ஒரு பங்கு எப்படி உருவாகிறது என்பதை கடந்த இதழில் பார்த்தோம்... இனி அதை வாங்க, விற்க ஓர் இடம் வேண்டும் அல்லவா? காய்கறி வாங்க அல்லது விற்க காய்கறி சந்தை இருக்கிற மாதிரி, பங்குகளை வாங்க, விற்பதற்கான இடம்தான் பங்குச் சந்தை. பதினோராம் நூற்றாண்டில் கெய்ரோவில் (எகிப்து நாட்டின் தற்போதைய தலைநகர்) யூத மற்றும் முகலாய வியாபாரிகள் இடையே இருந்த கொடுக்கல் வாங்கல்தான் பங்குச் சந்தையின் ரிஷிமூலம் என்கிறார்கள்.
ஆனால் பெரும்பாலான தகவல்கள், பங்குச் சந்தையின் தொடக்கத்தை பன்னிரண்டாம் நூற்றாண்டு ஃபிரான்ஸ் நாட்டை சுட்டிக் காட்டுகின்றன. அந்த சமயத்தில் வங்கிகள் விவசாயிகளுக்கு கடன் கொடுத்ததை முறைப்படுத் துவதற்காக கமிஷன் அடிப்படையில் சிலரை வேலைக்கு அமர்த்தியது. இவர்கள் 'புரோக்கர்கள்’ என்று அழைக்கப் பட்டனர். புரோக்கரேஜ் பிஸினஸ் இப்படித்தான் ஆரம்பமானது!

1309-ல் பெல்ஜியம் நாட்டில் வசித்த 'வேன் டெர் பியூர்ஸ்’ என்ற நபரின் வீட்டில் அவ்வப்பொழுது அந்த நகரத்தில் உள்ள வியாபாரிகள் கூடினார்கள். இச்செய்தி விறுவிறுவென பல அண்டைய நாடுகளுக் கும் பரவ ஆரம்பித்து, பல இடங்களிலும் வியாபாரத்துக்காக இது மாதிரியான கூட்டங்கள் நடக்க ஆரம்பித்தன. பதின்மூன்றாம் நூற்றாண்டின் மத்தியில் வெனீஸ் நாட்டில் வங்கி நடத்துபவர்கள் அரசாங்க கடன் பத்திரங்களை வாங்கி, விற்கத் தொடங்கினர். பதினான்காம் நூற்றாண்டில் அரசாங்க கடன் பத்திரங்களை வாங்கி, விற்பது இத்தாலியின் மற்ற நகரங்களுக்கும் பரவ ஆரம்பித்தது. பிறகு டச் நாட்டினர் 'ஜாயின்ட் ஸ்டாக்’ கம்பெனியை அறிமுகப்படுத் தினர். இதுபோன்ற கம்பெனிகளில், பங்குதாரர்கள் முதலீடு செய்த அளவுக்கு லாபத்தையோ, நஷ்டத்தையோ ஏற்றுக் கொண்டனர். 1602-ல் டச் கிழக்கிந்திய கம்பெனி ஆம்ஸ்டர்டாம் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் தனது முதல் பங்குகளை வெளியிட்டது. இதுவே பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களை முதன்முதலில் அறிமுகம் செய்தது. இந்த ஆம்ஸ்டர்டாம் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்தான் முதன்முதலில் 17-ம் நூற்றாண்டில் தொடர்ந்து டிரேடிங் செய்வதையும் அறிமுகப் படுத்தியதாகக் கூறப்படுகிறது. டச் நாட்டுக்காரர்கள்தான் ஆப்ஷன்ஸ் டிரேடிங், ஷார்ட் செல்லிங் போன்ற பல விதமான இன்றைய டிரேடிங் முறைகளுக்கும், குறிப்பாக பங்குச் சந்தைக்கும் முன்னோடியாக இருந்தார்கள்.

இப்படி உருவான பங்குச் சந்தை, இன்று எல்லா நாடுகளுக்கும் பரவி, பங்குச் சந்தை இல்லாத நாடுகளே உலகத்தில் இல்லை என்று சொல்கிற அளவுக்கு வந்துவிட்டது. அது சரி, உலகத்தை பற்றியெல்லாம் பேசிவிட்டீர்கள், நமது நாட்டில் பங்குச் சந்தை எப்படி உருவானது என்று கேட்கிறீர்களா?


ஆசியா கண்டத்திலேயே மிகவும் பழமை வாய்ந்தது நமது பங்குச் சந்தைதான். 1850-களில் மும்பையில் தற்போதைய ஹார்னிமன் சர்க்கிள் இருக்கும் இடத்தில் இருந்த டவுன் ஹால் முன்பு இயற்கையின் வடி வாகிய ஆலமரத்தின் அடியில் ஆரம்ப மானதுதான் நமது பங்குச் சந்தை. அந்த மர நிழலில் கூடி தங்களது டிரேடிங்கை தொடங்கினார்கள் நமது புரோக்கர்கள். சில ஆண்டு கள் கழித்து இன்றைய மும்பை மகாத்மா காந்தி ரோட்டில் இருந்த ஆல மரங்களின் அடியில் தங்களது டிரேடிங் தளத்தை மாற்றினர். புரோக்கர்களின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக ஒவ்வொரு இடமாக மாற்றிக் கொண்டிருந்தனர்.


1874-ம் ஆண்டில் கடைசியாக ஒரு நிரந்தரமான இடத்தை அடைந்தனர். அதுதான் இன்றைய தலால் ஸ்ட்ரீட் (புரோக்கர் வீதி). தி ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச், மும்பை என்று அழைக்கப்பட்டு வந்த இந்த சந்தை 2002-ல், பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 2005-ல் கம்பெனியாக மாற்றப்பட்டது. 1994-ல் தேசிய பங்குச் சந்தை (என்.எஸ்.இ) வந்தது. இதையடுத்து இன்று இரு பெரும் பங்குச் சந்தைகள் இருக்கின்றன.


உலகத்திலேயே மிகவும் பெரிய பங்குச் சந்தை நியூயார்க் பங்குச் சந்தை தான். இரண்டாவது பெரிய பங்குச் சந்தையும் அமெரிக் காவில் தான் - நாஸ்டக் பங்குச்சந்தை ஆகும்.