ஆங்கிலப் புத்தாண்டு பிறந்து விட்டது. எல்லோரையும்போல் நாமும் அன்று
தொலைக்காட்சிப் பெட்டி முன் அமர்ந்து அன்றைய நிகழ்ச்சிகளைப் பார்த்துக்
கொண்டு இருந்தோம். ஒரு அலைவரிசையில் புத்தாண்டு பலன்களைப் பற்றி விவாதம்
நிகழ்ந்தது. அதில் ஜோதிடர்கள் பலர் பங்கேற்றனர். ஒவ்வொரு ராசிக்கும்
2012 எவ்வாறு இருக்குமென்று தங்கள் கணிப்புக்களைக் கூறிக்கொண்டு
இருந்தனர். எந்தெந்த ராசிக் காரர்களுக்கு இந்த ஆண்டு
நன்மை பயக்குமென்றும், எந்தெந்த ராசிகளுக்கு இந்த ஆண்டு தீமையான
பலன்கள் நடைபெறும் என்றும் ஜோதிடர்கள் விவாதித்தனர். சுமார் ஒரு மணி
நேரத்திற்கும் மேலாக விவாதம் காரசாரமாக நடைபெற்றுக் கொண்டு இருந்தது.
அப்போது ஒரு ஜோதிடர் இந்த விவாதங்களில் பங்கு கொள்ளாமல் வாய்மூடி மௌனியாக
இருந்தார். அதை கவனித்த நிகழ்ச்சி அமைப்பாளர் “நீங்கள் ஏன் பேசாமல்
இருக்கிறீர்கள்? இதில் பங்கெடுக்கத்தானே இங்கு வந்தீர்கள்? அப்படி
இருக்கும்போது ஏன் ஒதுங்கி இருகிறீர்கள்?” எனக் கேட்டார்.
அதற்கு
அந்த ஜோதிடர் வெறும் ராசியை வைத்துப் பலன் சொல்ல முடியாதென்றும்,
லக்கினத்தையும் சேர்த்து வைத்துத்தான் பலன் செல்ல வேண்டுமென்றும் அவ்வாறு
கூறினால்தான் பலன்கள் சரியாக இருக்குமென்றும் கூறினார். நிகழ்ச்சி
அமைப்பாளர் சிறிது அதிர்ந்து போனார். ”இந்த ஜோதிடர் கூறுவது சரிதானா? இவர்
கருத்து சரியானது என்று கூறுபவர்கள் கையைத் தூக்குங்கள்? ” என்று மற்ற
ஜோதிடர்களைப் பார்த்துக் கேட்டார். அனேகமாக ஓரிருவரைத்
தவிர மற்றவர்கள் எல்லோரும் கையை உயர்த்தினர். ”இவர் சொல்வது சரியானது
என்றால் நாம் இதுவரை ராசியை வைத்துத்தானே பலன் சொல்லிக் கொண்டு இருந்தோம்”
என்று கேட்டார். ஜோதிடர்களிடமிருந்து சரியான பதில் இல்லை. இதுவரை பலன்
கூறியவர்கள் கைக்குட்டையால் முகத்தைத் துடைத்துக் கொள்ளவேண்டிய நிலையில்
இருந்தார்கள். சரியான பதிலை அவர்களால் கூற முடியவில்லை. இத்தோடு இந்த
நிகழ்ச்சியை நிறுத்திக் கொள்வோம். நாம்
நம் கருத்தைக் கூறுவோம்.
ராசி என்பது ஒரு ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் இடம். அதாவது
ஒருவருக்கு அஸ்வினி நட்சத்திரமென்றால் அஸ்வினி நட்சத்திரத்தில் அன்று
சந்திரன் இருக்கின்றார் எனப் பொருள். அஸ்வினி நட்சத்திரம் மேஷ ராசியில்
இருக்கிறது. ஆக அவர் மேஷ ராசிக்காரர். அதைப் போன்று பரணி நட்சத்திரம்,
கார்த்திகை முதல் பாதம் ஆகியவை மேஷ ராசியில் வருகின்றன. ஆக பரணி
நட்சத்திரத்திலோ அல்லது கார்த்திகை முதல் பாதத்திலோ பிறந்தவர்களுக்கும்
மேஷ ராசிதான். ராசி ஒன்றாக இருந்தாலும் நட்சத்திரம் வெவ்வேறுதான்.
நட்சத்திரங்களுக்கு ஏற்பபலன்களும் வேறுபடும். அப்படி இருக்கும்போது பலன்கள்
எப்படி ஒரே ராசிக்காரர்களுக்கு ஒரே மாதிரி இருக்கும்?
இருவர் ஒரே நட்சத்திரமெனக் கொள்வோம். அவர்களுக்குப் பலன்கள் ஒரே
மாதிரியாக இருக்குமா? இருக்காது. மாறுபடும். நீங்கள் உங்கள்
அனுபவத்தில் இரட்டைக் குழந்தை பிறப்பைப் பார்த்து இருப்பீர்கள். அவர்கள்
வாழ்க்கை எல்லாம் ஒரே மாதிரியாகவா இருக்கிறது? இரட்டைக் குழந்தைகள் பிறந்த
நேரத்தில் சுமார் 10 அல்லது 15 நிமிடங்கள் வித்தியாசம் இருக்கும்.
அவர்கள் ஜாதகத்தைக் கணித்துப் பார்த்தால் ஜாதகத்தில் எந்தவித
வித்தியாசமும் இருக்காது. ஒரே மாதிரியான ஜாதகமாகத்தான் இருக்கும். ஆனால்
பிறப்பில் பார்த்தால் ஒன்று ஆண் குழந்தையாக இருக்கும்; மற்றொன்று பெண்
குழந்தையாக இருக்கும். ஒன்று படிப்பில் சுட்டியாக இருக்கும். மற்றொன்று
படிப்பில் அவ்வளவு நாட்டமில்லாது இருக்கும். ஒன்றுக்கு உரிய காலத்தில்
திருமணம் ஆகி இருக்கும். மற்றொன்றுக்கு மிகவும் தாமதப் பட்ட திருமணம் ஆகி
இருக்கும். ஒன்று பிறந்து இறந்து இருக்கும். மற்றொன்று உயிருடன்
இருக்கும். இவ்வாறு வாழ்க்கையில் பல்வேறு வித்தியாசங்கள் இருக்கும்.
ஒரே மாதிரியான ஜாதகங்கள் இருக்கும் போதே வாழ்க்கையில் இவ்வளவு
வித்தியாசங்கள் இருக்கின்றபோது வெறும் ராசியை மட்டும் பலன் சொல்வது எவ்வாறு
சரியாக இருக்கும்? சரி! ராசி, லக்கினம் இரண்டையும் சேர்த்துப் பார்த்தால்
பலன்கள் சரியாக வருமா? வராது. ஜாதகங்களைத் தனித் தனியாகப் பார்த்துத்தான்
பலன் சொல்ல வேண்டும். மொத்தமாக ராசிக்கோ அல்லது லக்கினத்தை மட்டுமோ
அல்லது இரண்டையும் மட்டுமோ வைத்துக் கொண்டு சொல்லும் பலன்கள் சரியாக
இருக்காது. “பொட்டைக் கண்ணில் மை இட்டால் பட்ட இடத்தில் படட்டும்” என்று
கூறுவார்களே; அதைப் போல்தான்.
ஒவ்வொருவர் தனிப்பட்ட ஜாதகத்தையும் தனியாக ஆராய்ந்துதான் பலன்கள்
சொல்ல வேண்டும். ஒரு ஊரில் ஒரு பணக்காரருக்கு ஒரு குழந்தையும் அதே ஊரில்
ஒரு ஏழைக்கும் ஒரே நேரத்தில் குழந்தை பிறக்கிறது எனக் கொள்வோம். இரண்டு
ஜாதகங்களும் சந்தேகமில்லாமல் ஒன்றாகத்தான் இருக்கும். ஆனால் வாழ்க்கை முறை
ஒரே மாதிரியாகவா இருக்கும்? நிச்சமாக இருக்காது. வித்தியாசங்கள்
இருக்கும். பணக்காரர் வீட்டில் பிறந்த குழந்தை வளர்ந்து நல்லகாலம்
வரும்போது தொழிலில் பல லட்சங்கள் லாபம் பார்க்கலாம். அதே வயதிலுள்ள
ஏழைக்குழந்தைக்கு அதே நல்ல நேரத்தில் பல நூறுகளோ அல்லது பல ஆயிரங்களோ
லாபமாக வரலாம். பணத்தில் அளவில் வித்தியாசங்கள் இருக்கலாம். ஆனால் அப்போது
மனதிற்குக் கிடக்கும் நிறைவு ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். The
quantum of satisfaction will be same for both of them. ஆகவே இவ்வாறு
பலவற்றை மனதில் கொண்டு கணித்துப் பலன் சொல்ல வேண்டிய ஜோதிடத்தை வெறும்
ராசியையோ அல்லது லக்கினத்தையோ வைத்துப் பலன் சொல்வது அறியாமை அன்றோ.
அதேபோன்று நிகழ்ச்சியை நடத்துபவரும் அதைப் பற்றி நன்றாகத் தெரிந்தவராக
இருக்க வேண்டும். “இந்த ஆண்டு எந்த ராசிக் காரர்களுக்குத் திருமணம்
நடைபெறும்? இந்த ஆண்டு எந்த ராசிக் காரர்கள் வீடு கட்டுவார்கள்?” என்று
அறியாத்தனமாகக் கேள்விகள் கேட்கக் கூடாது.
நன்றி: தமிழோவியம்
0 comments:
Post a Comment