Sunday, May 6, 2012

ஷேர் மார்க்கெட் - 18

ஃபண்டமென்டல் இதையும் பார்க்க வேண்டும்!
சென்ற வாரம் ஃபண்டமென்டல் அனாலிசிஸ்-ல் முக்கியமாகப் பார்க்க வேண்டிய குவாலிடேட்டிவ் அளவுகோல்கள் சிலவற்றைக் கண்டோம். இதே மாதிரியான வேறு சில அளவுகோல்களையும் இனி காண்போம்.

கஸ்டமர் சேவை:வாடிக்கையாளர் சேவை என்பது எந்த ஒரு நிறுவனத்துக்கும் மிக முக்கியமானது. இந்தியாவில் தனியார் துறை வங்கிகளின் வளர்ச்சி இந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறது என்றால் அதற்கு அடிப்படைக் காரணம், பொதுத்துறை வங்கிகள்தான். அந்த அளவிற்கு பொதுத்துறை வங்கிகளின் வாடிக்கையாளர் சேவை சிறப்பாக இருந்திருக்கிறது. அதேபோல் தனியார் துறையில் டெலிபோன் (செல்போன் உட்பட) நிறுவனங்கள் வளர் வதற்கு நமது பி.எஸ்.என்.எல்-தான் அடிப்படைக் காரணம். ஆனால் அதேசமயம் சில மத்திய மாநில அரசு நிறுவனங்கள் சேவை என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் நிலையில்தான் இருக்கின்றன.
ஒரு வங்கியில் கணக்கு ஆரம்பிக்க வேண்டுமென்றாலோ அல்லது ஒரு மொபைல் போன் சேவை பெற வேண்டு மென்றாலோ, எந்த நிறுவனம் சிறப்பாக சேவை புரிகிறதோ, அங்குதான் செல்வீர்கள். உங்களைப்போல் பலரும் அந்நிறுவனத்தை தேடிச் செல்லும்போது அந்நிறுவனத் தின் வியாபாரம் உயரும்; லாபம் பெருகும். அதனால் நீங்கள் வைத்திருக்கும் பங்கின் விலையும் உயரும்! வாடிக்கையாளர் சேவையில் கண்ணும் கருத்துமாக இருக்கும் நிறுவனங்கள் நீண்ட கால முதலீட்டிற்கு சிறப்பாகவே இருக்கும். ஆகவே, நீங்கள் வாங்கப் போகும் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை எவ்வாறு உள்ளது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
கஸ்டமரை நன்றாகக் கவனித்துக் கொள்ளக்கூடிய நிறுவனம், பங்குதாரர்களையும் நன்றாகக் கவனித்துக் கொள்ளும் என்பது உறுதி. தொழிற்துறையில் போட்டிகள் அதிகமாகிக் கொண்டிருக்கும் இத்தருணத்தில், வாடிக்கையாளர் சேவை நிச்சயமாக ஒரு நிறுவனத்தை மற்றொரு நிறுவனத்திலிருந்து பிரித்துக் காட்டும் என்பதில் சந்தேகம் எதுவும் இல்லை.
பங்குதாரர் சேவை:
நம்மில் பெரும்பாலோர் பல நிறுவனங்களில் மிகச் சிறிய முதலீட்டாளராக உள்ளோம். அவ்வாறு இருக்கும்போது நமது முதலீடு சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கான சேவை மிகவும் அத்தியாவசியமாக உள்ளது. இது சின்னச் சின்ன விஷயங்கள் முதல் பெரிய விஷயங்கள் வரை இருக்கலாம். பெயர் மாற்றம் செய்வது; உரிய நேரத்தில் டிவிடெண்ட் வராமல் இருப்பது; ரைட்ஸ், போனஸ் போன்றவைகளை பெறுவதில் தாமதம் ஏற்படுவது போன்ற பல பிரச்னைகளை முடித்துத் தருவதில் நிறுவனம் துரிதமாகச் செயல்பட வேண்டும். இவையெல்லாம் சின்னச் சின்ன பிரச்னைகள். பெரிய நிறுவனப் பங்குகளை வைத்துள்ள வர்களுக்கு இதுபோன்ற பிரச்னைகள் பெரும்பாலும் இருக்காது. ஆனால் இதைவிட பெரிய பிரச்னை என்னவென்றால், நியாயமாக நடந்து கொள்வது. இன்று பல புரமோட்டர்கள் இன்வெஸ்ட்மென்ட் பேங்கர்ஸ்/ஆடிட்டர்ஸ் உதவியுடன் தங்களது பங்கு சதவிகிதத்தை நிறுவனத்தில் அநியாயமாக (சிறிய முதலீட்டாளர்களுக்கு பாதகம் விளைவிக்கும் வகையில்) ஏற்றிக் கொள்கிறார்கள். வாரண்ட் வெளியிட்டுக் கொள்வதன் மூலம், பங்கு விலையை சந்தையில் ஏற இறங்கச் செய்வதன் மூலம், தங்களைச் சார்ந்த வேறு ஒரு நிறுவனத்துடன் குறைந்த விலையில் இணைப்பதன் மூலம் என பல வகைகளில் இதைச் செய்து முடிக்கிறார்கள். இவ்வாறெல்லாம் தில்லுமுல்லு செய்யாத, நல்ல வரலாறு உள்ள நிறுவனங்களில் உங்களது முதலீட்டை மேற்கொள்ளுங்கள். பங்குதாரரை உண்மையான பங்குதாரராக நினைத்து, நடத்தும் நிறுவனமாக அது இருக்க வேண்டும்.

பிராண்ட் வேல்யூ:
ஒரு கம்பெனிக்கு பிராண்ட் வேல்யூ முக்கியம். டாடாவின் பெயர் இன்று உலகத்தில் உள்ள அனைவருக்கும் பிரசித்தம். பிரிட்டனில் லேண்ட் ரோவர் மற்றும் ஜாகுவார் என்ற கார் கம்பெனிகள் உள்ளன. சில ஆண்டுகள் முன்பு அந்த நிறுவனங்கள் விற்பனைக்கு வந்தன. அப்போது பல நாட்டு நிறுவனங்களும் அந்த கார் கம்பெனிகளை வாங்க வந்தன. ஆனால், அங்குள்ள தொழிலாளர்கள் யூனியன் ஒப்புக்கொண்டது டாடாவை மட்டும்தான். முடிவில் டாடா நிறுவனம்தான் அந்நிறுவனங் களை வாங்கியது. ஒரு நிறுவனத்தின் பிராண்ட் வேல்யூ எவ்வாறெல்லாம் உதவியாக இருக்கிறது என்று பாருங்கள்!
பிஸ்கெட் என்றால் நம்மில் பலருக்கும் ஞாபகம் வருவது பிரிட்டானியாதான். அதேபோல் கார் என்றவுடன் நம்மில் பலர் நினைப்பது மாருதியைத்தான். பேங்க் என்றவுடன் எஸ்.பி.ஐ; இன்ஷூரன்ஸ் என்றவுடன் எல்.ஐ.சி. இவை அனைத்திற்கும் ஒரே பொதுவான விஷயம், பிராண்ட் வேல்யூதான். அரசாங்கம் மற்றும் பொதுமக்க ளிடம் நல்ல பிராண்ட் வேல்யூ இருந்தால் அது பல வகைகளில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உதவி செய்யும். பிராண்ட் வேல்யூ நன்றாக இருந்தால், வியாபாரம் பெருகும்; தொழில் விரிவாக்கம் சுலபமாக இருக்கும்; வேலை செய்ய விண்ணப்பதாரர்கள் அதிகமாகக் கிடைப்பார்கள்; அந்நிறுவனப் பங்குகளுக்கு சந்தையில் அதிக டிமாண்ட் இருக்கும் என அடுக்கிக் கொண்டே செல்லலாம். ஆக, மொத்தத்தில் நீங்கள் வாங்கப் போகும் பங்கிற்கு நல்ல பிராண்ட் வேல்யூ இருக்கிறதா என்று பார்ப்பது அவசியம்!
எதிர்காலத் திட்டங்கள்:
ஒரு நிறுவனத்திற்கு கடந்த காலம் மற்றும் நிகழ்காலம் எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் அதன் எதிர்காலம். நிறுவனங்களின் மேனேஜ்மென்ட் ஆண்டறிக்கையில் நிறுவனங் களின் எதிர்காலத் திட்டங்கள் பற்றித் தெரிவிக்கப்பட்டிருக்கும். மேலும், அவ்வப்போது பத்திரிகைகளிலும் இதுகுறித்த செய்திகள் வெளிவரும். இதன் மூலம் அந்நிறுவனங்களின் எதிர்காலத் திட்டம் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
மிக வேகமான வளர்ச்சிக்கு எதிர்காலங்களில் அந்நிறுவனம் திட்டமிடுகிறது என்றால், அந்நிறுவனத்தின் ரிஸ்க்கும் அதிகரிக்கும். அதேபோல் கடன் அதிகம் வாங்காமல், லாபத்தை வைத்தே தனது பிஸினஸை விஸ்தரிக்கும் நிறுவனம் என்றால், ரிஸ்க் வெகுவாகக் குறைந்துவிடும். மேலும், ஐ.டி துறையில் முன்னணியாக இருக்கும் நிறுவனம் திடீரென்று ரியல் எஸ்டேட்டில் வேகமாக நுழையப் போகிறது என்றால், சற்று யோசிக்க வேண்டும். அதேபோல் எதிர்காலத்தில் நிறுவனப் பங்குகளை, ஃபாலோ ஆன் ஆஃபர் மூலம், தொழில் விஸ்தரிப்பிற்காக இரட்டிப்பாக்கப் போகிறது என்றால், அதுவும் யோசிக்க வேண்டிய விஷயமே. இதைப் போல் பலப்பல விஷயங்களைத் தெரிந்து நுழைவது சிறந்தது.

வேலை செய்பவர்களின் தரம்:
ஒரு நிறுவனத்தின் தரத்தை அங்கு வேலை செய்பவர்களை வைத்து மதிப்பிடலாம். தரமான ஊழியர்களைக் கொண்ட நிறுவனம் எப்போதும் தழைத்து நிற்கும். அவர்கள் கொண்டுவரும் புதிய ஐடியாக்கள் மூலம் நிறுவனமும் இளமையாக இருக்கும். அவ்வாறு தரமான ஊழியர்கள் கிடைப்பதற்கும், அவர்களைத் தக்க வைத்துக் கொள்வதற்கும் மதிப்புடன் நடத்த வேண்டும்; நல்ல சம்பளம் கொடுக்க வேண்டும்; அவர்களும் அதனால் நிறுவனமும் வளர்வதற்கு வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.
முப்பது, நாற்பது வருடங்களுக்கு முன்பே டாடா குழுமத்தினர் தங்கள் ஊழியர்கள் குளிர்சாதனப் பெட்டிகள், வாகனங்கள் போன்ற அனைத்து வசதியோடும் வாழ வேண்டும் என்று நினைத்து, அதற்குத் தேவையான வசதி வாய்ப்புகளையும் செய்து கொடுத்தனர். ஆகவே, நீங்கள் வாங்கப் போகும் நிறுவனம் தரமான ஊழியர்களைக் கொண்டுள்ளதா என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.
இனிவரும் வாரங்களில் குவாண்டிடேடிவ் அனாலிசிஸ் என்று சொல்லக்கூடிய நிறுவனங் களை மதிப்பிட உதவும் விகிதங்கள் மற்றும் எண்களை பற்றிக் காண்போம்.

 நன்றி: நாணயம் விகடன்

0 comments:

Post a Comment