ஒரு நல்ல பங்கைத் தேர்வு செய்ய அதன் நிர்வாகத்தைக் கவனிக்க வேண்டும் என்று கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம். நிர்வாகத்தின் தரத்தைப் பார்க்கிற அதே நேரத்தில் வேறு என்னென்ன விஷயங்களையும் கவனிக்க வேண்டும் என்பதை இப்போது விளக்கமாகச் சொல்கிறோம்.
நிறுவனத்தின் வயது:
ஒரு நிறுவனத்திற்கு நெடிய வரலாறு இருப்பது நல்லது. நீண்ட வரலாறு கொண்ட நிறுவனங்களுக்கு பல்வேறு ஏற்றயிறக்கங்களைச் சந்தித்த அனுபவம் இருக்கும். எந்த விஷயத்தை எப்படித் தீர்ப்பது என்று அதற்குத் தெரிந்திருக்கும். இனிவரும் காலத்தில் திடீரென பொருளாதார ஏற்றத்தாழ்வு வந்தால் அதை எப்படிச் சமாளிப்பது என்கிற அனுபவமும் அதற்கிருக்கும். அந்த வகையில் அந்த நிறுவனத்தின் மேனேஜ்மென்ட்டைப் பற்றி, அந்நிறுவனத்தின் புரமோட்டர்கள் பற்றி, அந்நிறுவனம் தயாரிக்கும் பொருட்கள் பற்றி, அதன் தரத்தைப் பற்றி, வாடிக்கையாளர் சேவையைப் பற்றி, முதலீட்டாளர் சேவையைப் பற்றி என பலவற்றையும் அறிந்து கொள்ள உதவும்.
அதிக வரலாறு இல்லாத புதிய நிறுவனங்களை விட்டு கொஞ்சம் தள்ளியிருப்பதே நல்லது. புதிய நிறுவனப் பங்குகளை வாங்குவதில் ரிஸ்க் அதிகமாக இருக்கும். இளவட்டங்கள் எப்போதும் அதிரடியாக இருப்பார்கள். ஆனால், அதிரடியாக இருந்தாலே வெற்றி கிடைத்துவிடும் என்று சொல்ல முடியாது. வெற்றிக்குத் தேவை வேகத்துடன் கூடிய விவேகம்.
நீண்ட வரலாறு கொண்ட நிறுவனங்கள் எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப் பட்டவையாக இருக்க வேண்டும்? இதற்கென குறிப்பிட்ட வரையறை ஒன்றும் கிடையாது. எவ்வளவு அதிகமாக இருக்க முடியுமோ, அவ்வளவு நல்லது. குறைந்தபட்சம் இருபது இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பாகவாவது தொடங்கப்பட்ட நிறுவனமாக இருந்தால் நல்லது.
பொருட்களின் தரம்:
நீங்கள் அனைத்து நிறுவனங்கள் என்று குறிப்பிடுவது ஐ.டி.சி- யாக இருக்கலாம், அல்லது பிரிட்டானியாவாக இருக்கலாம் அல்லது கோத்ரெஜ் நிறுவனமாக இருக்கலாம். இது மாதிரி மிகச் சில நிறுவனங்களின் பொருட்களையே நாம் வாங்கிப் பயன்படுத்துகிறோம். ஆனால், பெரும்பாலான நேரங்களில் பல நிறுவனங்கள் தயார் செய்யும் பொருட்களின் தரத்தை நம்மால் நேரடியாக வாங்கித் தெரிந்து கொள்ள முடிவதில்லை. இந்த பிரச்னைக்கு ஒரே வழி, ஒவ்வொரு நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்களின் விற்பனை பற்றி நமக்குத் தெரிந்த வகையில் கேட்டும் படித்தும் அறிந்து கொள்வதே.
நிறுவனங்கள் தயார் செய்யும் பொருட்கள் தரமாக இருப்பின், அந்த நிறுவனத்தின் பொருட்கள் எப்போதும் டிமாண்ட்-ஆக இருக்கும். அதனால் உங்கள் முதலீடும் பாதுகாப்பாக இருந்து வளரச் செய்யும்.
நீங்கள் வாங்கும் பங்கு நிறுவனங்கள் எவ்விதமான பொருட்களைத் தயாரிக்கின்றன என்பதைக் காணுங்கள். தினம் தினம் தேவைப்படக்கூடிய பால், மின்சாரம், மருந்துகள், போக்கு வரத்து, சாலைகள் போன்றவற்றில் ஈடுபட்டுள்ளனவா அல்லது சொகுசு கார்கள், சொகுசு எலெக்ட்ரானிக் சாதனங்கள் போன்றவற்றைத் தயாரிக்கின்றனவா என்று பாருங்கள். வேல்யூ இன்வெஸ்ட்டர்கள் தினசரித் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய நிறுவனப் பங்குகளை நாடிச் செல்வர். அவ்வகையான பங்குகள் பாதுகாப்பானதும்கூட. அவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய நிறுவனங்களின் பணவரத்து (சிணீsலீ யீறீஷீஷ்) தொடர்ந்து நன்றாக இருக்கும். சொகுசுப் பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்களின் விற்பனை பொருளாதாரத்தைப் பொறுத்து ஏற்றயிறக்கம் அதிகமாக இருக்கும்.
ஃபோகஸ் செய்யும் செக்மென்ட்:
நீங்கள் பங்குகளை வாங்கப் போகும் நிறுவனத்தின் பொருட்கள் எந்த வர்க்கத்து மக்களுக்காகத் தயாரிக்கப்படுகின்றன என்று அலசுங்கள். ஐ.டி.சி., பிரிட்டானியா போல அனைத்து தர மக்களுக்குமானதைத் தயாரிக்கிறார்களா, அல்லது ஓபராய் ஓட்டல்ஸ் போன்று உயர்தட்டு மக்களுக்கானதா, அல்லது இன்ஃபோசிஸ் போன்று வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நிறுவனங்கள் மட்டுமே பயன் படுத்துவதற்கா என்று பாருங்கள்.
பொருளாதாரம் அடி படும்போது ரீடெய்ல் வாடிக்கை யாளர்களை ஃபோகஸ் செய்யும் நிறுவனங்கள் அவ்வளவாக அடிபடாது. ஏனென்றால், பொருளாதாரம் அடிபடும்போது ரீடெய்ல் வாடிக்கையாளர்கள் அவர்களுடைய தேவைகளைக் குறைத்து கொள்வார்களே தவிர, அடியோடு நிறுத்திவிட மாட்டார்கள். ஆனால், பொருளாதாரம் பாதிப்படையும் நிறுவன வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள நிறுவனங்கள் அதிகமாக அடிபட வாய்ப்புள்ளது. ஏனென்றால், நிறுவனங்கள் தங்களுடைய செலவினங்களை குறைக்க பொருட்களையோ அல்லது சேவைகளையோ வாங்கு வதை அடியோடு நிறுத்தக்கூட செய்வார்கள். ஆனால், பொருளாதாரம் ஏறும்போது இதுவே தலைகீழாகவும் மாற வாய்ப்புள்ளது.
இன்றைய பொருளாதாரம் பன்னாட்டுமயமாக்கப்பட்டு விட்டது. நமது நாட்டு ஐ.டி நிறுவனங்கள் உலகெங்கிலும் தொழில் செய்கின்றன. சொல்லப் போனால் உள்நாட்டு விற்பனையை விட அவர்களின் வெளிநாட்டு விற்பனை பன்மடங்கு அதிகம். அப்படி இருக்கும்போது ஒரு வெளிநாட்டிலிருந்து வரும் வருமானம் அந்நிறுவனத்திற்கு அதிகம் என்றால், அந்நாட்டின் பொருளாதார நிலைமை இந்நிறு வனத்தையும் பாதிக்கும்.
உதாரணத்திற்கு, இன்ஃபோசிஸ் நிறுவனத்திற்கு வெளிநாட்டிலிருந்து வரும் வருமானம் 97.8% (டிசம்பர் 31, 2010). உள்நாட்டிலிருந்து வரும் வருமானம் வெறும் 2.2%-தான். ஆக, இந்தியப் பொருளாதாரத்தைவிட வெளிநாடுகளின் பொருளாதாரம் தான் அதிகமாக இன்ஃபோசிஸைப் பாதிக்கும். அதிலும் வடஅமெரிக்க பொருளாதாரம்தான் இன்னும் அதிகமாக பாதிக்கும். ஏனென்றால் அந்தப் பகுதியில் இருந்துதான் 65% வருமானம் வருகிறது. அமெரிக்க சட்டதிட்டங்களில் மாற்றங்கள், வரிகளில் மாற்றங்கள் அல்லது அரசியல் மாற்றங்கள் இந்நிறுவனத்தைப் பாதிக்கலாம்.
அதே சமயத்தில் ஐ.டி.சி. போன்ற நிறுவனத்தின் பெரும்பகுதியான வருமானம் நம் மண்ணில் இருந்துதான் வருகிறது. சமீபத்தில் மத்திய கிழக்கு நாடுகளில் அமைதியின்மை நிகழ்ந்து வருகிறது. ஆகவே, அங்கு அதிகமாக தொழில் புரிந்துவரும் இந்தியக் கம்பெனிகளுக்குப் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. புஞ்ச்லாய்ட் என்ற நிறுவனம் லிபியாவில் பெரிய ஆர்டரைப் பெற்றிருந்தது. மேலும், மத்திய கிழக்கு நாடுகளில் அதிக தொழில் செய்து வந்தது. ஏற்கெனவே அந்நிறுவனத்திற்கு பல பிரச்னைகள். இப்போது இதுவும் சேர்ந்து கொள்ள, சமீபகாலத்தில் அதன் பங்கு சரிபாதியாகக் குறைந்துள்ளது. ஆகவே முதலீட்டாளராகிய நீங்கள் அந்நிறுவனம் எங்கெங்கு தொழில் செய்கிறது, அதனால் ஏற்படும் பலன் மற்றும் பலவீனத்தை அறிய வேண்டியது முக்கியம்.
சுற்றுப்புறச்சூழல்:
இன்று ஒவ்வொரு நிறுவனமும் சுற்றுப்புறச்சூழலை மதித்து நடக்க வேண்டியுள்ளது. இல்லையெனில் அரசாங்கம் மற்றும் பொதுமக் களின் கோபத்திற்கு ஆளாக வேண்டியுள்ளது. இதனால் தொழில்கள் பெருமளவு பாதிப் படையலாம். உதாரணத்திற்கு, தோல் தொழிற்சாலைகள் மற்றும் டெக்ஸ்டைல் சார்ந்த தொழிற்சாலைகளை எடுத்துக் கொள்ளுங்கள். கோர்ட் உத்தர வினால் திருப்பூர் பாதிக்கப் பட்டது நாம் அனைவரும் அறிந்த விஷயம். அதேபோல் பல ஆண்டுகளுக்கு முன் தோல் பதனிடும் தொழிற் சாலைகள் தமிழ்நாட்டில் பெரும்
பாதிப்பிற்கு உள்ளாகின. சமீபத்தில் தூத்துக்குடி யில் உள்ள ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரிஸை மூடச் சொன்னது நாம் அனைவரும் அறிந்ததே. ஆகவே நீங்கள் நுழையப் போகும் பங்கு சுற்றுப்புறச்சூழலிற்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதா என்பதையும் பார்ப்பது அவசியம்.
நன்றி: நாணயம் விகடன்
0 comments:
Post a Comment