Sunday, May 6, 2012

ஷேர் மார்க்கெட் - 11


சென்ற இதழில் பங்குகளின் மதிப்பைக் கணக்கிட உதவும் சில அளவுகோல்களைப் பற்றி கண்டறிந்தோம். சில முதலீட்டு யுக்திகள் பற்றியும் கண்டோம். அவ்விதமான முதலீட்டு யுக்திகளைப் பற்றி இன்னும் சற்று விரிவாகக் காண்போம்...
வேல்யூ இன்வெஸ்ட்டிங்: சீசனில் ஒரு கிலோ தக்காளி 3 ரூபாய்க்கு விற்பனையாகிறது. நீங்கள் தக்காளியைப் பயிர் செய்தால், அதன் அடக்க விலை ஒரு கிலோவிற்கு 7 ரூபாயாகும். ஆக உற்பத்தி விலையைவிட கிலோவிற்கு 4 ரூபாய் குறைவாகக் கிடைக்கிறது.
ஓர் ஆண்டுக்கு உங்களுக்கு 5 கிலோ தக்காளி சாஸ் தேவை. இதைத் தயாரிக்க, 20 கிலோ தக்காளி தேவைப்படுகிறது. இப்போது நீங்கள் கணக்குப் போடுகிறீர்கள் - விலை குறைவாக இருக்கும் இந்த நேரத்தில் நான் ஏன் அந்த 20 கிலோ தக்காளியையும் வாங்கக்கூடாது? வெறும் 60 ரூபாயில் எனக்கு 5 கிலோ சாஸிற்குத் தேவையான தக்காளி கிடைத்துவிடுகிறதே! இப்படி யோசிப்பதுதான், வேல்யூ இன்வெஸ்ட்டிங்!

50 லட்ச ரூபாய் முதலீட்டில் நீங்கள் ஒரு தொழில் தொடங்க நினைக்கிறீர்கள். ஆனால் அதே தொழில், அதே சைஸில், நீங்கள் எதிர்பார்க்கும் அதே லாபத்தில், 35 லட்ச ரூபாய் முதலீட்டிலேயே கிடைக்கிறது என்றால் வாங்குவீர்களா, இல்லையா? அதுதான் வேல்யூ இன்வெஸ்ட்டிங்! பங்குகளும் சில சமயங்களில் தங்கள் மதிப்பைவிட குறைவான விலையில் கிடைக்கவே செய்யும். ஆனால், இது மாதிரியான பங்குகளை எப்படிக் கண்டுபிடிப்பது? சொல்கிறேன். வேல்யூ பங்குகளுக்கு பி/இ, பி/பிவி போன்ற பல அளவுகோல்கள் குறைவாக இருக்கும். 'டிவிடெண்ட் யீல்ட்’ அதிகமாக இருக்கும். இந்த நிறுவனங்களில் வளர்ச்சியின் வேகம் அவ்வளவாக இருக்காது. ஆமை போல 'ஸ்லோ அண்ட் ஸ்டெடி’யாகச் செல்லும். வேகமாகச் செயல்பட முயலும் பல முதலீட்டாளர்களுக்கு இப்பங்குகளைப் பிடிக்காது.

இந்த முதலீட்டு முறையை உலகுக்கு எடுத்துச் சொன்னவர் பெஞ்சமின் கிரஹாம் மற்றும் டேவிட் டாட் (David Dodd) என்கிற இரு பெரும் நிபுணர்கள். இவர்கள் அமெரிக்காவில் உள்ள கொலம்பியா பிஸினஸ் ஸ்கூலில் 20-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் பேராசிரியர்களாக வேலை செய்தார்கள். இந்த இருவரும் இணைந்து 1934-ல் எழுதிய 'செக்யூரிட்டி அனாலிஸிஸ்' என்ற புத்தகம் மிகவும் பிரசித்தமானது.

இக்கால வேல்யூ இன்வெஸ்ட் டார் நாம் அனைவரும் அறிந்த வாரன் பஃபட் ஆவார். வாரன் பஃபட்டும் கிரஹாமின் சீடர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜான் டெம் பிள்டன், ஜோயல் கிரீன்ப்ளாட் (Joel Greenblatt)  போன்றோரும் வேல்யூ இன்வெஸ்ட்டிங்கில் சிறந்து விளங்கினர். வேல்யூ இன்வெஸ்ட்டிங் பற்றி கிரஹாம் எழுதிய 'தி இன்டெலிஜென்ட் இன்வெஸ்ட்டார்’ என்ற புத்தக மும் உலகப் புகழ் பெற்றது.


ஆங்கிலத்தில் 'இன்ட்ரின்ஸிக் வேல்யூ’ (Intrinsic value) என்று கூறுவார்கள் - அதாவது ஒன்றின் உண்மையான (உள்ளார்ந்த) மதிப்பு. நாம் மேலே கண்ட உதாரணத்தில் தக்காளியின் உள்ளார்ந்த மதிப்பு ஒரு கிலோவிற்கு 7. நமக்கு சந்தையில் கிடைத்ததோ கிலோ ஒன்றுக்கு 3. அதாவது அதன் உள்ளார்ந்த மதிப்பைவிட 57% தள்ளுபடி விலையில் கிடைத்திருக்கிறது. நீங்கள் உள்ளார்ந்த மதிப்பிலிருந்து குறைவாக வாங்கும் போது விலை மேலும் குறைவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு.
அது மட்டுமல்ல, வேல்யூ நிறுவனங்களின் நிதி நிலை (வரவு, செலவு, லாபம்) சீராக இருக்கும். ஆகவே எதிர்காலத்தில் எவ்வாறு இருக்கும் என்று நாம் ஈஸியாகக் கணிக்க முடியும். வேல்யூ நிறுவனங்களின் நடவடிக்கைகள் நிலையாக இருப்பதால், முதலீட்டு ரிஸ்க்கும் குறைவு. ஆனால், பொதுவாக வளர்ச்சி அதிகமாக உள்ள நிறுவனங்களின் எதிர்காலத்தை நாம் ஈஸியாகக் கணித்துவிட முடியாது என்பதோடு, அவை அதிவேக வளர்ச்சியில் இருப்பதால், ரிஸ்க்கும் அதிகமாக இருக்கும்.
எல்லாம் சரி, வேல்யூ பங்குகளை எவ்வாறு ஆராய்ந் தறிவது?
முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முதல் விஷயம், எந்தப் பங்காக இருந்தாலும் அதை அதிக மதிப்புக் கொடுத்து வாங்கக்கூடாது. பொதுவாக ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு புதிய துறை / பொருளாதாரம் உருவாகும். அவ்வாறு நிகழும்போது அந்தத் துறை / பொருளாதாரம் சார்ந்த பங்குகள் கணக்குவழக்கில்லாமல் விலை உயர ஆரம்பிக்கும். அது போன்ற சமயங்களில் வேல்யூ முதலீட்டாளர்கள் அப்பங்குகள் பக்கமே செல்ல மாட்டார்கள். இன்டர்நெட் நிறுவனப் பங்குகள் 2000-த்தில் அமெரிக்காவில் உச்சத்தில் பறந்த போது, அப்பங்குகள் பக்கமே வாரன் பஃபட் போகவில்லை.

அதே போல் மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் போதும் வேல்யூ முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்க மாட்டார்கள். மாறாக பங்குகளை விற்க ஆரம்பிப்பார்கள். சந்தை அடி பட்டு விழுந்து கிடக்கும் போது வேல்யூ முதலீட்டாளர்களுக்கு நாவில் எச்சில் ஊறும். அத்தோடு நின்று விடமாட்டார்கள் - சாப்பிடவும் செய்வார்கள். அந்த சமயத்தில் பங்குகளை அதிகமாக வாங்குவார்கள். அப்பங்கினை துறை சார்ந்த நிறுவனங்களோடு ஒப்பிடுவார்கள். மதிப்பு அளவுகோல்கள் (பி/இ, பி/பிவி, டிவிடெண்ட் மற்றும் பிற) கவர்ச்சிகரமானதாக இருக்கிறதா என்று பார்ப்பார்கள். மார்ஜின் ஆஃப் சேஃப்டி எவ்வளவு என்று கணிப்பார்கள். {நாம் மேலே கூறிய தக்காளி உதாரணத்தில் நமது மார்ஜின் ஆஃப் சேஃப்டி 4 (7 - 3 = 4)}. நிறுவனத்தின் கேஷ் ஃப்ளோ (Cash Flow) எந்த அளவு நிலையாக உள்ளது என்று பார்ப்பார்கள். அந்நிறுவனம் விற்கும் பொருட்களுக்கு எப்போதும் மவுசு இருக்குமா, போட்டியாளர்களை ஒப்பிடும் போது அந்த நிறுவனத்தின் வலிமை, பணபலம் போன்ற பலவற்றையும் ஆராய்ந் தறிவார்கள்.
வேல்யூ இன்வெஸ்ட்டிங் பற்றி சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் 'தி இன்டெலி ஜென்ட் இன்வெஸ்ட்டார்’ புத்தகத்தின் அறிமுக உரையில் கூறியிருப்பது போல, 'பங்குகளை வாசனைத் திரவியம் (சென்ட்) வாங்குவது போல வாங்காமல், பலசரக்கு வாங்குவது போல வாங்குங்கள்'. பலசரக்கு வாங்குவது நம்மவர்களுக்கு கைவந்த கலை என்றாலும், அந்தத் திறமையை பங்குகளை வாங்குவதில் காட்டத் தயங்குகிறார்கள்.

வேல்யூ இன்வெஸ்ட்டிங்கிற்கு அவசியமான குணாதிசயங் கள்: பொறுமை, உணர்ச்சிவசப் படாமல் இருப்பது, சாதாரண புத்திசாலித்தனம் (இங்கு வார்த்தை களைக் கூர்ந்து கவனிக்கவும்) மற்றும் முதலீட்டு ஒழுக்கம். வேல்யூ இன்வெஸ்ட்டிங் பற்றி இன்னும் விரிவாக இத்தொடரின் பிற்பகுதியில்  காண்போம்.
இந்த இடத்தில் பொதுவான ஒரு விஷயத்தை வாசகர்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். எந்த ஒரு செயலிலும் நமக்கு எடுத்த உடனேயே வெற்றி கிடைத்துவிடாது. பங்கு முதலீடும் அதற்கு விதிவிலக்கல்ல. நான் பார்த்த பல முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் இறங்கி கண்டபடி விளையாடி,  கையைச்  சுட்டுக் கொள்கிறார்கள். பிறகு, பங்குச் சந்தை ஒரு சூதாட்டம் என்றும், நமக்கும் அதற்கும் ராசியே இல்லை என்றும் சொல்லி, அந்தப் பக்கமே வராமல் போய்விடுகிறார்கள். அப்படி இல்லாமல் ஏற்கெனவே செய்த தவறுகளை உணர்ந்து, அந்தத் தவறுகளை மீண்டும் செய்யாமல் புதிய பல யுக்திகளைக் கையாண்டு, ஒரு வெற்றிகரமான முதலீட்டு அனுபவத்தைப் பெற முயற்சிக்கலாம். இன்று பங்குச் சந்தையில் மிகப் பெரிய ஜாம்பவான்களாக இருப்பவர்கள்கூட நஷ்டத்தைச் சந்தித்தே இந்த நிலைக்கு வந்திருக்கிறார்கள். நஷ்டம் அவர்களை வெற்றியாளர்களாக மாற்றி இருக்கிறதே ஒழிய, துவண்டுவிடச் செய்யவில்லை என்பதை நாம் மறக்கக்கூடாது.

 நன்றி: நாணயம் விகடன்

0 comments:

Post a Comment