Sunday, May 6, 2012

ஷேர் மார்க்கெட் - 16

சென்ற வாரம் ஃபண்டமென்டல் அனாலிசிஸ்-ல் முக்கியமாகப் பார்க்க வேண்டிய சில அளவுகோல்களாகிய பொருளாதாரம் மற்றும் துறைகளின் வாய்ப்புக்கள் பற்றி கண்டோம். இதுபோல் ஒரு சிறந்த பங்கைத் தேர்வு செய்வதற்கு இன்னும் பல அளவுகோல்கள் உள்ளன. அவற்றுள் முக்கியமானது, மேனேஜ்மென்ட் அல்லது நிர்வாகத்தின் தரம். அதைப் பற்றி பார்க்கலாம்....நிர்வாகத்தின் தரம்:
பொருளாதாரம் மற்றும் துறைகளை அலசிய பிறகு, ஒரு பங்கை வாங்குவதற்குத் தேவைப்படும் முக்கியமான அம்சம், நிர்வாகத்தின் நம்பகத்தன்மை, திறமை மற்றும் நியாயமான நடத்தை. ஒரு நாட்டிற்கு அரசாங்கம் எவ்வளவு முக்கியமோ, ஒரு வீட்டிற்கு தலைவர் எவ்வளவு முக்கியமோ, ஒரு வகுப்புக்கு ஆசிரியர் எவ்வளவு முக்கியமோ, அந்த அளவுக்கு ஒரு நிறுவனத்துக்கு அதன் நிர்வாகம் முக்கியம்.
சரி, நிர்வாகம் என்று யாரைக் கூறுகிறோம்? சுருக்கமாகச் சொல்லப் போனால், ஒரு நிறுவனத்தை வழிநடத்திச் செல்லும் முக்கிய அணிதான் நிர்வாகம். குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், புரமோட்டர், சேர்மன், போர்டு ஆஃப் டைரக்டர்ஸ், சி.இ.ஓ. அல்லது மேனேஜிங் டைரக்டர் மற்றும் முக்கிய பொறுப்பு வகிப்பவர்களைக் கூறலாம்.
தரமான நிர்வாகம் தங்களுக்கென்று சில நல்ல கொள்கைகளை விடாப்பிடியாக வைத்திருப்பார்கள். அவற்றுள் முக்கியமானவை: உன்னதமான வாடிக்கையாளர் சேவை, வரி ஏய்ப்பு செய்யாமல் இருத்தல், தயாரிக்கும் பொருட்களின் தரத்திற்கு முதலிடம், தலையே போனாலும் லஞ்சம் கொடுக்காமல் இருத்தல், சட்டத்திற்கு மேல் ஒருபடி சென்று நியாயத்திற்கு முதலிடம் கொடுத்தல், ஊழியர்களின் நலன் கருதுதல், தங்களுக்கென்று அநியாயமான சம்பளம் எடுத்துக் கொள்ளாமல் இருத்தல் என்று அடுக்கிக் கொண்டே செல்லலாம்.


நிர்வாகத்தின் தரம் என்ற ஓர் அளவுகோலை அப்ளை செய்தாலே போதும் - இந்தியாவில் பல நிறுவனங்களை ஒதுக்கிவிடுவீர்கள் என்பது உறுதி. அந்த அளவிற்கு நிர்வாகத்தின் தரத்திற்கு நம் நாட்டில் பஞ்சம் உள்ளது. ரியல் எஸ்டேட் போன்ற துறைகளில் முதலீட்டாளர்கள் நுழையாமல் இருப்பதற்கு இதுவே முதல் காரணம். டாடா குழும நிறுவனங்கள், ஹெச்.டி.எஃப்.சி.குழுமம், இன்போஃஸிஸ், மஹிந்திரா அன்ட் மஹிந்திரா மற்றும் பல பொதுத்துறை நிறுவனங்கள் தலை நிமிர்ந்து நிற்பதற்கு காரணம் அவைகள் மக்களிடத்தில் பெற்றுள்ள அசராத நம்பிக்கைதான்! டாடா போன்ற நிறுவனங்கள் லஞ்சம் கொடுக்காமல் இருப்பதற்காக சில துறை களில் நுழையாமல் போனதும் உண்டு. ஏன் நமது தென்தமிழ் நாட்டில் டாடா குழுமம் ஒரு தொழிற்சாலையை ஆரம்பிக் காமல் போனார்கள். காரணம் அநியாயமான ரியல் எஸ்டேட் விலை. ஹெச்.டி.எஃப்.சி குழு மத்தின் பங்குகள் சந்தையில் எப்போதும் அதிக விலையில் விற்பதற்கு ஒரு காரணம் - அந்த நிர்வாகத்தின் தரம் மற்றும் வெளிப்படைத்தன்மை.
பங்குகளைத் தேர்வு செய்யும் போது நாம் ஏன் நிர்வாகத்திற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? அரசாங்கம் சரியில்லாவிடில் அந்த நாட்டு மக்கள் மட்டுமல்லாது பக்கத்து நாட்டு மக்களும் அவதிப்படுவார்கள். அதே போலத்தான் நிர்வாக விஷயமும். நிர்வாகத்தின் ஒரு சிறிய தவறான அணுகுமுறையினால், முதலீட்டாளர்கள் தங்களுடைய முதலீடு முழுவதையும்கூட இழக்கக்கூடும். பின்னணி தெரியாத அல்லது நம்பகத்தன்மை இல்லாத புரமோட்டர்கள், நிர்வாகத்தினர்களால் இந்திய முதலீட்டாளர்கள் இதுவரை இழந்துள்ளது எத்தனையோ கோடி!

'தி இன்டெலிஜென்ட் இன்வெஸ்டார்’ புத்தகத்தில் பெஞ்சமின் கிரஹாம் முதலீடு என்பதை இவ்வாறு விவரிக்கிறார்: 'முதலீடு என்பது அசலைப் பாதுகாக்கக்கூடியதாகவும் போதுமான அளவு வருமானத் தைத் தரக்கூடியதாகவும் இருக்க வேண்டும். இந்த வரையறைக்குள் வராதவை சூதாட்டம் ஆகும்.'
நமது முதலீடு (அசல்) எப்போது பாதுகாப்பாக இருக்கும்? அதற்கு முக்கிய காரணி எது என்று அலசினால், சந்தேகம் இல்லாமல் கிடைக்கும் விடை, தரமான  நிர்வாகம் என்பதே.
'தரமான நிர்வாகம் என்று சொல்கிறீர்களே? நானோ ஒரு சிறிய முதலீட்டாளர். நான் எவ்வாறு ஒரு நிறுவனத்தின் நிர்வாகம் தரமானதா அல்லது தரமற்றதா என்று கண்டுபிடிக்க முடியும்?’ என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம்.
உதாரணத்துக்கு நீங்கள் ஒரு தமிழர். தமிழ்நாட்டில் பல காலம் வசித்துள்ளீர்கள். உங்களது அப்பா அல்லது அம்மா நீண்ட காலமாக சுந்தரம் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் பணத்தை டெபாசிட் செய்து மாதாமாதம் வட்டி பெற்றுக் கொண்டிருந்ததும், அந்த வட்டி அந்த நிறுவனம் சொன்னது போல் மாதம்தோறும் தவறாமல் உரிய தேதியில் உங்களது பெற்றோருக்குக் கிடைத்ததும் உங்களுக்குத் தெரியும். அவர்களின் கஸ்டமர் சேவை உன்னதம் என்பதும்  உங்களுக்குத் தெரியும். மேலும் பல நிதி நிறுவனங்கள் தமிழ்நாட்டிலும் பிற மாநிலங்களிலும் மோசடி செய்து டெபாசிட் தாரர்கள் தங்களது அசலை இழந்தபோதும், சுந்தரம் ஃபைனான்ஸ் டெபாசிட்தாரர்கள் தங்களது பணத்தை ஒருபோதும் இழக்கவில்லை என்பதும் உங்களுக்குத் தெரியும்.
பொதுவாக பங்குச் சந்தையில் தரமான நிர்வாகம் கொண்ட நிறுவனங்களின் பங்குகளின் விலை அதன் போட்டி நிறுவனப் பங்குடன் ஒப்பிடுகையில் அதிக பிரீமியத்திலேயே விற்பனை யாகும். அதாவது, அதிக விலையில் விற்பனையாகும்!

ஒரு நிர்வாகத்தின் தரத்தை ஆராய்வதற்கு குறைந்தபட்ச ஃபில்டர்களாக கீழே கொடுக்கப் பட்டுள்ள புள்ளிகளை எடுத்துக் கொள்ளலாம்:
1. நிறுவனம் மற்றும் அதன் நிர்வாக டீம் எவ்வளவு நாட்களாக அத்தொழிலில் உள்ளார்கள்? 20 - 25 வருடங்களா? அல்லது அதற்கும் மேலா? அதிக காலம் இருப்பது நல்லது!
2. டெபாசிட்தாரர்களை, பாண்ட் வைத்திருப்பவர்களை, பங்குதாரர்களை அந்நிறுவனம் இதுவரை ஏமாற்றியுள்ளதா?
3. புரமோட்டர்கள் அல்லது நிர்வாகம் லஞ்ச, ஊழலில் இதுவரை ஈடுபட்டுள்ளதாக ஏதே னும் செய்திகள் வந்துள்ளதா?
4.நிறுவனமோ, புரமோட்டர்களோ, மேனேஜ்மென்ட்டோ அரசாங்கத்திடமோ, அதன் சார்பு நிறுவனங்களிடமோ அல்லது பொதுமக் களிடமோ சர்ச்சைக்கு ஆளாகி இருக்கிறதா?
5.   தங்களுடைய பங்குகளை சில ஸ்பெக்குலேட்டர்கள் மூலம் வாங்கி விற்பது (பங்கு விலையில் ஏற்ற இறக்கத்தை உண்டு பண்ணுவதற்காக) போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் களா?
6. சட்டத்தை முற்றிலுமாக மதித்து அதற்கு மேலும் நியாயத் துடன் செயல்படும் நிர்வாகமா?
7. தங்களுடைய ஊழியர் களை மதித்து அவர்கள் விசுவாசத்துடன் இருக்க போதிய வசதி வாய்ப்புக்களை செய்து கொடுத்திருக்கிறதா?
8. வாடிக்கையாளர்களை சொத்தாக நினைத்து சேவை புரியும் நிர்வாகமா?
9. செய்யும் தொழிலை தெய்வமாக நினைத்து அதைத் திறம்பட செய்யும் நிர்வாகமா?
10. நிர்வாகம் சொல்வதும் செய்வதும் ஒன்றாக இருக்கிறதா?
11. பங்குதாரர்களுக்கு சேவை மற்றும் பலன் நன்றாக உள்ளதா?
இது போல் எத்தனையோ ஃபில்டர்களை வைத்து நீங்களும் மேனேஜ்மென்டின் தரத்தை ஆராயலாம். இது ஒரு முடிவல்ல. ஆரம்பமே... நீங்கள் முக்கியமாக கருதும் வேறு சில விஷயங்களையும் இந்தப் பட்டியலில் சேர்த்துக் கொள்ளவும். மொத்தத்தில் பங்கில் முதலீடு செய்யுமுன் அந்த நிர்வாகத்தின் தரத்திற்கு உங்களது தராசு அதிகமாகச் சாயட்டும்.

 நன்றி: நாணயம் விகடன்

0 comments:

Post a Comment