Sunday, May 6, 2012

ஷேர் மார்க்கெட் - 15

டந்த சில இதழ்களில் வெவ்வேறு முதலீட்டு யுக்திகள் பற்றியும் அவற்றின் நன்மை, தீமைகள் பற்றியும் பார்த்தோம்... முதலீட்டு யுக்தி களைப் பொறுத்தவரை ஓர் உண்மையை உணர வேண்டும். எல்லா முதலீட்டு யுக்திகளும் எல்லோருக்குமானதல்ல. சில யுக்திகள் சிலருக்கு சரிவரும்; சில யுக்திகள் சிலருக்கு கூடவேகூடாது. ஒவ்வொருவரும் தங்களுக்கு எவ்வகையான முதலீட்டு யுக்திகள் ஒத்துவரும் என்று ஆராய்ந்து அறிந்து, அதைத் தேர்வு செய்துகொள்ள வேண்டும்.

நாம் இதுவரை கண்ட அனைத்துமே நீண்ட கால முதலீட்டாளர்களுக்கான முதலீட்டு யுக்திகளே. குறுகிய காலத்தில் டிரேட் செய்பவர் களுக்கு மெக்கானிக்கல் டிரேடிங், மொமண்டம் டிரேடிங், ஸ்விங் டிரேடிங் என பல வகையான டிரேடிங் யுக்திகள் உள்ளன. ஆனால், இவை எல்லாம் நீண்ட கால நோக்கில் முதலீடு செய்ய நினைக்கும் முதலீட்டாளர்களுக்கு கொஞ்சம் அதிகப்படியான சமாசாரமே. ஒரு பங்கை சரியாக மதிப்பிடத் தெரிந்தால் போதும்; பங்குச் சந்தையில் நீங்கள் பணத்தைக் குவிப்பது உறுதி. ஆனால், பங்கை எப்படி மதிப்பிடுவது?



இரண்டு வகைகளில் பங்கை மதிப்பிடலாம். ஒன்று, ஃபண்டமென்டல் (Fundamental); மற்றொன்று டெக்னிக்கல். புதிதாக சந்தை யில் நுழைபவர்கள் பலர் டெக்னிக்கல் அனாலிஸிஸை டி.வி-யிலும் பத்திரிகைகளிலும் பார்த்து, சந்தையில் பணத்தைப் போட்டால் நன்றாகச் சம்பாதித்து விடலாம் என்று நினைத்து நுழைகிறார்கள்.  ஓரிரு தடவை பெரிய இழப்புகள் ஏற்படவும், இது ஒரு சூதாட்டம் என்று நினைத்து பங்கு முதலீட்டை விட்டே அடியோடு வெளியேறி விடுகிறார்கள். இன்னும் சிலரோ எவ்வாறு பங்குகளைத் தேர்ந்தெடுப்பது, அல்லது எந்த வழி சிறந்த வழி - டெக்னிக்கலா அல்லது ஃபண்டமெண்டலா என்ற குழப்பத்திலேயே இருக்கிறார்கள். உங்களுக்கு இது மாதிரியான குழப்பம் இருக்கிறது என்றால் இதோ என் கருத்து: ''பங்கு முதலீட்டுக்குச் சிறந்த வழி என்பது ஒரு நிறுவனத்தின் ஃபண்டமெண்டல்ஸைப் பார்த்துச் செய்வதுதான். ஒரு குழந்தையை நாம் எல்.கே.ஜி-யில் படிக்கச் சேர்க்கிறோம். அந்தக் குழந்தை பதினேழு பதினெட்டு ஆண்டுகள் பள்ளி மற்றும் கல்லூரியில் படித்து தேர்ச்சி பெற்ற பிறகுதான் ஒரு நல்ல வேலைக்குப் போகிறது. அதுவரை பெற்றோர்களாகிய நாம் பொறுமையாக இருக்கிறோம். இந்த காலகட்டத்திற்குள் நம் குடும்பத்தில் பலவிதமான கஷ்டங்கள் வந்தாலும், அதை எல்லாம் தாங்கிக் கொண்டு, குழந்தையைப் படிக்க வைக்கிறோம்.
ஆனால், இந்தப் பொறுமை இல்லாமல், குழந்தை பள்ளியில் படிக்கும் போதோ அல்லது கல்லூரியில் படிக்கும் போதோ நிறுத்திவிட்டால், அந்தக் குழந்தைக்கு என்ன வேலை கிடைக்கும் என்பது நமக்கே தெரியும். குழந்தையைப் போன்றது தான் முதலீடும். திடீரென்று வாங்குவது, திடீரென்று விற்பது கூடவே கூடாது. எனவே, டெக்னிக்கலைப் பற்றி நீண்டகால முதலீட்டாளர்கள் கவலைப்பட வேண்டியதில்லை'' என்பதே என் கருத்து.
ஆகவே, ஃபண்டமென்டல் அனாலிசிஸ்-ல் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய வெவ்வேறு விதமான அளவுகோல்களைப் பற்றி இனி விரிவாகக் காண்போம்...
பொருளாதாரம்:
நிறைய பணத்தை ஒரே தடவையில் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு முக்கியமான அளவுகோல் பொருளாதாரத்தின் நாடித்துடிப்புகளாகிய ஜி.டி.பி. வளர்ச்சி, பணவீக்கம், வட்டி விகிதம், வேலையில்லாதோர் எண்ணிக்கை போன்றவை ஆகும். உதாரணமாக, வட்டி விகிதம் உயர்ந்தால் பங்குச் சந்தை இறங்கும். இந்த மாற்றத்தால் நம் லாபம் குறையும் என்று பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் நினைப்பதே இதற்குக் காரணம். ஆனால், இந்தியா போன்ற பெரிய பொருளாதாரங்களில் வட்டி விகிதம் ஏறுவதும் இறங்குவதுமாகவே இருக்கிறது. ஆகவே ஒவ்வொரு தடவையும் வட்டி விகிதம் ஏறி, பங்குச் சந்தை சரிவதை நல்ல வாய்ப்பாக நினைத்து, முதலீடு செய்யலாம்.
அதே போல் பல காரணங் களால் பங்குச் சந்தை 2008-ம் ஆண்டு விழுந்தது. இது போன்ற சந்தர்ப்பங்கள் எப்போதாவது வர வாய்ப்புள்ளது. இது போன்ற சமயங்களில் புதிதாக முதலீடு செய்வதன் மூலம் முதலீட்டாளர்கள் தங்களுக்கு சாதகமான பலனை உருவாக்கிக் கொள்ளலாம். ஆனால் இப்படி முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்கள் அதிகமாக பணம் வைத்திருக்க வேண்டும். 'கேஷ் இஸ் த கிங்' (Cash is the King)  என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். அவ்வாறு வைத்தி ருக்கும் பணத்தையும் நல்ல தரமான டெபாசிட்டுகளில்/ அரசாங்க பத்திரங்களில் வைத்திருக்க வேண்டும்.
வாரன் பஃபட் போன்ற முதலீட்டாளர்களின் வெற்றியின் ரகசியம் இதுதான். சரியான சந்தர்ப்பம் கிடைக்கும்போது உடனே முதலீடு செய்ய ஏதுவாக பணத்தை ரெடியாக வைத்திருப்பார். எல்லோரும் அலறி அடித்துக் கொண்டு விற்கும் போது அவர் மட்டுமே நம்பிக்கையோடு பணத்தை முதலீடு செய்வார். அதன் விளைவுதான், உலகின் நம்பர் 2 பணக்காரர் என்கிற பெருமை.

துறையின் நிகழ்காலம், எதிர்காலம்:
நீங்கள் வாங்க விரும்பும் நிறுவனம் இருக்கும் துறையின் நிகழ்காலம், எதிர்காலம் எவ்வாறு உள்ளது என்பதை அலசி ஆராயுங்கள். அத்துறையின் வளர்ச்சி, பலம், பலவீனம் போன்ற வற்றை அறிந்து கொள்ளுங்கள். அதிவேக வளர்ச்சியுள்ள துறையா அல்லது அதிக கேஷ் ஃபுளோ உள்ள துறையா என்பதைக் கண்டறியுங்கள்.
புதிய பொருளாதார நிறுவனங்கள் ( நம்நாட்டில் எஸ்.கே.எஸ். மைக்ரோ ஃபைனான்ஸ்) அவ்வப்பொழுது திடீரென்று எழுந்து வரும். அத்துறையின் எதிர்காலம் சூரியன் போல பிரகாசிக்கும் என்று கூறுவார்கள். எத்துறையில் அதிக வாய்ப்புக்கள் இருக்கிறதோ, எத்துறையில் அதிக வளர்ச்சி இருக்கிறதோ, எத்துறை புதிய பொருளாதாரமாக உருவெடுக்கிறதோ அத்துறையில் அதிக ரிஸ்க்கும் இருக்கிறது என்பதை மனதில் கொண்டு செயல்படுங்கள்.
வேல்யூ இன்வெஸ்ட்டார்கள் இதுபோன்ற அதிக வளர்ச்சியுள்ள அல்லது புதிய பொருளாதார நிறுவனங்களில் முதலீடு செய்ய அஞ்சுவர். அதே சமயத்தில் சீரான வளர்ச்சியில் உள்ள பழைய பொருளாதார துறைகளைப் பற்றி ஈஸியாக அலசி ஆராய முடியும். ஏனென்றால் அத்துறையைப் பற்றிய புள்ளிவிவரங்கள் எளிதில் கிடைக்கும். தவிர, நம்மால் பழைய அனுபவத்தை வைத்து ஆராயவும் முடியும்.
சில துறைகள் சில சமயங்களில் அதலபாதாளத்தில் அடிபட்டுக் கிடக்கும். எல்லாத் துறைகளும் ஒரே மாதிரியாக வளராது. சில சமயங்களில் மருந்துத்துறை மந்தமாக இருக்கும், இன்னும் சில சமயங்களில் எஃப்.எம்.சி.ஜி. (FMCG -  Fast Moving Consumer Goods)  துறை மந்தமாக இருக்கும். வேறு சில தருணங்களிலோ இன்ப்ஃராஸ்ட்ரக்சர் துறை மந்தமாக இருக்கும். அதுபோன்ற சமயங்களில் அத்துறையில் உள்ள சிறந்த நிறுவனங்களின் பங்குகளை வாங்கிச் சேர்ப்பது நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு நன்மை பயக்கும்.
நீங்கள் முதலீடு செய்யப் போகும் துறையைப் பற்றிய பரிச்சயம் உங்களுக்கு எவ்வளவு உள்ளது என்று பாருங்கள். ஒரு துறையைப் பற்றிய பரிச்சயம் இருக்கும் போது அந்நிறுவனத்தின் பலம்/பலவீனம்/நிதி நிலைமை போன்றவற்றை ஆராய்வது ஈஸியாக இருக்கும். சுருக்கமாகச் சொல்லப் போனால் உங்களுக்குத் தெரிந்த/புரிந்து கொள்ளக்கூடிய துறைகளில் முதலீடு செய்வதே நல்லது.

 நன்றி: நாணயம் விகடன்

0 comments:

Post a Comment