Sunday, May 6, 2012

ஷேர் மார்க்கெட் - 12


சென்ற இதழில் வேல்யூ இன்வெஸ்ட்டிங் யுக்தி பற்றி விளக்கமாகப் பார்த்தோம்... இம்முறை குரோத் இன்வெஸ்டிட்ங் யுக்தி பற்றி விளக்கமாகப் பார்ப்போம். ஆங்கிலத்தில் குரோத் என்றால் வளர்ச்சி. வளர்ச்சியை விரும்பாதவர் உலகில் யாராவது இருப்பார்களா? ஆனால் வளர்ச்சி இருக்கும் இடத்தில்தான் அதிக ரிஸ்க்கும் இருக்கும் என்பதை நாம் மறக்கக்கூடாது.
நீங்கள் உங்கள் பெண்ணுக்கு ஒரு நல்ல வரனைத் தேடுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த மாப்பிள்ளையின் குடும்ப நிதி நிலைமை சுமாராக உள்ளது. ஆனால் அந்த மாப்பிள்ளையோ ஒரு நல்ல துடிப்புள்ள இளைஞனாக இருக்கிறார். வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற ஆர்வம் அவரிடம் அதிகமாகவே இருக்கிறது. தன் சொந்தக்காலில் நிற்க ஆசைப்படுகிறார். எல்லா அறிகுறிகளையும் பார்க்கும்போது, அந்த இளைஞர் எதிர்காலத்தில் நல்ல வளர்ச்சியைக் காண்பார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். உங்களது பெண்ணிற்கும் அவரைப் பிடித்துப் போய்விட்டது. திருமணம் முடிகிறது. நம்பிக்கை பொய்க்காமல் வெற்றிகரமான தம்பதிகளாக வாழ்ந்து காட்டுகிறார்கள் அவர்கள். இதுபோல் எத்தனையோ கதையைக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளில் வளர்ச்சிப் பங்கு களுக்கு உதாரணங்களைச் சொல்ல வேண்டுமென்றால், இன்ஃபோசிஸ், விப்ரோ, சிப்லா, பி.ஹெச்.இ.எல், எல் அண்ட் டி என பல நிறுவனங்களைச் சொல்லலாம். இன்றும் இந்தியப் பொருளாதாரம் அதிவேகமாக வளர்ந்து வருவதால், இன்று ஓரளவுக்கு சிறிதாக இருக்கும் நிறுவனங்கள் எதிர்காலத்தில் வளர்ச்சிப் பங்குகளாக மாறி, பெரும் நிறுவனங்களாக வளர்ந்தி ருக்கும். ஒரு புதிய முதலீட்டாளர் ஒவ்வொரு சிறிய நிறுவனப் பங்கைப் பார்க்கும் போதும், இந்த நிறுவனம் நாளைக்கு இன்ஃபோசிஸ் போன்ற ஒரு பெரிய நிறுவனமாக வளர்ந்துவிடும் என்று நினைத்துவிடுவார். எல்லா நிறுவனங்களும் இன்ஃபோசிஸ் போல் வளர்ந்துவிடாது. ஆகவே குரோத் நிறுவனப் பங்குகளைப் பொறுக்குவதில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்!
அதிவேகமாக வளர்ந்து வரும் நிறுவனங்களுக்கு திடீரென்று எதிர்பாராத பிரச்னைகளும் வரும். அப்படி வரும்போது அதைச் சமாளித்து அதிலிருந்து மீண்டு வரக்கூடிய நிர்வாகத் திறன் கொண்ட நிறுவனமாக அது இருக்க வேண்டும். வேல்யூ நிறுவனங்களைவிட குரோத் நிறுவனங்களில் முதலீடு செய்வதில் ரிஸ்க் அதிகம்; ரிவார்டும் அதிகம்!
சரி, குரோத் நிறுவனப் பங்குகளைத் தேர்ந்தெடுக்கும் விதம் என்ன? கீழ்கண்ட சில வரைமுறைகளை அடிப்படையாக வைத்துப் பார்த்தால் எவை குரோத் பங்குகள் என்பது உங்களுக்குத் தெளிவாகவே புரியும்.
1. கடந்த 5/ 10/ 15 வருடங்களில் டேர்ன் ஓவர், நிகர லாபம், இ.பி.எஸ். போன்ற அளவுகோல்களில் நல்ல வளர்ச்சியைக் கண்டிருக்க வேண்டும் ( உதாரணத்துக்கு 20%-க்கு மேல்!). அதன் துறை சார்ந்த நிறுவனங்களைவிட அதிகமாக வளர்ந்திருக்க வேண்டும் (குறைந்தது 10 சதவிகிதத்துக்கும் அதிகமாக)
2. கடந்த காலத்தில் மட்டுமல்ல, அடுத்த 5/ 10/ 15 வருடங்களில் அந்நிறுவனத்தின் டேர்ன் ஓவர், நிகர லாபம், இ.பி.எஸ். போன்றவற்றின் வளர்ச்சியும் அதிகமாவதற்கான வாய்ப்பு உள்ளதா என்று ஆய்வு செய்ய வேண்டும். அந்நிறுவனம் சார்ந்த துறைக்கு வளர்ச்சி வாய்ப்பு, போட்டிகள் மற்றும் நேர்மையான நிர்வாகம் ஆகியவை உள்ளனவா என்று அனலைஸ் செய்ய வேண்டும்.
3.செலவுகள் கட்டுக்குள் உள்ளனவா/ இனி வரும் காலங்களிலும் அது கட்டுக்குள் இருக்குமா என்று பார்க்க வேண்டும்.
4. திறமையான நிர்வாகத்தைக் கொண்டுள்ளதா, குறுக்கு வழியில் செல்லாத புரமோட்டர்களைக் கொண்டுள்ளதா என்று பார்க்க வேண்டும்
5. அடுத்த 3 அல்லது 4 ஆண்டுகளில் பங்கின் விலை இரட்டிப்பு ஆகுமா என்பதையும் அலச வேண்டும்.
6. ஆர்.ஓ.இ. (ROE – Return On Equity) வளர்ந்து கொண்டே இருக்கிறதா? (ஆர்.ஓ.இ = நிகர லாபம்/ பங்குதாரர்களின் முதலீடு)
சரி, குரோத் நிறுவனங்களின் குணாதிசயங்கள் என்னென்ன?
இவைகள் வேல்யூ பங்குகளுக்கு நேர் எதிர்மாறாக இருக்கும். உதாரணத்துக்கு, அதிக பி/இ,
பி/பிவி கொண்டவையாக இருக்கும். வரும் லாபம் அனைத்தையும் இந்நிறுவனங்கள் திரும்ப தனது தொழில் வளர்ச்சிக்காக முதலீடு செய்து விடுவதால், டிவிடெண்ட் பெரும் பாலும் மிகமிகக் குறைவாக இருக்கும். இந்நிறுவனங்கள் ஐ.டி., பயோடெக்னாலஜி போன்ற புதிய பொருளாதாரத்தைச் சார்ந்த நிறுவனங்களாக இருக்கும் அல்லது, அதிவேகமாக வளர்ந்து வரும் பகுதிகளில்/நாடுகளில்/துறைகளில் இடம் பெற்றிருக்கும். அந்நிறுவனங்களின் அதீத வளர்ச் சியால், நிகர லாபம் அதிகரித்துக் கொண்டே செல்லும். அதனால் அதன் பங்கு விலையும் உயர்ந்து கொண்டே செல்லும். இது போன்ற நிறுவனங் களில் முதலீடு செய்பவர்கள் பெரும்பாலும் முதலீட்டைப் பெருக்கும் (Capital Appreciation) நோக்கத்துடனேயே முதலீடு செய்வர்.
தாமஸ் ரோவ் பிரைஸ் ஜூனியர் (Thomas Rowe Price Jr.) என்பவரை குரோத் இன் வெஸ்ட்டிங் யுக்தியின் குரு என்று கூறலாம். 1937-ல் டி. ரோவ் பிரைஸ் அசோஸியேட்ஸ் என்ற பெயரில் தனது நிறுவனத்தை ஆரம்பித்தார். இவர் வாங்கிய பங்குகளை 'ரோவ் பிரைஸ் பங்குகள்’ என்று சந்தை கூறிய காலம் உண்டு. திறமையான நிர்வாகம் கொண்ட, வளமான துறைகளில் உள்ள, அதிக டிவிடெண்ட் மற்றும் வருமானம் கொடுக்கக்கூடிய, பணவீக்கத்தைவிட,  நாட்டின் பொருளாதாரத்தைவிட அதிக மான வளர்ச்சியைக் காணக்கூடிய நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்தார்.
மேலும், வளர்ச்சியுள்ள நிறுவனங்களை அவர் தேடிய போது சில குணாதிசயங்களைக் கண்டறிந்தார். சிறந்த ஆராய்ச்சி வசதி, குறைந்த போட்டி, மிகக் குறைந்த அரசாங்க கட்டுப்பாடு, குறைந்த மொத்த ஊழியர் சம்பளம் (அதே சமயத்தில் நல்ல சம்பளம் பெறக்கூடிய ஊழியர்கள்), குறைந்தது 10 சதவிகிதம் போட்ட முதலுக்கு வருமானம், உயர்ந்த லாப விகிதம், அதிக இ.பி.எஸ். வளர்ச்சி போன்றவை ஆகும்.
வாரன் பஃபட் போன்றோர் வேல்யூ மற்றும் குரோத் இன்வெஸ்ட்டிங் ஆகிய இரண்டுக் கும் பெரிய வித்தியாசம் இல்லை என்று கூறுகின்றனர். அவரைப் பொறுத்தவரை 'வேல்யூ ஒரு கால் என்றால் குரோத் இன்வெஸ்ட்டிங் இன்னொரு கால். இந்த இரண்டு கால்களும் இடுப்பில்தான் சேர்கின்றன'  என்கிறார்.

பீட்டர் லிஞ்ச் (Peter Lynch) என்பவர் மற்றுமொரு பிரசித்தி பெற்ற அமெரிக்க முதலீட்டாளர். இவர் ஃபிடலிட்டி இன்வெஸ்ட் மென்ட்ஸில் வெற்றிகரமான ஃபண்ட் மேனேஜராக நீண்ட நாட்கள் இருந்தார். இவர் எழுதிய பல புத்தகங்கள் (One Up On Wall Street, Beating the Street, and Learn to Earn) மிகவும் பிரசித்தம். இவர் வேல்யூ மற்றும் குரோத் ஆகிய இரு இன்வெஸ்ட்மென்ட் யுக்திகளையும் சேர்த்து 'கார்ப்’ (GARP – Growth At Reasonable Price) என்ற யுக்தியைப் பாப்புலராக்கினார்.
இவ்வகையான முதலீட்டா ளர்கள் சந்தையைவிட அதிக வளர்ச்சியுள்ள (குரோத் இன் வெஸ்ட்டிங்) அதே சமயம் குறைவான மதிப்புடைய (வேல்யூ இன்வெஸ்ட்டிங்) பங்குகளை நாடிச் செல்வர். இவ்வாறு தேடும்போது இரு வகையான முத லீட்டின் கோடிக்குச் செல்லாமல், குரோத் உள்ள அதே சமயம் குறைந்த பி/இ உள்ள பங்குகளை நாடிச் செல்வர்.
இவ்வகையான முதலீட்டை தேடுவதற்கு பல வகையான அளவு கோல்கள் இருந்த போதிலும், 'பெக்’[PEG – Price/ Earings to (EPS) Growth] விகிதம் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ஒன்றுக்கு குறைவாக இருந்தால் நல்ல முதலீடு என்று கருதப் படுகிறது. உதாரணத்துக்கு நீங்கள் தேர்வு செய்த பங்கின் பி/இ ஐந்து என வைத்துக் கொள்வோம். அந்நிறுவனத்தின் கடந்த ஐந்து ஆண்டு கால இ.பி.எஸ். வளர்ச்சி ஆண்டுக்கு 10% எனக் கொண்டால், அதன் 'பெக்’ விகிதம் (5/10 = 0.5) 0.5 ஆகும். இந்த உதாரணத் தில் 'பெக்’ விகிதம் ஒன்றிற்கு குறைவாக இருப்பதால், இதை ஒரு நல்ல முதலீட்டு வாய்ப்பாகக் கருதலாம்.
அடுத்து வாரத்தில் கான்ட்ரா மற்றும் பேஸிவ் இன்வெஸ்ட்டிங் முதலீட்டு முறை பற்றிக் காண்போம்.

 நன்றி: நாணயம் விகடன்

0 comments:

Post a Comment