Sunday, May 6, 2012

ஷேர் மார்க்கெட் - 1

பங்குச்சந்தை ஆத்திச்சூடி - சொக்கலிங்கம் பழனியப்பன்


நாணயம் விகடன் வாசகர்களுக்கு சொக்கலிங்கம் பழனியப்பன் பற்றிய அறிமுகம் தேவையில்லை. எனினும் புதிய வாசகர்களுக்காக ஒரு சிறிய அறிமுகம்... அமெரிக்காவில் எம்.பி.ஏ. படித்து முடித்துவிட்டு, அங்குள்ள முன்னணி நிதி நிறுவனங்களில் நிதி ஆலோசனைப் பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது சென்னையில் நிதி ஆலோசனை நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

சில மாதங்களுக்கு முன்பு என்னைத் தேடி இளைஞர் ஒருவர் வந்தார்... ''சார் முதலில் எனக்கு ஒன்றை விளக்குங்கள்... ஷேர் மார்க்கெட் எப்படிப்பட்டது? என்னுடைய அப்பாவோ, 'எக்காரணம் கொண்டும் அதில் மட்டும் பணத்தைப் போட்டுவிடாதே. அது குதிரை ரேஸ் மாதிரியானது. சுத்தமான சூதாட்டம்! கையில் பணம் இருந்தால் பேசாமல் பேங்கிலோ போஸ்ட் ஆபீஸிலோ போட்டுவை’ என்கிறார். ஆனால் என் நண்பர்களோ, 'ஷேர்ல போட்டாதான் சூப்பர் லாபம் கிடைக்கும்’ என்கிறார்கள். உண்மையில் ஷேர் மார்க்கெட் முதலீடு சரியா, தப்பா?'' என்று கேட்டார். இவரைப் போலவே பலரும் இருப்பதைத் தெளிவாக உணர்கிறேன்.


ஒருமுறை பன்னாட்டு நிறுவனமொன்றில் வேலை பார்க்கும் ஒருவர் முதலீட்டு ஆலோசனைக்காக என்னை சந்தித்துவிட்டுச் சென்றார். சரியாக இரண்டு மாதங்கள் கழித்து அவரிடமிருந்து எனக்கு ஒரு இமெயில் வந்தது. அதிலிருந்த வாசகங்கள் இதுதான்: 'இப்போது வேலை பார்க்கும் கம்பெனியில் எனக்கு வேலை போய்விடும் போல் உள்ளது. வேறு வேலை கிடைக்க சிறிது காலமாகும். அதுவரை குடும்பச் செலவுகளுக்கு பணம் தேவை. என் நண்பர் ஒருவர் ஷேர் மார்க்கெட்டில் தினசரி வர்த்தகம் செய்வதன் மூலம், ஈஸியாக மாதத்துக்கு ஒரு லட்ச ரூபாய் சம்பாதிக்கலாம் என்று கூறுகிறார். ஆகவே நான் உங்கள் நிறுவனம் மூலம் அக்கவுன்ட் ஆரம்பிக்க விரும்புகிறேன். எனக்கு உதவி செய்ய முடியுமா?''

இந்த மெயிலைப் பார்த்ததும் ஆடிப் போனேன். மெத்தப் படித்தவர்களே இப்படி நினைக்கிறார்கள் என்றால் சாதாரண மனிதர்களின் நிலையை நினைத்துப் பார்க்கவே கலக்கமாக இருந்தது. அவருக்கு என்ன பதில் சொன்னேன் என்பதை அடுத்து வரும் வாரங்களில் சொல்கிறேன்.

மூன்று மாதங்களுக்கு முன்பு குமரி மாவட்டத்திலிருந்து, 70 வயதான ஒருவர் எனது பெயரையும், நிறுவன முகவரியையும் ஒரு காகிதத்தில் குறித்து கொண்டு காலை 11 மணி வாக்கில் என் அலுவலகத்துக்கு வந்தார். தன்னிடம் சில ஆயிரம் ரூபாய்கள் உள்ளது என்றும், அதைப் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்றும் சொன்னார். வந்தவரை உட்கார வைத்து, பங்குச் சந்தை பற்றி பக்குவமாக எடுத்துச் சொல்லி புரிய வைத்தேன்.

பங்குச் சந்தையின் அடிப்படை பற்றி தெரியாத பலரும், ''சார், எனக்கு டே டிரேடிங் டிப்ஸ் தர முடியுமா?'' என்று கேட்கிறார்கள். ''டெக்னிக்கல் அனலிஸிஸ் சொல்லித்தாங்க'' என்றுகூட சிலர் மிரட்டுகிறார்கள்! சில தினங்களுக்கு முன்பு மெட்ராஸ் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில், மாதந்தோறும் நடக்கும் முதலீட்டாளர்கள் விழிப்புணர்வு கூட்டத்தில் பேச என்னை அழைத்திருந்தார்கள். பேச்சு முடிந்ததும் கேள்வி நேரம் தொடங்கியது. 'என்னிடம் தங்க நகைகள் உள்ளது. வங்கியில் அடகு வைத்தால் ஆண்டுக்கு 12% வட்டிக்கு தொகை கிடைக்கும். அந்தப் பணத்தை எடுத்து பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் எப்படியும் ஆண்டுக்கு 24% கிடைத்துவிடும். நான் அதைச் செய்யலாமா?' என்று ஒரு முதலீட்டாளர் கேட்டார். இந்தக் கேள்வியை என்னிடம் கேட்ட நூறாவது நபர் இவர்!

இது மாதிரி பங்குச் சந்தை குறித்து நூற்றுக்கணக்கான கேள்விகள் உங்கள் மனதிலும் ஓடிக் கொண்டிருக்கும். அவை அனைத்தையும் ஒட்டு மொத்தமாக தெளிவுபடுத்தவே இந்த புதிய தொடர். இத்தொடரின் வெற்றி வாசகர்களாகிய உங்கள் கையில்தான்! ஷேர் மார்க்கெட் அடிப்படை பற்றி உங்களுக்கு எந்த சந்தேகம் இருந்தாலும் பரவாயில்லை. அந்தக் கேள்வியை நாணயம் விகடனுக்கு அனுப்பி வையுங்கள். உங்கள் கேள்விக்குப் பதில் சொல்லக் காத்திருக்கிறேன்.
அடுத்தவாரம் உங்களைச் சந்திக்கும் வரை உங்கள் வீட்டில் இன்டர்நெட் இணைப்பு இருப்பின், நேரம் கிடைக்கும் போது கீழ்க்கண்ட இந்த இரண்டு இணையதளங்களைச் சென்று பாருங்கள்.

நன்றி: நாணயம் விகடன்

0 comments:

Post a Comment