''பங்குச் சந்தை பற்றி ஓரளவுக்குத் தெரிந்து கொண்டோம். இனி நாங்கள் அதில் குதித்து முத்தெடுக்கலாமா?'' - இந்த ரேஞ்சில் பல வாசகர்கள் கடிதம் எழுதிக் கேட்டிருக்கிறார்கள். இதுவரை நான் உங்களுக்குக் காட்டியது பங்குச் சந்தையின் ஒரு பக்கத்தை மட்டும்தான். அந்தப் பக்கம் பாசிட்டிவ்-ஆன அம்சங்களால் நிரம்பி வழிவது. இந்த ஒரு பக்கத்தை மட்டுமே பார்த்து நாம் அசந்து போய் நின்றுவிடக்கூடாது. பங்குச் சந்தைக்கு இன்னொரு பக்கமும் உண்டு. அதில்தான் ரிஸ்க் போன்ற அம்சங்கள் உள்ளன. அது என்ன ரிஸ்க்?

ரிஸ்க் என்பது பங்குச் சந்தையில் மட்டுமல்ல, எல்லாவற்றிலும் இருக்கிறது. 'பைக் ஓட்டுவது ரிஸ்க்கானது. எனவே, நான் ஓட்ட மாட்டேன்’ என்று யாராவது சொல்ல முடியுமா? பங்குச் சந்தை ரிஸ்க்கும் கிட்டத்தட்ட இது மாதிரித்தான். சந்தையில் இருக்கும் ரிஸ்க்குக்கு பயந்து அதில் நுழைய மாட்டேன் என்பது புத்திசாலித்தனமான வாதமாக இருக்காது. ரிஸ்க் பற்றிய அத்தனை விவரங்களையும் அறிந்து, அதன் ஆழத்தைக் கணக்கிட்டு, அந்த ரிஸ்க்கை தனக்குச் சாதகமாக்கிக் கொள்ள முயல்கிற மனிதன்தான் வெற்றிகரமான மனிதனாக ஆகிறான்!


'நீங்கள் எளிதாகச் சொல்லி விட்டீர்கள். ஆனால், சென்செக்ஸ் தினமும் 100 புள்ளிகள் ஏறுகிறது, இறங்குகிறது. அதைப் பார்த்தால் பயமாக இருக்கிறதே!’ என்று என்னிடம் கேட்டவர்கள் பலர்.
அவர்களுக்கு நான் சொன்ன பதில் இதுதான்: ''சந்தையில் காய்கறி விலை ஏறுகிறது, இறங்குகிறது. விலை அதிகமாக இருக்கும்போது, நாம் குறைந்த அளவு காய்கறியை வாங்குகிறோம். விலை குறைவாக இருக்கும்போது அதிகமாக வாங்குகிறோம். காய்கறி விலை ஏற்ற, இறக்கத்தை நாம் எத்தனை புத்திசாலித்தனமாக எதிர்கொள்கிறோம்?


ஏறக்குறைய இதே மாதிரித் தான் பங்குகளின் விலையும். காய்கறி விலை ஏற்ற, இறக்கத் துக்கு வெள்ளம், வறட்சி, சப்ளை, டிமாண்ட் என பல காரணங்கள் இருக்கிற மாதிரி பங்குகளுக்கு சப்ளை, டிமாண்ட், பணப்புழக்கம், வட்டி ஏற்ற இறக்கம், உலகப் பொருளாதார நிலைமை, அரசாங்கம், சட்டதிட்டங்கள் என்று பல இருக்கின்றன.


நீங்கள் ஒரு குறுகியகால முதலீட்டாளராக இருக்கும் போதுதான் இந்த தினசரி ஏற்ற இறக்கத்தை நினைத்துப் பயப்படுகிறீர்கள். தினசரி ஏற்ற இறக்கங்கள் நமது நீண்ட கால பொருளாதார வளர்ச்சியையோ அல்லது ஒரு நிறுவனத்தின் நிதி நிலைமையையோ அல்லது வேறு பிற நீண்ட கால காரணிகளையோ அடிப்படையாக வைத்து அமைவதில்லை. ஆகவே நீண்ட கால முதலீட்டாளர்கள் குறுகிய கால ரிஸ்க்கைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. நல்ல பங்குகளாகப் பார்த்து முதலீடு செய்யும் பொழுது, நீண்ட காலத்தில் பணத்தை இழப்பதற்கான சாத்தியக்கூறு கள் மிக மிகக் குறைவு. உங்களது குறுகிய கால (5 வருடத்திற்கும் குறைவாக) தேவைகளுக்கு ஆர்.டி, அல்லது ஃபிக்ஸட் டெபாசிட் போன்ற திட்டங்களில் முதலீடு செய்து கொள்ளுங்கள். 5 வருடம் வரை உறுதியாகத் தேவைப்படாத பணத்தை பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாம்.


பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் போது பெரிய நிறுவனப் பங்குகளில், அதாவது சென்செக்ஸ் அல்லது நிஃப்டி குறியீட்டுப் பட்டியலில் இடம் பெற்றுள்ள பங்குகளில் முதலீடு செய்தால் ரிஸ்க் குறைவு. நடுத்தர நிறுவனங்களில் ரிஸ்க் கொஞ்சம் அதிகம். (அதே போல அதிக லாபமும் கிடைக்கலாம்!) சிறிய நிறுவனங்களில் ரிஸ்க் மிக அதிகம் (லாபமும் அதே போல!) ஆகவே பங்குச் சந்தையில் முதலீட்டைத் தொடங்கும் போது பெரிய நிறுவனப் பங்குகளாகப் பார்த்து வாங்குவது நன்று.


பங்குச் சந்தையில் இருக்கும் இன்னொரு பெரிய ரிஸ்க் புரோக்கர். நீங்கள் டீமேட், டிரேடிங் கணக்கு வைத்திருக்கும் புரோக்கிங் நிறுவனம் பெரிய நிறுவனமாக இருக்கலாம். ஆனால் அங்கு உங்களுடன் டீல் செய்பவர் நாணயஸ்தரா என்று அறிந்து கொள்ள வேண்டும். நாம் வாங்கிய பங்குகளை பத்திரமாக வைத்திருக்கிறார்களா, நம் பெயரில் நம் அனுமதி இல்லாமல் பங்குகளை வாங்கி, விற்கிறார்களா என்பதைக் கண்காணிப்பது அவசியம்.


''எல்லாம் சரி, அமெரிக் காவில் வட்டி உயர்ந்தாலோ அல்லது வேலை வாய்ப்பு அதிகரித்தாலோ, நமது இந்தியச் சந்தையில் ஏன் மாற்றங்கள் நிகழ வேண்டும்?'' என்றும் சிலர் கேட்கிறார்கள். இன்று இந்தியப் பொருளாதாரம் உலகப் பொருளாதாரத்தோடு இணைந்துவிட்டது. ஆகவே உலகளவில் சந்தையில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள், ஒரு சந்தையில் இருந்து இன்னொரு சந்தைக்கு பல காரணங்களுக்காக பணத்தை மாற்றுவது இன்று சகஜமாகிவிட்டது. அதுவும் கம்ப்யூட்டர் யுகத்தில் சொடுக்கு போடும் நேரத்தில் பல ஆயிரம் கோடிகளை ஒரு நாட்டின் சந்தையில் இருந்து இன்னொரு சந்தைக்கு மாற்றுகிறார்கள். அவ்வாறு நிகழும் போது நமது சந்தையில் திடீர் ஏற்ற இறக்கம் ஏற்படுகிறது. அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பா போன்ற சந்தைகளை ஒப்பிடும் போது நமது சந்தையின் ஆழம் குறைவு. ஆகவே இந்த மாற்றங்களால் நமது சந்தை சற்று வேகமாக ஏற இறங்கத்தான் செய்யும்.


''சரி ரிஸ்க் இல்லை என்றால் தங்கத்தை அடமானமாக வைத்து பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாமா?'' என்று பலர் கேட்கிறார்கள். நீங்கள் ஒரு லட்சம் ரூபாயை பங்குச் சந்தையில் முதலீடு செய்கிறீர்கள். இரண்டு வருடத்தில் 50,000 லாபமாக (50%) பார்த்துவிடலாம் என்று நினைக்கிறீர்கள். அதற்காக உங்கள் வீட்டில் உள்ள தங்க ஆபரணத்தை எடுத்துச் சென்று அடகு வைக்கிறீர்கள். அடகுக்கு ஆண்டு வட்டி 12% என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் நினைத்தது போல் நடந்துவிட்டால், 25,440 ரூபாய் வட்டி கட்டியது போக, உங்களுக்கு 24,560 ரூபாய் லாபம். இது ஒரு நல்ல லாபம்தான். அந்த இரண்டு வருடத்தில் சந்தை 50% இறங்கிவிட்டது என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது உங்கள் பங்குகளின் மதிப்பு 50,000 ரூபாய். உங்களது கெட்ட நேரம், நகை உங்கள் வீட்டில் தேவைப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் பங்கை விற்று 50,000-மும், மேலும் 75,440-ஐ (50,000 நஷ்டப் பணம் + 25,440 வட்டிப் பணம்) சரி செய்து கொண்டு சென்று நகைகளை திருப்பி வரவேண்டும். ஆக, லாபம் கிடைத்தால் 50%; நஷ்டம் ஏற்பட்டால் 75%. ஆகவே, நகையை அடகு வைத்தோ, கடன் வாங்கியோ பங்குச் சந்தையில் முதலீடு செய்வதை கட்டாயம் தவிர்க்கவேண்டும்.


இன்னும் சிலர், ''நான் ரிட்டயர்ட் ஆயிட்டேன். என் பி.எஃப். பணத்தை பங்குச் சந்தையில் போடலாமா?'' என்று கேட்கிறார்கள். நிச்சயம் கூடாது. ஒருவருடைய சொத்து மதிப்பில் அதிகபட்சமாக எத்தனை சதவிகிதம் வரை பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாம் என்பதற்கு ஒரு ஃபார்முலா இருக்கிறது. அதாவது 100 லிருந்து உங்கள் வயதைக் கழித்தால் வரும் சதவிகிதத்தைத்தான் நீங்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய வேண்டும். உங்கள் வயது 60 என்றால் உங்கள் கையிருப்பில் 40 சதவிகிதத்தை மட்டுமே முதலீடு செய்ய வேண்டும். அதற்கு மேல் கூடவே கூடாது.


இப்படி நீங்கள் முதலீடு செய்யும் பணத்தில் எந்த அளவு பணத்தை இழக்கத் தயாராக இருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து நீங்கள் எப்படிப்பட்ட ரிஸ்க்கை சந்திக்கத் தயார் என்பது தெரியும். உதாரணமாக, நீங்கள் போட்ட அத்தனை பணமும் போனால்கூட பரவாயில்லை என்று நினைத்தால், நீங்கள் ஒரு ஹை ரிஸ்க் டேக்கர். நடுத்தரமாக இழக்கத் தயார் என்றால், நீங்கள் ஒரு மீடியம் ரிஸ்க் டேக்கர், கொஞ்சம் இழக்கத் தயார் என்றால் நீங்கள் ஒரு லோ ரிஸ்க் டேக்கர். எதையுமே இழக்கத் தயார் இல்லை என்றால் நீங்கள் ஒரு அல்ட்ரா கன்ஸர்வேட்டிவ் பெர்சன். ரிஸ்க் எடுக்காவிட்டால் வளர்ச்சி இல்லை என்பதை ஏற்கெனவே சொன்னோம், நினைவிருக்கிறதா?