Sunday, May 6, 2012

ஷேர் மார்க்கெட் - 13


நீங்க 'மாத்தியோசி' ரகமா? 'கான்ட்ரா'வுல கலக்கலாம் வாங்க!
சென்ற வாரம் குரோத் இன்வெஸ்ட்டிங் பற்றி பார்த்தோம்... இந்த வாரம் கான்ட்ரா இன்வெஸ்ட்டிங் பற்றி அறிந்து கொள்வோம்...
நீங்கள் கடலிலோ, ஆற்றிலோ எதிர்நீச்சல் போட்டிருக்கிறீர்களா? எல்லோரும் படிக்கும் படிப்பை விட்டுவிட்டு மிகவும் அதிக மக்கள் படித்திராத படிப்பைப் படித்து அதில் வெற்றி கண்டவரா? பொதுவாக அனைவரும் செய்யும் தொழிலையும், வேலையையும் போல் அல்லாமல், நீங்கள் மாற்றுத் துறையில் சென்று ஜெயித்தவரா? இவற்றிற்கெல்லாம் பதில் ஆம் என்றால், உங்களுக்கு கான்ட்ரா முதலீட்டு முறை கனகச்சிதமாகப் பொருந்தும்.
கான்ட்ரா முதலீட்டு முறை என்றால் என்ன?

சுருக்கமாகச் சொன்னால், பெருவாரியான மக்கள் யோசிப் பதற்கு எதிர்மறையாக யோசித்து அதன் மூலம் லாபம் ஈட்டுவதுதான் கான்ட்ரா முதலீடு. ஒரு பங்கோ அல்லது துறையோ, அனைவரும் விற்றுவிட்டுச் செல்லும்போது அந்தத் துறை யின் / பங்கின் மதிப்பு வெகுவாகக் குறைந்து காணப்படும். ஒரு சிறிய உதாரணம்: நவம்பர் 2008-ல் டாடா மோட்டார்ஸ் பங்கின் விலை சில காரணங்களினால் 125-க்குச் சென்றது. அப்பங்கின் தற்போதைய விலை 1,205.55 (பிப்ரவரி 18, 2011).
அந்த நேரத்தில் கொஞ்சம் மாற்றி யோசித்து, இந்தப் பங்கை துணிந்து வாங்கி கான்ட்ரா இன்வெஸ்ட்டிங் செய்திருந்தால், இன்று கொள்ளை லாபம் பார்த்திருக்கலாம். இது போன்ற எத்தனையோ உதாரணங்களை கான்ட்ரா இன்வெஸ்ட்டிங்கிற்கு சொல்ல முடியும்.
ஏதோ ஒரு காரணத் திற்காக முழுச் சந்தையே அடிபட்டிருக்கலாம் அல்லது தற்போது டெலிகாம் அல்லது இன்ஃப்ராஸ்ட்ரக்சர் துறையில் நிகழ்வது போல ஓரிரு துறைகள் அடிபடலாம். அல்லது டாடா மோட்டார்ஸ் போல ஏதாவது ஒரு பங்கு அடிபட்டிருக்கலாம். அது போன்ற சமயங்களை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்பவர்கள்தான் கான்ட்ரா முதலீட்டாளர்கள். சில பெரிய முதலீட்டாளர்கள் ஒரு பங்கின் அல்லது துறையின் மீது இருக்கும் வெறுப்பினால், அப்பங்கினை அல்லது அந்தத் துறையில் இருக்கும் அனைத்துப் பங்குகளையும் விற்று விட்டுச் செல்வர்.
பங்குகளின் மதிப்பின் ஒரு பகுதி சப்ளை அண்ட் டிமாண்டை வைத்து முடிவு செய்யப்படுகிறது. சப்ளை அதிகமாகும் அதுபோன்ற சமயங்களில் என்ன நடக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை - தக்காளி அதிகமாக விளையும் பொழுது கர்நாடகாவில் ரோட்டில் போட்டு அழிக்கும் கதைதான் நமது பங்குச் சந்தையிலும் நடக்கும்! அப்போது நமது பெரிய தந்தைகள் எல்.ஐ.சி. மற்றும் வாரன் பஃபட் (இந்தியச் சந்தையில் அவர் இன்னும் முதலீடு செய்ய ஆரம்பிக்கவில்லை. மார்ச் மாதத்தில் முதல் முறையாக பெங்களூருக்கு வருகிறார் பஃபட்.) போன்றவர்கள் வாங்க ஆரம்பிப்பார்கள். நீங்களும் ஏன் அவர்களைப் போன்று இருக்கக்கூடாது?

கான்ட்ரா முதலீட்டு முறையில் உள்ள நன்மைகள் என்ன? எல்லோரும் ஆட்டுமந்தைக் கூட்டத்தைப் போல செல்லும் திசையில் செல்லாமல், மாற்றுத் திசையில் செல்வதால் மலிவான விலையில் பங்குகளை வாங்கலாம். ஏற்கெனவே அடிபட்டுள்ள பங்குகளை வாங்குவதால், மேலும் கீழே செல்வதற்கான வாய்ப்புக் குறைவு. ஆட்டுமந்தைக் கூட்டம் திசை திரும்பும் போது, ஓஹோவென லாபம் கிடைக்குமே! பிறகென்ன, ஆட்டுமந்தைகளின் திசையிலிருந்து நீங்களும் மாறிவிடுங்கள். நீண்ட நாட்களுக்கு, சொத்தைப் போல் பங்குகளை வாங்கி வைத்து தங்களது செல்வத்தை வளர்க்க விரும்புகிறவர்களுக்கு இதைவிட அரிய சந்தர்ப்பம் வேறு ஏதும் கிடைக்காது!
கான்ட்ரா முதலீட்டு முறையில் உள்ள நல்ல விஷயங்களைச் சொல்லிவிட்டேன். ஆனால், அதில் சில அசௌகரியங்களும் இருக்கிறது. அவை என்ன?
எல்லோரும் செல்லும் திசையி லிருந்து நாம் மாறுபட்டுச் செல்வதால், துணைக்கு ஆளில்லாமல், நடுக்காட்டில் தன்னந் தனியாக நடந்து செல்வதுபோல் இருக்கும். இம்முதலீட்டு முறை ஒருவரின் பொறுமையை மிகவும் சோதிக்கும். நீங்கள் வாங்க வாங்க, பங்கின் விலை இறங்கிக் கொண்டே செல்லும். புதிதாக இந்த முறையை பின்பற்ற ஆரம்பித்தவர்களுக்கு, ஆழம் தெரியாமல் காலை விட்டு விட்டோமோ என்று தோன்றும். சில துறைகளின் / பங்குகளின் விலை ஏறுவதற்கு நாம் நினைத்ததைவிட காலம் அதிகமாகலாம். சந்தை ஏறிக் கொண்டிருக்கும்போது  நமது போர்ட்ஃபோலியோ மட்டும் ஆட்டுக்கல் போல நகராமல் அதே இடத்திலேயே இருக்கும்.
இந்த அசௌகரியங்களை எப்படிச் சமாளிக்கலாம்? எந்த ஒரு புது அணுகுமுறையையும் போல ஆரம்ப காலங்களில் இது சற்றுக் கடினமாகத்தான் இருக்கும். பொறுத்திருந்து ஓரிரு முதலீடுகளில் நல்ல லாபம் கண்டவுடன், தன்னம்பிக்கை தானாகவே வந்துவிடும். முதலீட்டிற்கு உகந்த பங்கின் விலை ஏதோ ஒரு காரணத்தினால் குறைய ஆரம்பிக்கின்றது என்று வைத்துக் கொள்வோம். உங்களுக்கும் அந்தப் பங்கை வாங்குவதில் ஆசை இருக்கின்றது. அதுபோன்ற சமயத்தில் ஒரு மிகச் சிறிய அளவை வாங்கிக் கொள்ளுங்கள். பிறகு அந்தப் பங்கின் விலை ஏறுவதும் இறங்குவதுமாக, சறுக்கு விளையாட்டுப் போல், இருக்கும். பட்ட இடத்திலேயே படும் என்பது போல, மற்றுமொரு நிகழ்வு வந்து அந்தப் பங்கின் விலை மேலும் வீழ்ச்சி காணும். அப்போது மேலும் அந்தப் பங்குகளை வாங்குங்கள். இதுபோல் வாங்குவதற்கு இரண்டு/மூன்று முறை வாய்ப்புகள் கதவைத் தட்டும். அதை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
அவ்வாறு வாங்கிய பங்குகளின் சராசரி விலை, நீங்கள் கடைசியாக வாங்கிய விலையைவிட அதிகமாகத்தான் இருக்கும். அதற்காக கவலைப்படாதீர்கள். ஒரு பங்கு உச்சபட்சமாக அல்லது குறைந்தபட்சமாக எவ்வளவு செல்லும் என்று அந்நிறுவனத்தை நிறுவியவருக்கே தெரியாது. ஆகவே நீங்களும் அவரும் ஒரே படகில்தான் பயணம் செய்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்!

நீங்கள் கவனமாக இருக்க வேண்டிய நேரம் - பங்கு விலை நீங்கள் வாங்கிய சராசரி விலைக் கெல்லாம் கீழ் அதலபாதாளத்திற்குச் சென்று விட்டு 'யூ' டர்ன் அடிக்கும் பொழுதுதான். சிறிது லாபம் வந்துவிட்டதே என்று விற்றுவிட்டு வெளியேறி விடாதீர்கள். ஒரு நல்ல கணிசமான லாபத்தைக் கண்ட பிறகே வெளியேறுங்கள்! அதுவே நீங்கள் நீண்ட கால முதலீட்டாளர் என்றால், அப்பங்கினை உங்களது வீட்டைப் போல் எக்காலத்திற்கும் வைத்துக் கொள்ளுங்கள்! நீங்கள் புதிய முதலீட்டாளர் என்றால் நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் பங்குகளுக்குள் கான்ட்ரா தேடலை வைத்துக் கொள்ளுங்கள்.
ரிவார்டை சொல்லியாச்சு. இனி இந்த முறையில் உள்ள ரிஸ்க் என்ன தெரியுமா?
எந்த ஒரு முதலீட்டு முறையையும் போல இந்த முதலீட்டு முறையிலும் ரிஸ்க் உள்ளது. நீங்கள் வாங்கிய பங்கு இறங்கிக் கொண்டே சென்று கடலில் மூழ்கி விடலாம். இந்தியா போன்ற வளரும் பொருளாதாரங்களில் பெரிய நிறுவனங்களுக்கு அது போன்ற மூழ்கும் ரிஸ்க் மிகக் குறைவு என்றாலும், எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது! இது போன்ற பிரச்னைகளில் இருந்து உங்களைப் பாதுகாத்து கொள்வதற்கு, ஒரு பங்கின் கனம் உங்கள் போர்ட்ஃபோலியோவில் 5%-ற்க்கு அதிகமாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஒரு பங்கு நன்றாக அடிபடுவதற்கு முன்பே நுழைந்துவிடுவதற்கான வாய்ப்பு உள்ளது. எல்லோரும் லாபத்தை பார்த்துக் கொண்டிருக்கும் போது, கான்ட்ரா முதலீட்டாளர் லாபம் காணாமல் போகக்கூடிய வாய்ப்பும் உண்டு.
கான்ட்ரா முதலீட்டாளர்கள் பயன்படுத்தும் கருவிகள் ஏதாவது உண்டா?
வேல்யூ முதலீட்டாளர்களைப் (Value Investors) போல, இவர்களும் குறைந்த பி/இ, குறைந்த புத்தக மதிப்பு போன்ற பங்குகளைத் தேடிப்பிடிப்பர். அதற்குமேல் மார்க்கெட் சென்டிமென்ட்டை (எல்லோரும் விற்கக் கூறும் பொழுது வாங்குவதும், பிறகு நேர்மாறாகச் செயல்படுவதும்) பார்த்தும் முதலீடு செய்வர். இவற்றிற்கெல்லாம் மேலாக சந்தை ஏற்ற இறக்கத்தைக் கணக்கிடக்கூடிய விக்ஸ் குறியீட்டையும் (India VIX – India Volatility Index) பார்த்து முதலீடு செய்வர்.
விக்ஸ் குறியீடு ஏற்ற இறக் கத்தை குறிப்பதால் சந்தை மிக வேகமாக இறங்கினாலோ அல்லது ஏறினாலோ இதன் அளவு அதிகரிக்கும். வாங்க விற்க நினைப்பவர்கள் குறியீட்டை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆனாலும் விக்ஸ் என்ற ஒரு குறியீட்டை மட்டுமே வைத்து முதலீட்டை முடிவு செய்துவிட முடியாது. அதையும் ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

 நன்றி: நாணயம் விகடன்

0 comments:

Post a Comment