Thursday, May 3, 2012

வீட்டு பட்ஜெட்டை எப்படி போடுவது!


பட்ஜெட் போட்டு செலவு செய்வது முக்கியமான விஷயம். அதற்காக மெனக்கெட வேண்டுமா என பலரும் சோம்பல்படுவது இயற்கையான விஷயம்தான். ஆனால், ஆற்றில் போட்டாலும் அளந்து போடு என்றார்கள் நம் முன்னோர்கள். இதன் அர்த்தம், செலவே செய்யக்கூடாது என்பதல்ல. தேவையறிந்து செலவழிக்க வேண்டும் என்பதே. எவர் ஒருவர் செலவு செய்வதைக் கச்சிதமாக எழுதி வைக்கிறாரோ, அவரிடம் மற்றவர்களைக் காட்டிலும் பணம் சற்று கூடுதலாகத்தான் இருக்கும்.

வீட்டு பட்ஜெட்டை எப்படி போடுவது? என்பதை விளக்கமாகச் சொல்லித் தந்ததோடு, அதற்கான மாதிரிப் படிவத்தையும் தயார் செய்து தந்தார் நிதி ஆலோசகர் யூ.என்.சுபாஷ். இனி ஓவர் டு சுபாஷ்.
''இன்றைய தலைமுறையினர் களில் பெரும்பாலானவர்கள், தான் வேலை செய்யும் அலுவலகத்தைச் சரியாக நிர்வாகம் செய்கிறார்களே தவிர, வீட்டு நிர்வாகத்தை முறையாகச் செய்வது இல்லை. பட்ஜெட் போடாமல் செலவு செய்து விட்டு, மாத இறுதி நாட்களிலோ அல்லது முக்கிய தேவைகள் வரும்போதோ பணம் இல்லாமல் திண்டாடுவதால் எந்த பயனும் இல்லை. இன்றைய தலைமுறையினருக்கு பட்ஜெட்டின் அருமை தெரியாமல் போனதற்கு முக்கியமான காரணம், அளவுக்கு அதிகமாக கையில் புரளும் பணம், பகட்டாக வாழ நினைக்கும் மனப்பான்மை. இது ஒரு விதமான மனக் கோளாறு. இந்த கோளாறைச் சரிசெய்ய 'பட்ஜெட்’ போட்டு செலவு செய்ய நினைக்கும் எண்ணம் தான் நல்ல மருந்து. இந்த மருந்தை எப்படி தயார் செய்வதென்று சொல்கிறேன்.
முதலில், வருகிற வருமானத்தில் இருந்து அவசரத் தேவைக்கென குறிப்பிட்ட அளவு பணத்தை ஒதுக்கி வைக்க வேண்டும். 30 வயதிற்குள் உள்ளவர்கள், தன்னுடைய நான்கு மாத சம்பளத்தை அவசரத் தேவைகளுக்காக வங்கியிலோ அல்லது பிற பாதுகாப்பான இடங்களிலோ சேமித்து வைப்பது அவசியம். 30 வயதிற்கு மேல் 40 வயதிற்குள் இருப்பவர்கள், ஆறு முதல் எட்டு மாத சம்பளத் தொகையைச் சேமித்து வைத்திருக்க வேண்டும். 40 வயதிற்கு மேல் இருப்பவர்கள், ஒன்றரை வருட சம்பளத் தொகையைச் சேமித்து வைத்திருக்க வேண்டும். திடீரென உடல் நலமில்லாமல் போவது, வேலை இழப்பு என பல்வேறு விஷயங்களுக்கு இந்த பணம் நிச்சயம் பயன்படும்.
 இரண்டாவது, உங்கள் குடும்ப வருமானத்திலிருந்து 50% ரூபாயை அத்தியாவசியத் தேவைகளுக்கும் (உணவுக்கான செலவு, வீட்டு வாடகை/இ.எம்.ஐ. மற்றும் இதர செலவு கள் போன்றவை), வீட்டுக்கான  பொருட்கள் (மேஜை, டிவி, வாஷிங்மெஷின்) வாங்க வருட சம்பளத்திலிருந்து 10% தொகையையும் ஒதுக்கி வைக்கலாம். இது தவிர, மாத வருமானத்திலிருந்து 10% தொகையை கல்வி மற்றும் மருத்துவச் செலவுக்கு ஒதுக்கி வைத்துவிட்டு, மீதமிருக்கும் 30% ரூபாயை சேமிப்பிற்காக மட்டுமே ஒதுக்கி வைப்பது நல்லது.
எப்படி செலவு செய்ய வேண்டும் என்பது எந்த அளவுக்கு முக்கியமோ, அதை விட முக்கியம் எப்படி எல்லாம் செலவு செய்யக்கூடாது என்பது. இன்றைய தலைமுறையை பேய் போல் ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது கிரெடிட் கார்டு. முன்பு எல்லா பொருளையும் பணம் கொடுத்து வாங்கினோம். கடன் வாங்கி பொருள் வாங்குவது எப்போதாவது ஒருமுறை நடக்கும். ஆனால், இப்போதெல்லாம் புதிதாக துணி வாங்குவதாக இருந்தாலும் சரி, வீட்டுக்குத் தேவையான பொருளை வாங்குவதாக இருந்தாலும் சரி, இருக்கவே இருக்கு கிரெடிட் கார்டு என்று வகைதொகை இல்லாமல் அதை வைத்து செலவழிக்கிறார்கள். இந்த கிரெடிட் கார்டை முதலில் தூக்கி தூர வைத்தால்தான் தேவையில்லாதச் செலவுகளை ஒழித்துக் கட்ட முடியும். திட்டமிட்டு, கொஞ்சம் பணம் சேமித்தபிறகு வீட்டுக்குத் தேவையான எந்த பொருளை வேண்டுமானாலும் வாங்கலாம், தப்பே இல்லை.
பட்ஜெட் போடுவதோடு நம் கடமை முடிந்துவிடாது. அதில் துண்டு விழாதபடி செலவழிப்பது அவசியம். தினசரி ஆகும் செலவுகளை மேலே உள்ள மாதிரிப் படிவத்தைப் போல் ஒரு நோட்டுப்  புத்தகத்தை தயார் செய்து, அன்றாடச் செலவுகளை அதில் குறித்து வையுங்கள். ஒரு மாதம் முடிந்தபிறகு நீங்கள் செய்த செலவுகளைப் பார்த்தால், அது ஒரு கட்டுக்குள் இருப்பது தெரியும்.  
திட்டமிட்ட செலவுகளை விட, திட்டமிடாதச் செலவுகள் குறைவாக இருந்தால் நீங்கள் சரியான பாதையில் பயணிக்கிறீர்கள் என்று அர்த்தம். திட்டமிடாதச் செலவு அதிகமாக இருந்தால், எங்கோ தப்பு செய்கிறீர்கள் என்று அர்த்தம். அந்த கூடுதல் செலவு உங்களின் முதலீட்டையோ, சேமிப்பையோ கரைத்துவிடும். எதிர்பாராத விதமாக ஒரு மாதம் அப்படி நடந்தால் அடுத்த மாதத்தில் சரி செய்து கொள்ளலாம். ஆண்டு முழுக்க அப்படி இருந்தால், ஆண்ட வனால்கூட காப்பாற்ற முடியாது'' என்கிற எச்சரிக்கையோடு முடித்தார் சுபாஷ்.
இனியாவது பட்ஜெட் போட்டு வாழப் பழகுவோமா!

0 comments:

Post a Comment