவர்கள் கூறியதாவது:இங்கு, 300 விசைப்படகுகள் உள்ளன. ஒவ்வொரு படகிலும், 10 டன் அளவு ஐஸ்பார் வைக்கும் வகையிலான பெரிய பெட்டி உள்ளது. எங்களுக்கு, அதில் வைக்குமளவிற்கு போதிய ஐஸ்பார் கிடைக்காவிட்டால், நாங்கள் தினமும் கடலுக்கு செல்வதில், எந்த பயனுமில்லை. தொடர் மின்வெட்டால், ஐஸ்பார் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், மீன்களை பதப்படுத்த முடியவில்லை. பிடித்துவரும் மீன்கள் அழுகிவிட்டால், அதை குப்பையில் தான் கொட்ட வேண்டும்.

ஐஸ் உற்பத்தி பாதிப்பால் மீனவர்கள், வியாபாரிகள் பாதிப்பு : அறிவிக்கப்படாத பல மணி நேர மின்வெட்டு காரணமாக, கடலூர் மாவட்டத்தின் பிரதான தொழில்களில் ஒன்றான, மீன்பிடி தொழில் நலிவடைந்து வருகிறது.நீண்ட கடற்கரையை கொண்ட கடலூர் மாவட்டத்தில், பிரதான தொழில்களில் ஒன்றாக மீன்பிடி தொழில் உள்ளது. தினமும், 1,000 முதல், 1,200 டன் மீன்கள், கடலூர் முதுநகர் மற்றும் பரங்கிப்பேட்டை அன்னங்கோவில் திட்டு துறைமுகங்களில் விற்பனை செய்யப்படுகின்றன. வெளிமாநிலங்களுக்கும் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும் லாரிகள் மூலம் வியாபாரிகள் கொண்டு செல்கின்றனர்.சில குறிப்பிட்ட ரகங்கள், சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

மீனை கெடாமல் பிற பகுதிகளுக்கு கொண்டு செல்லவும், டன் டன்னாக ஐஸ்கட்டிகள் @தவை உள்ளது. இதற்கு, 800 டன் ஐஸ்கட்டி தேவை. அதை மின்சார பாதிப்பால் சப்ளை செய்ய முடியவில்லை. ஐஸ் உற்பத்தி செய்ய, தண்ணீருடன் அமோனியம் வாயுவைச் செலுத்தி, மைனஸ் 15 டிகிரிக்கு குளிரூட்ட வேண்டும். இதற்கு கம்ப்பிரஷர், 24 மணி நேரமும் இயங்க வேண்டும். ஏற்கனவே, ஐஸ் பற்றாக்குறை உள்ள கடலூர் மாவட்டத்தில், தற்போது நிலவி வரும் தொடர் மின்வெட்டால், 20 சதவீதத்திற்கும் குறைவாகவே உற்பத்தி செய்வதால், மீன்பிடி தொழிலும், மீன் வியாபாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.மேலும், கடலில் சில தினங்கள் தங்கி மீன் பிடிப்பதை மீனவர்கள் தவிர்த்து வருகின்றனர். மீன்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

தூத்துக்குடி:தொடர் மின்வெட்டு காரணமாக, மீனவர்கள் படகுகளில் பயன்படுத்த போதிய ஐஸ்கட்டி கிடைக்காததால், அவர்கள் பிடித்து வரும் மீன்கள், அழுகும் நிலை ஏற்படுகிறது . கடலுக்கு செல்லும் மீனவர்கள், விசைப்படகில் தலா, 50 கிலோ எடைகொண்ட, 15 முதல் 20 வரை எண்ணிக்கையிலான ஐஸ் பார்களை (கட்டிகளை) ஒரு பெட்டியில் வைத்திருப்பர். வலைவிரித்து பிடிக்கும் மீன்களை, அந்த பெட்டிக்குள் போடுவர். அதனால், அவை கரைக்கு கொண்டுவந்து வியாபாரிகளுக்கு விற்கும் வரையில், நல்லநிலையில் இருக்கும். ஒரு பார், 80 ரூபாய் வரை தற்போது விற்கப்படுகிறது.

மின்வெட்டால் பாதிப்பு: தூத்துக்குடியைச் சுற்றியுள்ள, ஐஸ்பார் உற்பத்தி கம்பெனிகளில் உற்பத்தி அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறது.

ராமேஸ்வரம் :ராமநாதபுரம் மாவட்டத்தில், தினமும், 10 மணி நேரம் மின்வெட்டு செய்யப்படுவதால், 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட மீனவர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன், கீழக்கரை, ஏர்வாடி உட்பட ராமநாதபுரம் மாவட்டத்தில், 1,500 விசைப்படகுகள், 3,000 நாட்டுப் படகுகள் உள்ளன. நேரடியாகவும், மறைமுகமாகவும் இத்தொழிலை நம்பி, 50 ஆயிரம் பேர் உள்ளனர். 300 லேத், நாசில் ஸ்பிரே பட்டறைகள், 50 ஐஸ் பிளான்ட்கள் உள்ளன.மாவட்டத்தில் தினமும், 10 மணி நேரத்திற்கு மின்வெட்டு செய்யப்படுகிறது. இதற்கு முன் தினமும் குறைந்தது, 400 முதல், 600 வரை வருவாய் கண்ட தொழிலாளர்கள் தற்போது, இதில் பாதிக்கும் குறைவாகவே வருவாய் கிடைப்பதால் வாடி வருகின்றனர்.படகு உரிமையாளர்கள் குறைந்தது, 2,000 முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை ஈட்டி வந்த வருமானமும் வெகுவாக குறைந்துவிட்டது.

கன்னியாகுமரி : கன்னியாகுமரி முதல் நீரோடி வரை, 67 கி.மீ., நீண்டு கிடக்கும் கடற்கரையில், 50க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. இங்கு சின்னமுட்டம், குளச்சல் என, இரண்டு துறைமுகங்கள் உள்ளன.விசைப்படகுகள் மீன் பிடிக்கச் சென்றால், ஒரு வார காலம் வரை ஆழ்கடலில் தங்கியிருந்து, மீன் பிடிக்கின்றனர். இவ்வாறு பிடிக்கும் மீன்களை, ஐஸ்கட்டிகளில் வைத்து கெடாமல் வைக்கின்றனர். தற்போதைய மின்தடை காரணமாக, ஐஸ்கட்டிகளுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளதோடு, விலை உயர்வும் ஏற்பட்டுள்ளதாக, மீனவர்கள் தெரிவித்துள்ளனர். மின்வெட்டு காரணமாக மீன் வலை உற்பத்தியிலும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

யார் காரணம்: மீன்பிடி தொழில் நசிந்து போகும் போது, அதை பற்றி பெரிய அளவில், அரசோ, அரசியல் கட்சிகளோ ஆழ்ந்து சிந்தித்து, அவசர நடவடிக்கை எடுக்கக் காணோம். கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து போராட்டம் நடத்தும் சிலருக்கு ஆதரவாக, குரல் கொடுக்கின்றனர். மின் தட்டுப்பாடு இத் தொழிலை உருக்குலைத்துவிட்டது. இதில் இருந்து மீளவும், தற்போது ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட எதிர்காலத்தில் நிரந்தர வழிகாணவும், சிந்திக்கும் எண்ணம் கொண்டவர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்த நிலையில், இலங்கை அரசும் தன் பங்குக்கு நமது மீனவர் வாழ்வாதாரத் தொழிலை முழுவீச்சில் இயங்கவிடாமல் தடுத்து வருவது, மற்றொரு அபாயமாகும்.

நன்றி: தினமலர்

0 comments:

Post a Comment